தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: `தி.மு.க தேர்தல் அறிக்கையில் குளறுபடிகளா? விமர்சன வளையத்தில் சிக்கிய இருவர் யார்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், DMK

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு 10 நாட்கள் கடந்த பின்னரும் அது தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதாக இல்லை. `அவசர கோலத்தில் இப்படியொரு தேர்தல் அறிக்கையை ஏன் தயாரிக்க வேண்டும்?' எனவும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடந்தது?

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தி.மு.கவும் அ.தி.மு.கவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் மக்களைக் கவரும் வகையில் புதிய, புதிய வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வது அரசியல் கட்சிகளின் வழக்கம். ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லாத சிறிய கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. ஆனாலும், `திமுக என்ன சொல்லியிருக்கிறது?'; `அ.தி.மு.க என்ன சொல்லப் போகிறது?' என்ற எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

தங்கக் காசு அஸ்திரம்

இதன் ஒரு பகுதியாக மார்ச் 7ஆம் தேதி திருச்சி மாநாட்டில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அடுத்தநாளே, `எங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் வெளியில் கசிந்து விட்டன. நாங்கள் முதம் 1,500 ரூபாயும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களும் தருவோம்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்தளவுக்கு இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை மிக முக்கியமானதாகப் பார்த்தன.

இந்நிலையில், மார்ச் 13ஆம் தேதி தி.மு.க தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், எட்டுவழிச்சாலை திட்டம், சி.ஏ.ஏ விவகாரம், காட்டுப்பள்ளி துறைமுக விவகாரம் போன்றவை இடம்பெறாததால், இது குறித்து தி.மு.க தலைமையின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். இதையடுத்து, `திருத்தப்பட்ட தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் இந்த விவகாரங்களை தி.மு.க தலைமை இடம்பெறச் செய்தது. ஆனாலும், `கலப்பு மணம் செய்தால் ரூ. 60,000 மற்றும் ஒரு பவுன் தங்கக்காசு' என்பன போன்ற வாக்குறுதிகளை தி.மு.கவுக்கு எதிரான ஆயுதமாக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கின.

மாற்றுத் திறனாளிகளின் வேதனை

இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் சிலர் எழுப்பிய கேள்விகளும் விவாதப் பொருளானது. இது குறித்து பேராசிரியர் தீபக் என்பவர் வெளியிட்டிருந்த முகநூல் பதிவில், ` தி.மு.கவின் தேர்தல் அறிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, `புதிய ஸ்மார்ட் கார்டு'. ஏற்கனவே ஓரு ஸ்மார்ட் கார்டு உள்ளதே.. இயலாமையை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வைப்பது எங்கள் மீது ஒருவிதமான தாக்குதலாகாதா? மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், காலாவதியான 1995 ஊனமுற்றோர் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்வதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நவீன கால சமூக நீதி கோட்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் வருகிறதே. அவ்வாறு இருக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சி இட ஒதுக்கீடு என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாததை ஏற்க முடியவில்லை. எத்தனையோ கூட்டங்கள் போட்டு பேசி எங்கள் கோரிக்கைகளை வடிவமைத்து தந்தோம். ஆனால் அது முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளது எங்களுக்கு மனவலியை தந்திருக்கிறது' என பதிவிட்டிருந்தார்.

அச்சுப் பணியில் அவசரம் ஏன்?

`ஏன் இவ்வளவு குளறுபடிகள்?' என தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவானது, மாநிலம் முழுவதும் ஐந்து கட்டங்களாகப் பயணித்து மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது. இந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் இருந்தனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பின்போது, பல்வேறு துறை நிபுணர்களிடம் இந்தக் குழுவினர் கலந்து ஆலோசித்தனர். ஐபேக் குழுவினரும் தங்கள் பங்குக்கு களநிலவரத்தில் கிடைத்த தகவல்களை தெரியப்படுத்தினர். கடைசி நிமிடம் வரையில் என்னென்ன கோரிக்கைகள் இடம்பெற வேண்டும் எனத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் தி.மு.க தலைமை பேசி வந்தது. ஆனால், கடைசி ஓரிரு நாள்களில் குழுவில் உள்ள சிலருக்கே தெரியாமல் அச்சடித்துவிட்டனர்" என்கிறார்.

அந்த 2 பேர் யார்?

பட மூலாதாரம், DMK

தொடர்ந்து பேசுகையில், ``தேர்தல் அறிக்கையை அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பாக, குழுவின் உறுப்பினர்களுக்குக் காட்டியிருந்தால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள வசதியாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவரை மட்டுமே வைத்து அறிக்கையைத் தயார் செய்து முடித்துவிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர், ` என்னிடம் காட்டியிருக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்?' என வேதனையை வெளிப்படுத்தினார். இந்த அறிக்கை உருவாக்கத்தில் பணிபுரிந்த வல்லுநர் ஒருவரும், `சில விஷயங்கள் இடம்பெறவில்லை. அதனை சரிசெய்துவிட்டு அச்சுக்கு அனுப்புங்கள்' எனக் கூறியதையும் அறிவாலயத்தில் உள்ளவர்கள் ஏற்கவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தவே, மறுநாள் திருத்தப்பட்ட தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார்" என்கிறார்.

பா.ஜ.க அழுத்தம் கொடுத்ததா?

``காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது. இதனை தி.மு.கவின் கவனத்துக்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கொண்டு சேர்த்திருக்கலாம். ஆனால், தொடக்கத்தில் அதனை அவர்கள் சேர்க்கவில்லை. இந்தக் கோரிக்கை விடுபட்டதைக்கூட விட்டுவிடலாம். ஆனால், எட்டுவழிச் சாலை, சி.ஏ.ஏ விவகாரங்கள் விடுபடவே முடியாத அடிநாதமான விஷயங்களாகத்தான் பார்க்கிறேன். இதனை தேர்தல் அறிக்கையில் தி.மு.க தவிர்த்ததை சாதாரணமான ஒன்றாகப் பார்க்க முடியவில்லை. பா.ஜ.கவின் அழுத்தம் காரணமாக அமைதியாக இருந்துவிட்டார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. தேர்தல் அறிக்கையை தி.மு.க திருத்திவிட்டாலும், அவர்கள் மீதான சந்தேகம் அகலவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், `` தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். அவர்களின் தேர்தல் அறிக்கை எப்போதுமே கதாநாயகனாக இருந்ததில்லை. தொலைக்காட்சிப் பெட்டியையும் ரேசன் அரிசியை 2 ரூபாய்க்கு கொடுப்பதாக கலைஞர் அறிவித்ததையும் `கதாநாயகன்' என வர்ணித்தார்கள். அதனால், இந்தச் சமூகத்துக்கு எந்தவித முன்னேற்றமோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. அது அந்தநேரத்தில் மக்களைக் கவர்வதற்கான தேர்தல் அறிக்கையாகத்தான் இருந்தது. மக்களிடம் ஒன்றைக் கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு இயல்பாகச் சென்று சேர வேண்டிய கல்வி, மருத்துவ நிதிக்கான பணத்தை இலவசங்களை நோக்கித் திருப்ப முடியும். தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று வர்ணிப்பதே பாமரத்தனமாக இருக்கிறது" என்கிறார்.

மதுவை மறந்தது ஏன்?

மேலும், ``கலப்பு மணம் செய்தால் 65 ஆயிரம் ரூபாய் என்பது தி.மு.கவுக்கு எதிரான சில அரசியல் கட்சிகளின் லாபியால் வெளியில் வந்த விஷயம். இது திட்டமிட்டே தவறாகப் பிரசாரம் செய்யப்பட்டுவிட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் கொடுக்கப்பட்டதால், மற்ற சமூகங்களை தி.மு.கவுக்கு எதிரானதாக மாற்றுவதற்காக இந்த வாக்குறுதியைக் கையில் எடுத்தனர். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பனைமரங்கள் குறித்து குறிப்பிடாதது, மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழ்நாட்டில் 5 கோடி பனைமரங்கள் இருந்த இடத்தில் தற்போது 2.5 கோடி பனைமரங்கள்தான் உள்ளன. பல லட்சம் விவசாயிகளுக்கு லாபம் கொடுத்து வரும் தொழில் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் கள் இறக்குவது தடை செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த கருணாநிதியும் அந்நிய மதுபானத்துக்கு ஆதரவு கொடுத்தார்.

மக்களின் இயற்கை வளம் சார்ந்த, மண்ணோடு பின்னிப் பினைந்த ஒன்றாக பனை மரம் உள்ளது. கள் இறக்குவது தொடர்பாக எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க தரவில்லை. தேர்தல் அறிக்கை குழுவில் இருந்தவர்களும், இதற்கு அழுத்தம் கொடுத்தார்களா எனவும் தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளால் ஆண்கள் உழைக்கும் திறனை இழந்துவிட்டனர். தொடர்ந்து 5 ஆண்டுகள் மதுவை அருந்துகிறவர்கள், உடல்நலிவுற்று இறந்துவிடுகின்றனர். ஒரு கிராமத்தில் 62 விதவைகள் இருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தி.மு.க தலைமை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் இல்லை; மது தொடர்பான எந்த விஷயத்தையும் தி.மு.க முன்வைக்கவில்லை" என்கிறார் வேதனைக் குரலில்.

போட்டியால் ஏற்பட்ட பிழையா?

தி.மு.க தேர்தல் அறிக்கை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சொற் பிழைகளையோ எழுத்துப் பிழைகளையோ பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மத்திய அரசு சி.ஏ.ஏவை கொண்டு வந்தபோது தி.மு.க கடுமையாக எதிர்த்தது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தோம். அதனை ஆதரித்த அ.தி.மு.க, தற்போது வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. சி.ஏ.ஏ எதிர்ப்பில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில் அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் தி.மு.க முன்னணியில் இருக்கிறது. தி.மு.கவைப் பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``சி.ஏ.ஏ விவகாரத்தில் தி.மு.கவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இஸ்லாமியர்களுக்கு நன்றாகவே தெரியும். முத்தலாக் சட்டத்தை பலரும் ஆதரித்தபோது தி.மு.க கடுமையாக எதிர்த்தது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் அதனைச் சொல்லவில்லை என்பதால் அதனைக் குற்றமாகப் பார்ப்பது ஏற்புடையதல்ல. தேர்தல் மே மாதம் வருவதாகத்தான் இருந்தது. திடீரென தேர்தல் தேதியை அறிவித்ததால் வேகமாகச் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசியல் கட்சிகளிடையே தேர்தல் வாக்குறுதிகளை யார் முந்தித் தருவது என்பதில் போட்டி இருந்தது. எனவே, தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையும் நிறைவேற்றித் தருவது தி.மு.கதான் என்பது மக்களுக்குத் தெரியும்" என்கிறார்.

தி.மு.க தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை, `கதாநாயகனா.. வில்லனா?' என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: