தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அ.ம.மு.க, தே.மு.தி.கவால் பா.ம.கவுக்கு பாதிப்பா - கள நிலவரம் சொல்வது என்ன?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அ.ம.மு.க, தே.மு.தி.கவால் பா.ம.கவுக்கு பாதிப்பா - கள நிலவரம் சொல்வது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் 23 தொகுதிகளிலும் பிரசாரம் களைகட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கான வெற்றி வாய்ப்புகள் எப்படியுள்ளன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் போட்டியிடுகிறது. செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல்) ஆகிய தொகுதிகளை பா.ம.கவுக்கு அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து, பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியலை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார்.

அதிருப்தி அடைந்த வன்னியர் சங்க செயலாளர்

இதில், `ஜெயங்கொண்டம் தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்' என நம்பிய வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி அதிருப்தியடைந்தார். இந்தக் கோபத்தை முகநூலில் வெளிப்படுத்தினார்.

அவர் தனது முகநூல் பதிவில், உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகவும் வேதனை தெரிவித்திருந்தார். இதனால் அவர் கட்சி மற்றும் அமைப்புப் பதவிகளில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் பா.ம.க இறங்கியது. இதன் பலனாக தற்போது தேர்தல் வேலைகளில் வைத்தி ஆர்வம் காட்டி வருகிறார்.

களமிறங்கிய காடுவெட்டி குரு மனைவி

அதேநேரம், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா, ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதும் பா.ம.க தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் சொர்ணலதா, பா.ம.க எதிர்ப்பை மையப்படுத்தியே பிரசாரம் செய்து வருகிறார். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் பா.ம.க நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Anbumani ramadoss facebook page

`கள நிலவரம் பா.ம.கவுக்கு சாதகமாக இருக்கிறதா?' என பா.ம.கவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய அவர், `` தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக உள்ளது. அதேநேரம், வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரையில் பழைய ஆள்களுக்கும் புதிய ஆள்களுக்கும் எங்கள் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதில், வெற்றிக்கான வாய்ப்பு என்பதை அலசி ஆராயாமல், `யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற்றுவிடுவார்கள்' என்ற மனநிலையில் நிறுத்தியுள்ளனர். இது களத்தில் சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி

தொடர்ந்து பேசுகையில், `` தேர்தலைப் பொறுத்தவரையில் தலைவர்கள் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஆனால், உள்ளூரில் செல்வாக்கான நபர்களை நிறுத்தாமல் வெளியூர் நபர்களைக் கொண்டு வந்ததால் அதிருப்தி நிலவுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் செல்வகுமார் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தைலாபுரத்தில் அரசியல் பயிலரங்குகளை நடத்தி வந்தவர். இவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர். விழுப்புரத்தைச் சேர்ந்த சிவக்குமார், மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். வழக்கறிஞர் பாலுவுக்கு ஜெயங்கொண்டத்தில் வாய்ப்பு கொடுத்ததால், வைத்தி கோபித்துக் கொண்டார். அவரையும் சமாதானப்படுத்திவிட்டனர்.

கூட்டணியை மதிக்காத அமைச்சர்கள்

மேலும், கீழ்வேளூர் வேட்பாளராக வேத முகுந்தன் என்பவர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம் ஆகியவற்றைக் கொடுத்தனர். பின்னர், அவரை மாற்றிவிட்டு வடிவேல் ராவணனை அறிவித்துள்ளனர். ஆனால், அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்க மறுத்துவிட்டு சுயேட்சையாக வாக்கு கேட்கத் தொடங்கிவிட்டார். இதனால் பல குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த தேர்தலில் அதிக செலவு செய்தவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டதால் சீட் கிடைக்காதவர்கள் எல்லாம் கொதிப்பில் உள்ளனர். தேர்தலில் வாக்காளர்களை சரிக்கட்டிவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். பல தொகுதிகளில் பா.ம.கவை சற்றும் மதிக்காத அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இவர்களை எதிர்கொள்வதும் பெரிய சவாலாக உள்ளது" என்கிறார்.

அ.ம.மு.க - தே.மு.தி.கவால் பாதிப்பு?

பட மூலாதாரம், dmdk party

மேலும், `` இந்தத் தேர்தலில் அ.ம.மு.கவும் தே.மு.தி.கவும் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, பல தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியைக் காலி செய்யும் வேலைகளைச் செய்ய உள்ளனர். `அவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்?' என்ற அலட்சியத்தில் அ.தி.மு.க தலைமை செயல்படுகிறது. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க இல்லாததால் களநிலவரத்தைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. வன்னிய சமூகத்துக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வாங்கியதால் மற்ற சமூக மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதும் வாக்கு எண்ணிக்கை நாளில்தான் தெரியவரும். இந்த இடஒதுக்கீடு பாதகத்தை ஏற்படுத்தினால், பல தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை பாதிக்கும். எப்படியிருந்தாலும், `குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம்' என மருத்துவர் ராமதாஸ் நம்புகிறார்" என்கிறார்.

வளர்ச்சிக்குப் பாதிப்பா?

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்த அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, ``வன்னிய சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததை, தனது அரசின் வெற்றியாக எடப்பாடி பழனிசாமி முன்வைக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செய்யாததை தான் செய்துவிட்டதாகவும் நினைக்கிறார். நிச்சயமாக இதில் பா.ம.கவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` வன்னியர் சங்கத் தலைவராக வெற்றி பெற்ற மருத்துவர் ராமதாஸ், இந்தத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத பின்னடைவை சந்தித்திருக்கிறார். 30 சதவிகித வாக்கு பலம் கொண்ட அணியில் 23 தொகுதிகள் என்பது மிகவும் குறைவானது. இதன்மூலம், பா.ம.கவின் வாக்கு பலம் 3 சதவிகிதம்தான் என ராமதாஸ் ஒப்புக் கொண்டதாகவே அந்தக் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் அதிக தொகுதிகளைப் பெற்ற ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியிடம் 23 இடங்களை வாங்கியிருப்பது என்பது பா.ம.கவின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் பலத்தின் அடிப்படையில் பெரிய கட்சிகளாக வளர்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கிறேன்" என்கிறார்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

`தேர்தலில் களநிலவரம் சாதகமாக இருக்கிறதா?' என பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. எந்தவித அதிருப்திகளும் இல்லை. கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்போடு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், எதிரொலி மணியன்/FB

படக்குறிப்பு,

எதிரொலி மணியன்

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புகூட, `10 ஆண்டுகால ஆட்சி தொடராது' எனச் சிலர் பேசி வந்தனர். ஆனால், அரசின் பயிர்க்கடன் ரத்து, இடஒதுக்கீடு உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் அ.தி.மு.க அரசின் மீதான நற்பெயர் அதிகரித்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை. ஸ்டாலின் வீசிய பந்துகளை எல்லாம் முதல்வர் சிக்ஸராக மாற்றிவிட்டார். நாங்கள் செல்லும் கிராமங்களில் எல்லாம் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்கிறார்.

வடமாவட்டங்களில் சொந்த சமூக வாக்குகளை மையமாக வைத்து பா.ம.க களமிறங்கியுள்ளது. 23 தொகுதிகளின் களநிலவரமும் பா.ம.கவுக்குச் சாதகமாக இருக்கிறதா? என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: