மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜி முதல்வர் பதவியை தக்கவைப்பாரா? மார்க்சிஸ்ட் கணக்கு என்ன?

  • தேபபானி மஜும்தார்
  • பிபிசி மானிடரிங்
மம்தா பேனர்ஜி

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் ஊடகங்களின் கூடுதல் கவனத்தில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு வித எதிர்ப்புணர்வை சந்தித்து வருகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.

திரிணாமூல், பாஜக இடையிலான மோதல் தொடர்ந்து ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கட்சி மாறுவது, அரசியல் விமர்சனங்கள் என எல்லாமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தல் இருமுனைப் போட்டியல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய கங்கிரஸ், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தியன் செக்யூலர் ஃப்ரன்ட்தான் மாற்று அணி என கூறுகிறது அக்கட்சி.

34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, கடந்த 2011-ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் தோற்கடித்து ஆட்சியில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தின் 294 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 211 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 44 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 26 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றன.

"பாஜகதான் மேற்கு வங்கத்தின் விருப்பமான தேர்வு" என கடந்த மார்ச் 7-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் பங்கெடுத்த பின், பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சரி, மேற்கு வங்கம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

543 இடங்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், மேற்கு வங்கத்துக்கு 42 இடங்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் (80), மகாராஷ்டிரா (48) ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு அதிக இடங்களைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்கம்தான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த 42 இடங்களில் 22 இடங்களை வென்றது. பாஜக 18 இடங்களை வென்றது. அதற்கு முந்தைய 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜக வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், PM Tewari

மக்களவைத் தேர்தலைப் போலவே, தற்போது அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி காண பாஜக விரும்புகிறது.

இருபெரும் தலைவர்களுக்கிடையில் மோதல்

கடந்த மார்ச் 10-ம் தேதி மமதா பானர்ஜி நந்திகிராமில் போட்டியிடுவதற்கு தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதே நந்திகிராமில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக மம்தா நடத்திய போராட்டங்கள்தான் அவரது அரசியல் வாழ்கையைத் தீர்மானித்தன.

தன்னோடு அமைச்சரவையில் இருந்துவிட்டு, கடந்த டிசம்பர் 2020-ல் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை எதிர்ப்பதற்காக தன் சொந்தத் தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு நந்திகிராமில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார் மம்தா பேனர்ஜி.

தான் மமதா பானர்ஜியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்போவதாக கூறி வருகிறார் சுவேந்து அதிகாரி. இந்த இருவருக்கும் இடையிலான தேர்தல் போட்டி, இருபெரும் தலைவர்களுக்கு இடையிலான போட்டி என விவரிக்கப்படுகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் 291 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதில் சினிமா பிரபலங்கள் உட்பட 30 புது முகங்களும் அடக்கம். ஐந்து அமைச்சர்கள் உட்பட, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 23 பேருக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் தங்களுக்குச் சாதகமான ஒரு மகிழ்ச்சிகரமான தேர்தலாக இருக்கும். இந்த தேர்தலில் தன் கட்சி போட்டியிட்டு வெல்லும் என, சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் போது கூறினார் மம்தா பேனர்ஜி.

"மற்ற கட்சியின் தலைவர்களை முறையற்ற ரீதியில் கைப்பற்றுவது தான் பாஜகவின் தந்திரமாக இருந்து வருகிறது". மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால் தான் செய்யும் வேலையில் இருந்து வெளியேறிவிடுகிறேன் என இந்தியா டுடே சேனலிடம் கூறியுள்ளார் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்.

200 இடங்களில் வெல்வோம் என்கிற நம்பிக்கையில் பாஜக

கடந்த 2019-ம் ஆண்டின் தேர்தலில் சுமார் 40.6 சதவீத வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில், பாஜக இந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என பாஜக தலைவர் திலீப் கோஷ் உட்பட பல தேசிய தலைவர்களும் நம்புகிறார்கள். பாஜகவும் `மாற்றம்` என்பதைத் தான் தங்களின் தேர்தல் பிரசார முழக்கமாக முன் வைத்திருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, பாஜக, மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள் என ஃப்ரன்ட்லைன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தலைவர் ஜே பி நட்டா உள்பட பல பாஜக தேசிய தலைவர்களும் மேற்கு வங்கத்துக்கு பலமுறை சென்று இருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பிரதமர் மோதியே இரண்டு முறை மேற்கு வங்கத்துக்குச் சென்றிருக்கிறார். பாஜக தலைவர்கள் ஒரு பக்கம் அதிக முறை வந்து போவதால், மம்தா பேனர்ஜி `வங்காளி` என்கிற அடையாளத்தை உயர்த்திப் பிடித்து, பாஜக வெளி ஆட்களின் கட்சி என்கிற பிம்பத்தை உருவாக்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2021 ஜனவரி 23 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நரேந்திர மோதியும் மம்தா பேனர்ஜியும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடப்பட்டது. அதையடுத்து மம்தா பேனர்ஜி தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி கோபப்பட்டார். ஜெய் ஹிந்த், ஜெய் பங்களா என்று முழக்கம் எழுப்பிவிட்டு பேச மறுத்து விழாவில் இருந்து வெளியேறினார்.

இதுவரை பாஜக தன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு வங்காளி தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் எனக் கூறுகிறது பாஜக. திரிணாமூல் காங்கிரஸ் ஊழல் செய்வதாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது பாஜக. அதோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மமதாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜியைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.

மும்முனைப் போட்டி கணிப்பது சிரமம்

பட மூலாதாரம், Getty Images

மற்ற இருவேறு அரசியல் சக்திகள் முன்வைக்கும் சவால்களால், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது சிரமமாகிறது என ஃப்ரன்ட்லைன் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்தியன் செக்யூலர் ஃப்ரன்ட் கூட்டணி, அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கவிருக்கின்றன.

"பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க விரும்புகிறோம்" என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மொஹம்மத் சலிம். "ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இருப்பினும் தற்போது இருக்கும் சூழலில் பாஜக ஒரு தெளிவான வெற்றியாளர் கிடையாது. இது ஒரு மும்முனைப் போட்டி என்பது உறுதி" எனக் கூறினார்.

2011-ம் ஆண்டு சென்சஸ் கணக்குப் படி, மேற்கு வங்கத்தில் 27 சதவீத இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். தற்போதைய நிலவரத்தில் இது 30 சதவீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. "மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்க முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் என நான் நம்புகிறேன். இப்பகுதிகளில் உள்ள எல்லா தொகுதிகளும் எங்களுக்கு வேண்டும்" என மமதா பானர்ஜியே இஸ்லாமிய வாக்குகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியன் செக்யூலர் ஃப்ரன்ட் உடனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி, திரிணாமூல் கங்கிரஸின் இஸ்லாமிய வாக்குகளைச் சேகரிக்கும் திட்டத்தை பாதிக்கும்.

மதர்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்த, அக்கூட்டணி இந்தியன் செக்யூலர் ஃப்ரன்ட் வெறுமனே ஓர் இஸ்லாமியக் கட்சியல்ல. அது தலித் மற்றும் மலைவாழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி. அதன் தலைவர் ஒரு மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர் என அழுத்தமாகக் கூறுகிறது.

பட மூலாதாரம், AIMIM National, Twitter

அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் கட்சி இதுவரை தன் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவில்லை. மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்பு கூறி இருந்த அக்கட்சியின் தலைவர் ஓவைசி, தற்போது ஒரு முடிவை எடுக்க முடியாமல் இருப்பது போலத் தெரிவதாக வங்காளப் பத்திரிகையான ஆனந்த்பசார் பத்ரிகா குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் போட்டி

அரசியல் ரீதியிலான வன்முறைகள் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இதில் கடந்த 2020 டிசம்பர் 10 அன்று பாஜகவின் தலைவர் ஜே பி நட்டாவின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அடக்கம். இதனால் தேர்தல் ஆணையம் இரண்டு சிறப்பு காவல் துறை கண்காணிப்பாளர்களை நியமிக்க வைத்தது. தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படையினரில் 944 கம்பெனி வீரர்களை முன் கூட்டியே அனுப்ப இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்காக முன் கூட்டியே இறக்கப்பட்ட படைகளில் இது தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றன. இதுதான் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பதற்கான வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெல்ல வேண்டும் என விரும்புகிறது அக்கட்சி. அதே நேரத்தில் பாஜக, இந்தத் தேர்ந்தலில் கணிசமாக வெற்றி பெற்று அம்மாநிலத்தில் அழுத்தமாக தங்கள் நுழைவைப் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஒருவேளை இந்த இரு கட்சிகளுமே உறுதியான வெற்றியைப் பெறவில்லை எனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியே, மேற்கு வங்கத்தில் அரசமைக்கும் வெற்றியாளரைத் தீர்மானிப்பதாக இருக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: