சசிகலா தஞ்சை பயணத்தில் என்ன நடந்தது: "சொத்தும் வேண்டாம், சென்டிமெண்ட் வீடும் வேண்டாம்"

  • ஆ.விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
வி கே சசிகலா

பட மூலாதாரம், AFP

தஞ்சாவூருக்கு 3 நாள் பயணமாக சென்ற ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, இரண்டு நாள்களிலேயே பயணத்தை முடித்துவிட்டு கடந்த 19 ஆம் தேதியன்று சென்னைக்குக் கிளம்பிவிட்டார். சசிகலாவின் தஞ்சை பயணத்தில் என்ன நடந்தது?

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே, தமிழக அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை சசிகலா கவனித்து வருகிறார். இந்தச் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பார்வையாளராக மட்டுமே இருப்பதாக அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர். அண்மையில் தி.நகரில் உள்ள தனக்கு வேண்டிய மன்னார்குடி அர்ச்சகர் தேவாதி என்பவரின் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இதன்பிறகு 3 நாள் பயணமாக அவர் தஞ்சை செல்வதாக வெளியான தகவலையடுத்து, ஆளும் கட்சி தரப்பு உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது. `தேர்தல் நேரத்தில் சசிகலாவின் தஞ்சை பயணத்தின் நோக்கம் என்ன... யாரையெல்லாம் சந்திக்கப் போகிறார்?' என்பது குறித்து கண்காணிக்குமாறு உளவுத்துறை தரப்புக்கும் மன்னார்குடியில் உள்ள அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

நடரான் சமாதியில் சசிகலா

அதேநேரம், `தன்னைச் சுற்றி அரசியல் நிழல் படிந்துவிடக் கூடாது' என்பதில் வி.கே.சசிகலா உறுதியாக இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 17 ஆம் தேதி டி.டி.வி.தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷுடன் தஞ்சாவூர் வந்தவர், அருளானந்த நகரில் உள்ள தன் கணவர் ம.நடராஜனின் வீட்டில் தங்கினார். இதன் பிறகு விளாரில் உள்ள நடராஜனின் குலதெய்வமான வீரனார் கோயிலுக்குச் சென்றார் அவர். அங்கு நடராஜனின் தம்பிகளான ராமச்சந்திரன், பழனிவேல் ஆகியோரது பேரக் குழந்தைகளுக்கு முடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்சாகமாகக் கலந்து கொண்ட சசிகலா, உறவினர்களிடம் பெரிதாக எதையும் பேசவில்லை. தன்னை சந்திக்க வந்த அ.ம.மு.க வேட்பாளர்களுக்கும் அவர் எந்த ஆசியும் வழங்கவில்லை. அன்று இரவே நடராஜனின் சமாதிக்குச் சென்று கும்பிட்டார்.

இதன்பிறகு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் ஆலயம் உள்பட வேறு சில கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தியவர், 3 நாள் பயணத்தை இரண்டு நாள்களிலேயே நிறைவு செய்துவிட்டுக் கிளம்பிவிட்டார். குறிப்பாக, ம.நடராஜனின் நினைவுநாளில் (20 ஆம் தேதி) அவர் பங்கேற்கவில்லை. `தஞ்சை பயணத்தை அவரசமாக முடிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?' என மன்னார்குடி உறவினர்களிடம் பேசினோம். தங்களது அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாமல் சில தகவல்களை நம்மிடம் பட்டியலிட்டனர்.

தஞ்சை பயணத்தின் பின்னணி

`` இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், ஜெய் ஆனந்த் உள்பட நெருங்கிய உறவினர்கள் யாரும் சசிகலா வந்தபோது வரவில்லை. சொல்லப்போனால், தஞ்சாவூர் செல்லும் முடிவிலும் சசிகலா இல்லை. குல தெய்வக் கோவிலுக்கு வருமாறு உறவினர்கள் கூறியபோதும், `தேர்தல் நேரத்தில் சென்றால் அரசியல் ஆக்குவார்கள், தஞ்சாவூர் செல்லாமல் இருப்பதே நல்லது. தேர்தல் முடியட்டும், வருகிறேன்' எனக் கூறிவிட்டார்.

இந்தப் பதிலை ஏற்காத நடராஜனின் தம்பிகள், ` 6 பேரக் குழந்தைகளுக்கும் முடி காணிக்கை கொடுப்பதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் வந்தால் மட்டும் முடி எடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது வெயில் நேரம் என்பதால் அதிகப்படியான தலைமுடியால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்' எனக் கூறவே, சசிகலா கண்கலங்கிவிட்டார். அண்ணிகள் மீதும் அவர்களின் வாரிசுகள் மீதும் சசிகலா அதிகப்படியான பாசம் வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே உடனடியாக தஞ்சாவூருக்குப் பயணப்பட்டார்" என்கின்றனர்.

பட மூலாதாரம், AIADMK

சொத்து மோதல்

தொடர்ந்து பேசுகையில், `` அருளானந்த நகரில் உள்ள நடராஜனின் வீட்டுக்கு அவர் இறந்தபோது சசிகலா வந்தார். அதன்பிறகு இப்போதுதான் வந்திருக்கிறார். இந்த வருகையில் வேறு ஒரு நெகழ்ச்சியூட்டும் சம்பவமும் நடந்தது. ம.நடராஜன் உடன்பிறந்தவர்கள் என்று பார்த்தால் மொத்தம் ஆறு பேர் உள்ளனர். இவர்களில் விளார் சாமிநாதன் குடும்பத்தில் மூத்த மகன். இவருக்குப் பிறகு நடராஜன், ராமச்சந்திரன், பழனிவேல், சம்பந்த மூர்த்தி, வனரோஜா ஆகியோர் உள்ளனர். நடராஜனுக்கு அருளானந்த நகர் வீடு உள்பட ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடிகள் பெறும். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி நடராசன் இறந்துவிட்டார். இதையொட்டி சசிகலா பரோலில் வந்தபோது குடும்பத்துக்குள் சொத்து தகராறு வெடித்தது. இதனால் சசிகலா மிகுந்த மனவேதனையில் இருந்தார். தற்போது சசிகலாவின் தஞ்சை பயணத்தில் இந்த விவகாரம் பெரிதாகலாம் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா அதற்கு இடம் கொடுக்கவில்லை" என்கின்றனர்.

உறுதிகொடுத்த சசிகலா

``ம.நடராஜனின் சொத்துகள் பலவும் அவரது மரணத்துக்குப் பிறகு சசிகலாவுக்குச் சென்று சேர வேண்டியவை. அவரது தற்போதைய தஞ்சை வருகையில் இந்த சொத்துகள் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அப்போது நடராஜனின் தம்பிகளிடம் பேசிய சசிகலா, ` அவருடைய சொத்துகள் எதுவும் எனக்குத் தேவையில்லை. அவை அனைத்தும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்கே சென்று சேரட்டும். எனக்கு எந்தப் பங்கும் தேவையில்லை' எனக் கூறிவிட்டார். இப்படியொரு பதிலை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அருளானந்த நகரில் நடராஜன் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை சென்டிமெண்ட் அடிப்படையில் சசிகலா எதிர்பார்ப்பார் எனவும் நினைத்தனர். அந்த வீட்டின் சுற்றுச்சுவரே கிரானைட் கற்களில்தான் கட்டப்பட்டிருக்கும். தவிர, நிலம் உள்பட பல கோடி ரூபாய் சொத்துகளையும் அவர் நிராகரித்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.

தினகரன் வருகை; சசிகலா புறக்கணிப்பு?

சொல்லப்போனால், சசிகலாவின் தஞ்சை வருகையில், அந்த சொத்துகளில் எவற்றையெல்லாம் சசிகலாவுக்கு கொடுப்பது, எந்த சொத்துகளை மற்றவர்கள் பிரித்துக் கொள்வது என்பதில் பல்வேறு கணக்குகளைப் போட்டு வைத்திருந்தனர். அந்தக் கணக்குகளை பொய்த்துப் போக வைத்துவிட்டு சென்னை சென்றுவிட்டார் சசிகலா. இதனை எதிர்பார்க்காத நடராசனின் உறவினர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டனர்" என்கின்றனர் மேலதிக தகவல்களுடன்.``நடராசனின் நினைவு நாளான 20 ஆம் தேதி டி.டி.வி.தினகரன் உள்பட குடும்ப உறவுகள் அனைவரும் வரலாம் என்பதால், அந்தநேரத்தில் தான் இருப்பது சரியாக இருக்காது எனவும் சசிகலா நினைத்தார். அதன் காரணமாக, 2 நாள்களில் தஞ்சை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை கிளம்பிவிட்டார்" எனவும் சசிகலாவின் மன்னார்குடி உறவினர்கள் பேசி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: