நரேந்திர மோதிக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் - 'ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டாம்'

MK Stalin / Narendra Modi

பட மூலாதாரம், MK Stalin / Narendra Modi Facebook pages

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசு தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளியுறவு செயலாளர் கூறியுள்ளது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மௌனம் காப்பது தமிழர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐநாவில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் போதான வாக்கெடுப்பில் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளியுறவு செயலர் ஜெயநாத் கொலம்பக தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளரை இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க பாஜக அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி, அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பிப்ரவரி இறுதியில் கொண்டு வந்தது.

ஜெர்மனி, கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள், இலங்கை மீதான பிரிட்டனின் முன்னெடுப்பின் முக்கிய நாடுகளாக இருக்கின்றன.

பட மூலாதாரம், OHCHR

படக்குறிப்பு,

ஐநாவின் மனித உரிமைகள் மன்றம் (கோப்புப்படம்)

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொண்டபோது ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவிதமான அறிகுறியும் வெளிப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளது என்பதைக்கூட பாஜக அரசு மறந்தது ஏன் என அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்திய அரசு திட்டமிடுவது தமிழினத்திற்கு முற்றிலும் எதிரானது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களை அவமதித்து, அந்நாட்டு அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசு எடுக்கக் கூடாது. அவ்வாறு ஆதரவளித்து தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு இடையிலான உள்நாட்டுப் போர்

படக்குறிப்பு,

காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி இன்னும் பல தமிழர்களுக்கு தகவல் எதுவும் இல்லை

இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை நசுக்கிவிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மற்றும் பிற தொண்டூழிய அமைப்புகள் மதிப்பிடுகின்றன.

பல்லாயிரக் கணக்கானோர் இந்தப் போர் காலத்தில் காணாமல் போய்விட்டனர். இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள், இலங்கையிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் காணாமல் போனதற்கு, இலங்கை அரசுப் படையினர் மீது குறை கூறப்பட்டது.

அப்போதிலிருந்து, கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழர்களின் குடும்பம் நீதிகேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ தமிழ் மக்கள் காணாமல் போனதற்கு, தான் பொறுப்பல்ல என தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: