தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 234 தொகுதிகளில் களம் காணும் 3,998 வேட்பாளர்கள்

தேர்தல் விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர்.

இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள்.

இதில் கரூர் தொகுதியில் 97 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 7 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதியாக 77 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, இந்திய கணசங்கம் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி ஆகியவை சார்பில் தலா ஒரு வேட்பாளரும் சுயேச்சை வேட்பாளர்கள் 68 பேரும் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் வி. செந்தில்பாலாஜி களம் காண்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் எஸ். மோகன்ராஜ் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 28 வேட்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களம் காணும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட 48 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து களத்தில் 28 பேர் உள்ளனர். அதிமுக, இந்திய அம்பேகர் கட்சி, அமமுக, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கழகம், திமுக, மக்கள் நீதி மய்யம், மை இந்தியா கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் இளைஞர் கட்சி, சுயேச்சைகள் 17 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தாசப்பராஜ் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.

ஸ்டாலின் தொகுதியில் 36 பேர்

கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த 55 பேரில் 9 பேர் பெண்கள். இதில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக ஸ்டாலின் உள்பட 36 பேர் களம் காண்கிறார்கள்.

இந்த தொகுதியில்தான் திமுக தலைவரும் இந்த தொகுதி உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் களம் காண்கிறார். இந்த தொகுதியில் அதிமுக, அமமுக, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், மக்களாட்சி கட்சி, சிவசேனை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி, சுயேச்சை உறுப்பினர்கள் 22 பேர் களம் காண்கிறார்கள்.

ஓ.பி.எஸ் Vs தங்கத்தமிழ்செல்வன்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் களம் காண்கிறார்.

இந்த தொகுதியில் போட்டியிட 51 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 25இல் ஒருவர் மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து இறுதியாக களத்தில் 24 பேர் உள்ளனர். அதிமுக, திமுக, அகிதல இந்திய திரிணமூல் காங்கிரஸ், அமமுக, அண்ணா திராவிடர் கழகம், அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, மக்கள் நீதி மய்யம், மை இந்திய கட்சி, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் 15 பேர் களம் காண்கிறார்கள். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக சார்பில் பி. முத்துசாமி, திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் இங்கு களம் காண்கிறார்கள்.

டி.டி.வி. தினகரனுடன் மோதும் 25 வேட்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட 44 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், அதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 பேர் திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகு இறுதியாக டி.டி.வி. தினகரன் உள்பட 26 பேர் களம் காண்கிறார்கள்.

இங்கு அகில பாரத் ஹிந்து மகாசபா, அதிமுக, அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, பகுஜன் திராவிட கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் 16 பேர் களம் காண்கிறார்கள்.

அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ, அமமுக சார்பில் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கே. கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.

சீமான் தொகுதியில் 20 வேட்பாளர்கள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு போட்டியிட 32 பேர் மனு தாக்கல் செய்தநிலையில், 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 பேர் திரும்பப் பெற்றுக் கொண்டனர் இதையடுத்து இறுதியாக 20 பேர் களம் காண்கிறார்கள்.

அதிமுக சார்பில் கே. குப்பன், அமமுக சார்பில் எம். செளந்தரபாண்டியன், திமுக சார்பில் கே.பி.பி. சங்கர், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டி. மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.

கமலுக்கு எதிராக 20 வேட்பாளர்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் 33 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்ததில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடைசியில் கமல் உள்பட 21 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக சார்பில் துரைசாமி என்கிற சேலஞ்சர் துரை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வஹாப், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: