"நரேந்திர மோதி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை": காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் - தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

  • எம்.ஏ. பரணிதரன்
  • பிபிசி தமிழ்
'காமராஜ் ஆட்சியை காங்கிரஸ் மறந்து விட்டதா?' - மாணிக்கம் தாகூர் பேட்டி

எடப்பாடி பழனிசாமி ஆட்சி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஏழு பேரை வைத்து நடக்கும் விடுதலை அரசியல், ஜி.கே. வாசன், நிரந்தர தலைமை இல்லாத காங்கிரஸ், மாமனாருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க "லாபி" நடந்ததா என பல விவகாரங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் மாணிக்கம் தாகூர். அவரது நேர்காணலில் இருந்து.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒரு சட்டமன்ற தேர்தலை அரசியல் கட்சிகள் எதிர்கொள்கின்றன. இது எந்த அளவுக்கு காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும்?

மிகப்பெரிய இரண்டு ஆளுமைகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இது மிக, மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் மதவாத அரசியலுக்கு இடம் தருவதா வேண்டாமா என்பது மிக முக்கியமானது. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி, எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோ அது போல வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக நடக்கவில்லை, தகுதியற்றவர்களுக்கு சீட் தருகிறார்கள் என பொதுதளங்களில் நீங்களும், ஜோதிமணி போன்றவர்களும் குற்றம்சாட்டியது ஏன்?

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, தமிழக சட்டமன்ற தேர்தலின்போது எப்போதுமே 40க்கும் குறைவான இடங்களில் போட்டியிட்டதில்லை. ஆனால், இம்முறை பல ஆண்டுகளுக்குப் பிறகு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய மூன்று கட்ட தேர்வு நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு மாநில பொறுப்பாளரிடம் பட்டியலை தந்தது. அதன் பிறகு திக்விஜய் சிங் தலைமையிலான தேர்வுக்குழுவை தனித்தனியாக சந்தித்துப் பேசினோம். தனிப்பட்ட முறையில் இதில் எந்த தவறும் நடக்கவில்லை என நான் கருதுகிறேன்.

ஆனால், சிலர் அவசரப்பட்டு தேர்வு நடைமுறைகளை வெளியே பேசினார்கள். சோனியா காந்தி தலைமையிலான குழுவே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது. அதில் நான்கு இடங்களுக்கு பிரச்னை நிலவியதால் முதலில் 21 பேர் பட்டியலும் பின்னர் நான்கு பேர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

உங்களுடைய மாமனாருக்கு நீங்கள் லாபி செய்து சீட் வாங்கித் தந்ததாக உங்கள் மீதும் புகார் கூறப்படுகிறதே..

பட மூலாதாரம், Manickam tagore twitter

எனது மாமனார் ரவிச்சந்திரன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர். 1986-இலேயே காங்கிரஸ் ஊராட்சி தலைவராக அவர் இருந்தார். மூப்பனாரால் வட்டார காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர். பிறகு மாவட்ட காங்கிரஸிலும், திருநாவுக்கரசரால் மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டார். எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு என்பது 2004ல்தான் ஏற்பட்டது.

அவரது சார்பில் மதுரை வடக்கு தொகுதி கேட்கப்பட்டது. ஆனால், மேலூர் தொகுதியே கிடைத்தது. அதற்கான பரிந்துரையை மாவட்ட தலைமை மற்றும் நிர்வாகிகள்தான் செய்தனர். என்னுடைய மாமானாராக இருப்பதால் மட்டுமே அவருக்கு சீட் கிடைத்ததாக கூறுவது தவறு. இது சோனியா காந்தி அளவில் விவாதிக்கப்பட்டு வழங்கப்பட்ட தொகுதி. அமெரிக்காவில் படித்து விட்டு திடீரென காங்கிரஸுக்கு வந்து சீட் வாங்கியது போல இது கிடையாது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இம்முறை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பரப்புரைக்கு வந்து போகிறாரே. இது ஒருவேளை வலுவிழந்த கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியா?

காங்கிரஸ் பலமான கட்சியாக தமிழ்நாட்டில் இருந்தால்தான் அது அகில இந்திய அளவில் டெல்லிக்கும் தமிழகத்துக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும். ராகுலின் வருகை, தமிழ்நாட்டில் மத சார்பற்ற கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவை சேர்க்கிறது. அதற்கு காரணம், கடந்த தேர்தலிலேயே அவர் பிரதமர் வேட்பாளராக அடையாளம் காணப்பட்டார். அவர் எப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ அது தமிழ்நாட்டில் மதவாத கட்சி வேரூன்றுவதற்கு எதிரான எங்களுடைய செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை 25 தொகுதிகளுக்கு கூட்டணி தலைமையிடம் சமரசம் ஆகியிருக்கிறது. இது ஒருவேளை காங்கிரஸ் கட்சி தான் பலவீனமாக இருப்பதை கூட்டணி தலைமையிடம் ஒப்புக் கொண்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

2011 மற்றும் 2016 தேர்தல்களில் நாங்கள் பெற்ற இடங்களும் அடைந்த வெற்றியும் குறைந்தன. அதிக சீட்டுகளை காங்கிரஸ் வாங்கும். ஆனால், வெற்றி பெறாது என்ற பேச்சு அதன் பிறகு வலுத்தது. எனவேதான் இம்முறை வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களை பெற்று, மிக கவனமாக வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறோம்.

அறுபதுகளின் கடைசி பகுதிக்குப் பிறகு திமுக அல்லது அதிமுக தோள் மீது சவாரி செய்தே தமிழக சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வருகிறது. அப்படியென்றால் உங்கள் கட்சியினர் முன்பு முழங்கிய காமராஜ் ஆட்சி குரல் எல்லாம் என்னவானது? அந்த நினைவுகளை எல்லாம் அழித்து விட்டீர்களா?

நான் காமராஜ் ஆட்சியை பார்த்ததில்லை. அப்போது நான் பிறக்கவில்லை. ஆனால், என்னைப் போன்ற காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் காமராஜ் ஆட்சி அமைய வேண்டும் என்பது நீங்காத ஆசை. அது இன்றில்லாமல் போகலாம். ஆனால், நாளையோ, நாளை மறுநாளோ நிச்சயம் நடக்கும்.

ஆனால் மாநில அரசியல் என வரும்போது, குறிப்பாக, காமராஜ் காலத்துக்குப் பிறகு மூப்பனார் மக்கள் தலைவராக அறியப்பட்டார். அதன் பிறகு உங்களுடைய கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற பொதுவான தலைவரை அடையாளம் காண முடியவில்லையே... பிறகு எப்படி காமராஜ் ஆட்சி கனவெல்லாம் நனவாகும்?

நான் மாணவனாக இருந்தபோது, மூப்பனாரை முன்னிறுத்தி அத்தகைய முயற்சியை ராஜிவ் காந்தி செய்தார். அதன் பிறகு அத்தகைய முயற்சி நடக்கவில்லை. வரும் காலத்தில் அதற்கான சூழல், மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவர் அடையாளம் காணப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோதும் மத்திய அமைச்சராக இருந்தபோதும், காங்கிரஸ் தலைமையை அணுக முடியாத சூழல் தனக்கே நிலவுவதாக அதிருப்தி தெரிவித்துதானே காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி கண்டு இப்போது பாஜக, அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறார். இதில் எங்கோ பிரச்னை உள்ளது என்பதை நீங்கள் உணரவில்லையா?

ஜி.கே. மூப்பனார் உண்மையிலேயே காங்கிரஸ் பற்றாளர், மக்கள் தலைவர். இந்திரா காந்தி காலம் முதல் கட்சியிலே இருந்தவர். எந்த நிலையிலும் கட்சியை காட்டிக்கொடுக்காதவர். அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் நிலை வந்தபோது, கொண்ட கொள்கைக்காக கட்சியை விட்டு வெளியேறியவர்.

ஆனால், அவரது மகன் வாசன் மக்கள் தலைவர் இல்லை. "மூப்பனாரின் மகன்" என்ற ஒரே தகுதியோடு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு மாநிலங்களவை உறுப்பினரானார். அவர் தேர்தலையே சந்தித்தது இல்லை. அவரது அதிகபட்ச ஆசையே மாநிலங்களவை உறுப்பினராவதுதான். பதவி ஆசைக்காகவே அவர் கட்சியை காட்டிக்கொடுத்து பாரதிய ஜனதா அணியில் சேர்ந்திருக்கிறார். தந்தையைப் போல கொள்கைப்பிடிப்பு உள்ளவராக இருந்திருந்தால், நிச்சயமாக அவர் அந்த அணியில் சேர்ந்திருக்க மாட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் புதல்வர்களான ராகுல், பிரியங்கா ஆகியோரே கைதிகளை மன்னித்து விட்டோம் என்று கூறிய நிலையில், அவர்களின் விடுதலையை காங்கிரஸார் வலியுறுத்துவதில்லையே... இது பற்றி சில தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேசி வந்தாலும், காங்கிரஸ் ஒதுங்கியே இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. அதன் தலைவர்களுக்கு தனிப்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் இதை உணர்வுப்பூர்வமாக பார்க்கிறார்கள். தமிழ் மண்ணில் மிகக்கொடூரமாக கொல்லப்பட்ட தலைவரின் வழக்கில், ஏழு பேருக்கும் உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டனை உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. பேட்டரி வாங்கினார்களோ எதை செய்தார்களோ அவர்களும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்.

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் அதிமுகவினரும் இதேபோலத்தான் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பரிதாபப்பட்டோ அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றோ கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் புகார்களை பரப்புரையின்போது தெரிவிக்கிறீர்கள். அவற்றுக்கு எல்லாம் ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருந்தால், ஏன் நீதிமன்றத்தை நாடாமல் தேர்தல் பிரசாரத்தில் அதை பேசுகிறீர்கள்? குறைந்தபட்சம் ஆதாரமுள்ள மூன்று புகார்களை உங்களால் தெரிவிக்க முடியுமா?

மூன்று குற்றச்சாட்டுகள் அல்ல. நூறு குற்றச்சாட்டுகளை சொல்ல முடியும். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, எந்த விதத்திலும் மத்திய அரசுக்கு தலைவணங்காத அரசாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி அரசு, கூனிக்குறுகி மத்திய அரசு சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறது. அது மின்சார கட்டணமோ, ஜிஎஸ்டியோ, நீட் பிரச்னையோ, எதுவாக இருந்தாலும், மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது எடப்பாடி அரசு.

கரப்ஷனும், கலெக்ஷனும்தான் எடப்பாடி அரசில் தலைவிரித்தாடுகிறது. கல்லா கட்டும் வேலையை தான் அமைச்சர்கள் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. மூன்றாவதாக, எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்போடு வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் மாநிலத்தில் மதவாதத்தை பரப்ப உறுதுணையாக இருக்கிறார்கள். பெரியார் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை அவமதிப்பு போன்றவை எல்லாம் மிக நேர்த்தியான வலதுசாரி செயல்பாடுகள்.

ஆளும் அரசின் ஊழல் புகார்கள் குறித்து மாநில ஆளுநரிடம் திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் வெவ்வேறு காலங்களில் பேரணியாக சென்று மனு கொடுத்தோம். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை மீறி நீதிமன்றத்தில் எதும் நடக்கப்போவதில்லை. எனவேதான் மக்கள் மன்றத்தில் இதை பேசுகிறோம்.

நிரந்தர தலைவரே இல்லாமல் காங்கிரஸ் கட்சி இயங்குகிறது. இன்னும் முறையான அமைப்பு ரீதியான தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளுக்குள்ளேயே இவ்வளவு பிரச்னை வைத்திருக்கும்போது, எவ்வாறு தேசிய, மாநில அரசியல் மற்றும் தேர்தல் களங்களை காங்கிரஸ் கட்சியால் சந்திக்க முடியும்? எப்போதுமே நேரு குடும்பத்தைதானே தலைமைக்கு வர கோருகிறீர்கள். இவ்வளவு பெரிய கட்சியில் இவர்களை விட்டால் வேறு ஒரு பெரிய தலைவரை உங்களால் அடையாளம் காண முடியாதா...

எங்களுடைய தலைமை என்பது சோனியா, ராகுல், பிரியங்காதான். 2019இல் தார்மிக பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் முன்பு ராஜிவ் மறைவுக்கு பிறகு சோனியா தலைமைக்கு வராததால் நரசிம்மராவ் தலைவரானார்.

ஆனால், அப்போது நடந்த தேர்தலில் கட்சி மிகப்பெரிய தோல்வியை கண்டது. அதற்கு முந்தைய வரலாறில் சீதாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தபோதும் மிகப்பெரிய தோல்வியை கட்சி சந்தித்தது. சோனியா, ராகுல் தலைமையை நாங்கள் கோரக்காரணம், அந்தக் குடும்பம் செய்த மிகப்பெரிய தியாகங்கள்.

அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை நாடு இழந்திருக்கிறது. அந்த குடும்பத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக யாரும் அமைச்சராகவோ பிரதமராகவோ பதவி வகித்ததில்லை. எம்.பியாக அவர்கள் மக்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் வேறு தலைவரை அவர்கள் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. வரும் ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது ராகுல் தலைவராக நாங்கள் குரல் கொடுப்போம். அதற்கு அவர் மதிப்பு கொடுப்பார் என நம்புகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் விவகாரம், நீட் போன்ற பல பிரச்னைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. அதை நாங்கள் செயல்படுத்த மட்டுமே செய்கிறோம் என ஆளும் கட்சியினர் கூறுகிறார்களே... அது பற்றிய உங்கள் பார்வை...

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. திணிப்பு என்பது வேறு. கருத்தொற்றுமை ஏற்படுத்தி அமல்படுத்துவது என்பது வேறு. ஜிஎஸ்டி, நீட், விவசாயிகள் வேளாண் சட்டங்கள் என அனைத்து விவகாரங்கள் மீதும் மாநில அரசுகளின் கருத்துகளை காங்கிரஸ் வரவேற்றது. ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், எனக்கு எல்லாம் தெரியும். மக்களுக்கு எதுவும் தெரியாது எனக் கருதியவாறு இந்தி திணிப்பு, திட்டங்கள் திணிப்பு என தன்னிச்சையாக செயல்படுகிறார்கள்.

அந்த அகங்காரம் பாஜக, ஆர்எஸ்எஸ் உணர்வால் அவர்களுக்கு வருகிறது. பஞ்சாப் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த மாற்றத்தை அரசு திணிக்க முற்படுவதுதான் பிரச்னை.

மக்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இன்றைக்கும் அந்த கட்சி தலைமையிலான அணிதானே பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அது மக்கள் அந்த அணியை ஏற்றுக் கொள்வதாகத்தானே பார்க்க முடியும்...?

அப்படியில்லை. டெல்லி, பிகார், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், கோவா என தொடர்ந்து அக்கட்சி தோல்வி அடைந்தது.

கர்நாடகாவில் அந்த கட்சி ஆட்சி அமைத்த விதம் எல்லோருக்கும் தெரியும். அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் இப்படித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்கிறார்கள். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுகிறார்கள்.

கமல்ஹாசன் வழிநடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி சில கட்சிகளை சேர்த்துக் கொண்டுதேர்தல் களம் காண்கிறது. அந்த கட்சியின் தேர்தல் பிரவேசம் திமுக அணி வாக்குகளை பிரிக்குமா அல்லது அதிமுக அணியை பாதிக்குமா? அவரது அரசியல் பிரவேசத்தை எப்படி பார்க்கிறீர்கள்...

கமல்ஹாசன் நல்ல நடிகர். நடிப்புத்துறையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்தவர். அவர் அரசியல் கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினர்களை களமிறக்கினார். இப்போது சட்டமன்றத்திலும் அவரது கட்சி போட்டியிடுகிறது.

அதற்கெல்லாம் துணிச்சல் வேண்டும். அதற்காக கமலை வாழ்த்துகிறேன். வரவேற்கிறேன். நாங்கள் மதசார்பற்ற அணியில் இருக்கிறோம். யார், யாருடைய வாக்குகளை பிரிப்பார்கள் என ஆரூடம் கூற என்னால் முடியாது. வாக்காளர்கள்தான் அதை தீர்மானிப்பார்கள்.

இந்த நேர்காணலின் காணொளியை பார்க்க கீழே கிளிக் செய்யவும்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: