தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

தேர்தல் விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகளும் தெரியவரும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன். அதில் 44 தொகுதிகள் பட்டியல் வகுப்பினருக்கும், இரு தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை.

கூட்டணிகள் யாருடன்?

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மறுமலர்ச்சி திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதிமுக ஆறு இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

மறுபுறம் தற்போது ஆளும் அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அந்தக் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு திருப்தியாக இல்லாததால், அந்தக் கூட்டணியில் இருந்து விலகி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முக்கிய வேட்பாளர்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ. பன்னிர் செல்வம் போடி நாயக்கனூர் கொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கொளத்தூரிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் திருவொற்றியூர் தொகுயில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவை தெற்கில் அதிமுக, திமுக என இருகட்சியை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை. அங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் விஜய்காந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடவில்லை. விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் எவை?

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.

காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமுவை எதிர்த்து திமுக வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் லட்சுமணனும், கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக வேட்பாளர் மணிமாறன், வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன், சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பாமக வேட்பாளர் கசாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம், ஆலந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டியிடுகின்றனர்.

அண்ணா நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து திமுக வேட்பாளர் மோகன், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி, மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜுவை எதிர்த்து திமுக வேட்பாளர் சின்னம்மாள், நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமரஜை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோதிராமன், ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜனை எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் போட்டியிடுகின்றனர்.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் போட்டியிடுகிறார்.

தேர்தல் அறிக்கைகள்

பட மூலாதாரம், DMK

திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊக்க தொகை அளிக்கப்படும் என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளது பெரிதும் பேசப்பட்டது.

இதைத் தவிர கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர சட்டம் கொண்டுவரப்படும், நீட் தேர்வில் இருந்து வெளியேற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும், குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் உருவாக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தந்துள்ளது.

அதிமுக தனது அறிக்கையில், பேருந்தில் மகளிருக்கு சலுகை, விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, அம்மா வாஷிங் மெஷின் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்தது.

3,998 வேட்பாளர்கள்

234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3ஆயிரத்து 585 பேர், பெண் வேட்பாளர்கள்-411, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் புதன்கிழமை (24.3.2021) வெளியிட்டது. கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சென்னை ஆர்.கே.நகரில் 31 பேரும், சைதாப்பேட்டையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: