'பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற' நபரின் ஆண்குறியை வெட்டிய மத்தியப் பிரதேச பெண்

'பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற' நபரின் ஆண்குறியை வெட்டிய பெண்
படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்படும் நபரின் ஆணுறுப்பை அந்தப் பெண் வெட்டி விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

வியாழக்கிழமை பின்னிரவில் நடந்த இந்த நிகழ்வு குறித்த தகவல்களை சனிக்கிழமை மதியம் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தின் உமாரிகா எனும் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.

சில சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்ற தமது கணவர், வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது என்று 45 வயதாகும் அந்த பெண் பதிவு செய்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குற்றம் சாட்டப்பட்டுள்ள 45 வயது நபர் அந்த வீட்டில் நுழைந்த போது தனது 13 வயது மகனுடன் அந்தப் பெண் இருந்தார். அப்போது வீட்டுக்குள் திருடன் நுழைந்து விட்டதாக அச்சப்பட்ட அவரது மகன் வீட்டை விட்டு பாதுகாப்பு கருதி வெளியே ஓடிவிட்டான்," என்று கட்டி காவல் சாவடியின் பொறுப்பாளரான உதவி ஆய்வாளர் தர்மேந்திர சிங் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்படும் நபர் வீட்டுக்குள் நுழைந்த பின்பு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் 20 நிமிடங்களுக்கும் மேலாக அந்தப் பெண் எதிர்த்துப் போராடி உள்ளார் என்று தர்மேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் கட்டிலுக்கு அடியில் இருந்த அரிவாள் ஒன்றை எடுத்து, அந்தப் பெண் தம்மைத் தாக்கிய நபரின் ஆண் உறுப்பை வெட்டி விட்டார் என்கிறார் தர்மேந்திர சிங்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

அதன் பின்பு அந்தப் பெண் காவல் சாவடிக்கு வந்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு புகார் அளித்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு முதலுதவி அளிப்பதற்காக காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தர்மேந்திர சிங் கூறுகிறார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் சித்தி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ரேவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, பெண் ஒருவரின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கில் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட அந்த ஆணும் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் அளித்துள்ளார் என்கிறது காவல்துறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: