வட தமிழ்நாடு: வளங்கள் இருந்தும் உறங்கும் வளர்ச்சி, சீறும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
வேலூர் கோட்டை

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு,

வேலூர் கோட்டை

கோட்டை முதல் கோயில்கள் வரையில் பழம் பெருமைகள். ஆறுகள், கடல், மலை, காடு என்று முற்றிலும் மாறுபட்ட புவியியல். விவசாயம், சுரங்கங்கள், நெசவு, மீன்பிடித்தல் என்று மாறுபட்ட தொழில்கள். அருகே சென்னையும், பெங்களூரும். இத்தனையும் இருந்தாலும் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையே வட தமிழ்நாட்டின் முகவரி.

இந்த பின்தங்கிய பொருளாதாரம், சீறும் சுற்றுச்சூழல் கவலைகள் இவற்றுக்கு நடுவில்தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது வட தமிழ்நாடு.

இங்கே வட தமிழ்நாடு என்று சொல்லும்போது, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை (பழைய வேலூர் மாவட்டம்), விழுப்புரம், கள்ளக்குறிச்சி (பழைய விழுப்புரம் மாவட்டம்), திருவண்ணாமலை, கடலூர் என்ற 7 மாவட்டங்களையே குறிப்பிடுகிறோம்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களும் வடக்கிலே இருந்தாலும், அவை பெரும்பாலும் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் சென்னையைப் பிரதிபலிப்பவை. சென்னையின் நீட்சியாகவே இருப்பவை.

தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் வடக்கே இருப்பவை என்றாலும், அவற்றில் மேற்கு மாவட்டங்களின் தாக்கமே இருக்கும்.

எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை வட மாவட்டங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதை ஆராயும்போது மேலே குறிப்பிட்ட 7 மாவட்டங்களையே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

சென்னை, கடலூர், புதுச்சேரி, மரக்காணம் என்று கடல் வழி வாய்ப்புகளும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் செல்லும் இரண்டு பெரும் நெடுஞ்சாலைகளையும், ரயில் வழியையும் கொண்டிருந்தாலும், இந்த 7 வட மாவட்டங்களும் பின் தங்கிய நிலைமையிலேயே கிடக்கின்றன. தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியே இருக்கின்றன.

வருமானமும், வறுமையும்

2011-12ம் ஆண்டு கணக்குப்படி தலா நபர் வருமானத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 26-வது இடத்திலும், விழுப்புரம் மாவட்டம் 29-வது இடத்திலும் இருந்தன. பன்முக ஏழ்மைக் குறியீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஏழ்மை மிகுந்த 10 மாவட்டங்களின் பட்டியலில் (ஒருங்கிணைந்த) விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன. ஊரக, நகர்ப்புற ஏழ்மைப் பட்டியலிலும் இந்த வட மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. (2017-ம் ஆண்டின் தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன).

கடந்த 20 ஆண்டுகளில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகிய கட்சிகளும், வேறு சில சாதிக்கட்சிகளும் இந்தப் பகுதியிலேயே பெரிதும் வேர்கொண்டு எழுந்தன என்றபோதும் இந்தப் பகுதிக்கே உரிய தனித்துவமான பிரச்சனைகளை அவை பேசவோ, பிரதிநிதித்துவப்படுத்தவோ இல்லை.

புது டெல்லியில் குடியேறியிருக்கும் தமிழ்நாட்டவர்களை வட்டார வாரியாக வகைப்படுத்தினால், திருநெல்வேலி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஓரளவு வசதியான நிலையிலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான வறிய நிலையிலும் இருப்பதைக் காண முடியும். 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம், தலா நபர் வருமானம், நகர்ப்புற, ஊரக வறுமைக் குறியீடு ஆகியவற்றை வைத்துப் பார்த்தாலும் இந்த 7 மாவட்டங்கள் பின் தங்கிய நிலையை அறிய முடியும்.

புலம் பெயர்தலும், கொரோனா தாக்கமும்

பெரிதும் பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லும் ஊரக மக்கள் தொகையை அதிக அளவில் கொண்டிருப்பவையும் இந்த 7 மாவட்டங்கள்தான்.

பட மூலாதாரம், Human Development Report 2017

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் பன்முனை ஏழ்மைக் குறியீட்டின் அடிப்படையில் மிகுந்த ஏழ்மையான மாவட்டங்கள்.

பெரும்பாலும், வேளாண்மை, நெசவு, மீன்பிடி ஆகிய பாரம்பரியத் தொழில்களே இந்தப் பகுதியின் பரவலான வாழ்வாதாரம் என்றாலும், வேலூர், ராணிப்பேட்டை என்ற இரண்டு மாவட்டங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு வட்டமும், கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி, சிதம்பரம் ஆகியவைகளும் தொழில் சேவைத் துறைகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக உருப்பெற்றுள்ளன. குறிப்பாக வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சி.எம்.சி. மருத்துவமனை, பொற்கோயில், கோட்டை போன்றவற்றால் வேலூரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நடராஜர் கோயில், பிச்சாவரம் போன்றவற்றால் சிதம்பரமும் சேவை, சுற்றுலா மையப் பொருளாதாரமாக உருப்பெற்றுள்ளன. அதற்கடுத்தபடியாக திருவண்ணாமலை சிறிதளவு சுற்றுலா சார்ந்த பொருளாதாரமாக உருப்பெற்றுள்ளது.

கொரோனா முடக்க நிலை, இந்த சுற்றுலா சேவை மையப் பொருளாதாரத்தை அடித்து நொறுக்கியிருப்பது புதிய பிரச்னை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

திருவண்ணாமலை

அதே நேரம், பாலாறு, செய்யாறு, தென்பெண்ணை ஆகிய முக்கிய ஆறுகள் மணல் சுரண்டப்பட்டு, அதீத மாசுபாட்டுக்கு உள்ளாகி, மேலே அணைகள் கட்டப்பட்டதால் நீரோட்டம் தடைபட்டு வளம் குன்றியிருப்பது நீண்ட காலப் பிரச்சனை. இது இந்த வட்டாரத்தின் முக்கியத் தொழிலான வேளாண்மையை நீண்ட காலமாக நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் பல காரணிகளில் முக்கியமானது.

பாரம்பரிய தொழில்களின் சரிவு

ஆரணி, சிறுவந்தாடு பட்டு நெசவு, களம்பூர் அரிசி ஆலைகள், விழுப்புரம் தங்க நகைத் தொழில், வந்தவாசி பாய் உற்பத்தி போன்ற பாரம்பரியத் தொழில்கள் தொடர்ந்து படிப்படியாக தேய்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து அவற்றைக் காப்பாற்றிக்கொள்ளும் உள்ளார்ந்த வல்லமையோ, அதற்கு தேவையான அரசாங்க அல்லது தனியார்த் துறை ஆதரவோ நீண்டாகலமாக ஒருங்கிணைந்த முறையில் இங்கே கிடைக்கவே இல்லை.

பழைய தொழில்கள் நெருக்கடிக்குள்ளாகி உள்ள நிலையில், புதிய தொழில்களைத் தனக்கென தோற்றுவித்துக்கொண்டு தமது பொருளாதார முகத்தை மாற்றிக்கொள்ளும் முனைப்போ, அதற்குத் தேவையான திசைவழியைத் தேடும் தெளிவோ எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.

பொய்த்துப் போகும் பழைய தொழில்களைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கும், புதிதாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு வரும் பல்லாயிரம் இளைஞர்களுக்கும் பெரு நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று பிழைப்பைத் தேடுவது மட்டுமே சாத்தியமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Human Development Report 2017

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் தலா நபர் வருமானத்தின் அடிப்படையில் முதல் மற்றும் கடைசி பத்து மாவட்டங்கள்.

இந்த நிலைமையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இளைஞர்கள் கண்களில் தெரியும் ஒரே நம்பிக்கை ஒளி கல்விதான்.

கல்வி: வாய்ப்புகளும், சவால்களும்

இந்த 7 மாவட்டங்களில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் செயல்படும் 126 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன என்கிறார் அதன் ஓய்வு பெற்றப் பதிவாளர் முனைவர் வெ.பெருவழுதி. இவற்றில் 12 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், 12 கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள். இவை தவிர சுமார் 90 கல்லூரிகள் தனியார்க் கல்லூரிகள்தான் என்றாலும் அதில் மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்கிறார் அவர்.

இது தவிர, ஏராளமான பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் இந்த வட்டாரங்களில் நடக்கின்றன.

இந்தக் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்கள் உண்மையில் மாவட்டத்தின் பொருளாதார முகத்தை மாற்றுகிறார்களா? அவர்கள் என்ன மாதிரி வேலைகளுக்குச் செல்கிறார்கள்? பின் தங்கிய சமூகங்களில் இருந்து வரும் மாணவர்கள் அதிகாரம் பெறுதலை நோக்கி செல்வதற்கு அவர்களது படிப்பு எவ்வளவு தூரம் உதவி செய்கிறது?

இந்தக் கேள்விகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் அன்பரசனிடம் கேட்டோம். ஏற்கெனவே இந்திய மாணவர் சங்கத்திலும் நிர்வாகியாகச் செயல்பட்டவரான அன்பரசனின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

செஞ்சிக் கோட்டை

ஊரகப் பகுதிகளில் இருந்து வந்து பட்டப்படிப்பை முடிக்கிறவர்களில், குறிப்பாக, வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கில இலக்கியம் போன்ற கலைப்பிரிவு பாடங்களை எடுத்துப் படிக்கிறவர்களில் கணிசமானோர் புலம் பெயர் தொழிலாளர்களாகவோ, உள்ளூரிலோ சொற்ப ஊதியத்துக்கு சிறு கடைகளில் வேலை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறார் அவர். "இத்தகைய பாடங்களில் பட்டம் பெறுகிறவர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்குச் செல்லும்போது அவர்களிடம், மொழித் திறன்கள், மென் திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை போதிய அக்கறையோடு போதிக்கப்படுவதில்லை, கற்கப்படுவதில்லை. இதுவே நல்ல வேலைவாய்ப்பு மூலம் வாய்ப்புகளின் படிக்கட்டில் ஏறிச் செல்வதற்கு இயலாதவர்களாக அவர்களை ஆக்கிவிடுகிறது. பொறியியல் பட்டதாரிகளுக்கும் இது நேர்கிறது" என்கிறார் முனைவர் பெருவழுதி.

பழைய தொழில்கள் தொடர்ந்து நசிவு, ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் சீரழிவு, பெருநகரம், துறைமுகம், சாலை, ரயில் இணைப்பு ஆகியவை இருந்தபோதிலும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டடைய முடியாத மந்த நிலை ஆகியவை நாள்பட்ட சிக்கலாக நீடித்து வருகின்றன. இந்நிலையில், பாலைவனச் சோலையாக ஆங்காங்கே ஆறுதல் அளித்து வந்த சேவை, சுற்றுலாத் தொழில்துறை கொரோனாவால் எதிர்கொண்டுள்ள சிக்கல் சமூகத்தின் அடிமட்டத்தில் பெரும் பொருளாதார, சமூக நெருக்கடிகளையும், அவநம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் ஒருவர்.

இந்த உணர்வும், நெருக்கடியும் இந்த தேர்தலுக்கான பெருங்கதையாடலில் (grand narrative) இடம் பெறவில்லை என்றாலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, குறிப்பாக பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவாலாகவே இருக்கும். ஆனால், இந்த வட்டாரப் பிரச்னைகள், பிரச்னைகளின் வட்டார சிறப்பியல்புகள் மீது உரிய அக்கறையோடு கவனம் செலுத்தி, அதற்கான நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்வைத்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டிக்கொள்ள எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

எடுத்துக்காட்டாக, விழுப்புரம் நகைத் தொழில் நசிவு குறித்துப் பேசிவரும் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி அமைப்பாளர் சி.உமாபதி, "விழுப்புரம் நகைத் தொழில் செழித்த ஊர். இப்போதும், விழுப்புரம் தங்க மூக்குத்திகள் இந்திய அளவில் செல்கிறவை. நகைக் கடைகளும், நகை வணிகமும் பெருகி வரும் நிலையில், அங்கே விற்பனை ஆகிற நகைகளில் 95 சதவீதம் வட மாநிலங்களில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நகைகளாக மாறிவிட்டன. எனவே, வணிகம் வளர்ந்திருந்தாலும், தொழில் நசிந்துவிட்டது. வேலைவாய்ப்பும், கூலியும் குறைந்துவிட்டது. நவீன தொழில்நுட்பத்துக்கு மாறிச் செல்லத் தேவையான பயிற்சி, முதலீடு ஆகியவை உள்ளூர் கைவினைஞர்களுக்கு கிடைக்கவில்லை. இந்தக் குறைபாட்டை அரசாங்கம் சரி செய்திருக்கவேண்டும்" என்கிறார்.

வட தமிழ்நாட்டில் நசிவை சந்திக்கிற பாரம்பரிய தொழில்கள் அனைத்துக்கும் இது ஏறக்குறைய பொருந்தும்.

ரயில்வே திட்டங்கள்: ஆண்டுக்கு ரூ.1,000 ஒதுக்கீடு

வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரயில் இணைப்பு மிகக் குறைவு என்பதும் இதன் பின் தங்கிய நிலைக்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக வட தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாவட்டமான திருவண்ணாமலை தலைநகர் சென்னையோடு அதிகம் தொடர்புடையது. திருவண்ணாமலையில் இருந்து 15-20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சென்னைக்குப் புறப்படும். ஆனால், சென்னையோடு திருவண்ணாமலைக்கு ரயில் இணைப்பு இல்லை. திருவண்ணாமலை வழியாக ரயில் பாதை செல்கிறது. ஆனால், சென்னையை நேரடியாக இணைக்கும் ரயில் இல்லை.

இதனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திண்டிவனம் - நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை என இரண்டு ரயில் பாதைகளை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. திண்டிவனம் - திருவண்ணாமலை திட்டத்தை பின்னால் விரிவுபடுத்தி ஜோலார்பேட்டையோடு இணைப்பதன் மூலம் ஒருபுறம் பெங்களூரையும் மறுபுறம் சென்னையையும் இணைக்கும் திட்டம் இது. இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்படுத்தும் பணிகள் கூட சுமார் 25 சதவீதம் நடந்துவிட்டன. பல இடங்களில் சிறுபாலங்கள் கட்டப்பட்டுவிட்டன.

மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு இந்த திட்டங்கள், முடங்கிக் கிடக்கின்றன என்கிறார் மதிமுக மாநில மாணவரணித் துணைச் செயலாளர் பாசறை பாபு.

கடந்த இரண்டாண்டுகளாக திட்டத்துக்கு ரூ.1,000 மட்டுமே நிதியாக ஒதுக்கப்படுகிறது என்கிறார் அவர்.

நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும்கூட மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த முடியும். ஆனால், அந்த விஷயத்தில் மாநில அரசிடமும் முனைப்பு இல்லை என்கிறார் இந்த திட்டம் குறித்து விவரமறிந்த ஆனால், பெயர் வெளியிட விரும்பாத அலுவலர் ஒருவர். இந்த இரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால், சுமார் 10 மாவட்டங்கள் இணைக்கப்படும் என்கிறார் அவர்.

இது குறித்து திருவண்ணாமலை தொகுதி எம்.பி. சி.என். அண்ணாதுரையிடம் கேட்டபோது, "தமிழ்நாடு ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. உண்மைதான். நானும் நாடாளுமன்றத்தில் 2 முறை இந்த திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறேன். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே போர்டு சேர்மன் ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இந்த ஆண்டு எப்படியும் போராடி திருவண்ணாமலை - காட்பாடி- சென்னை தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமாவது கேட்டுப் பெற்றுவிட முடியும் என்று கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.

குரோமியம் குவியல் - எட்டு வழிச்சாலை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் தோல் பதனிடும் தொழில் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலியது. ஆனால், அந்த தொழில் மூலம் ஏற்படும் மாசுபாடு, நிலத்தடி நீரை, பாலாற்றினை மாசுபடுத்தி விவசாயத்தைப் பாதித்தது. ராணிப்பேட்டை குரோமியம் கழிவுக் குவியல், தமிழ்நாட்டின் முக்கியமான சூழலியல் அச்சுறுத்தல்களில் ஒன்று. பாதுகாப்பான முறையில் 1.5 லட்சம் டன் குரோமியம் குவியலை அப்புறப்படுத்துவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே இருக்கிறது.

"சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம், 20 ஏரிகள், பல கிராமச் சாலைகள், 3 ஆயிரம் வீடுகள், ஆயிரக் கணக்கான அரசு கட்டடங்கள், காட்டு நிலம் ஆகியவற்றை கையகப்படுத்தி போடுவதாக திட்டமிடப்பட்ட 8 வழிச்சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. வேளாண்மைக்கும், சூழலுக்கும் இந்த திட்டம் கேடு என்று எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.

இந்த திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் இந்த சாலைத்திட்டம் கையில் எடுக்கப்படும் என்ற அச்சத்தை மக்களுக்குத் தந்திருக்கிறது. இருபுறமும் சுவர் எழுப்பி அமைக்கப்படும் இந்த சாலை அதிவேக வாகனங்களுக்கானது" என்கிறார் எட்டுவழிச்சாலை எதிர்ப்பியக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.அபிராமன். திமுக அதன் தேர்தல் அறிக்கையில் எட்டுவழிச் சாலை திட்டம் கைவிடப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

பட மூலாதாரம், DOMINIQUE FAGET

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

சுரங்கத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட நகரிய நடுத்தர வர்க்கப் பொருளாதாரமாக உருப்பெற்றுள்ளது நெய்வேலி. இது தவிர, இந்த நிலக்கரிச் சுரங்கத்தால் உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு நேர்மறையான பங்களிப்பு ஏதுமில்லை. சுற்றியுள்ள வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றிருப்பதற்கு இந்த சுரங்கமே காரணமாக காட்டப்படுகிறது.

மாவட்டப் பிரிவினை

இந்த 7 மாவட்டங்களும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை 4 மாவட்டங்களாக இருந்தவை. (அதற்கு முன்னே 80களின் பிற்பகுதிவரை இவை வடாற்காடு, தென்னாற்காடு என்ற இரண்டே மாவட்டங்களாக இருந்தவை).

கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருவாரூர் போன்ற சின்னஞ்சிறு மாவட்டங்கள் தோன்றி ஓரிரு பத்தாண்டுகளுக்குப் பிறகும்கூட இந்த நான்கு வட மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் மிகப்பெரிய மாவட்டங்களாக நீடித்தன. இந்நிலையில், வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் தோன்றியிருப்பது நிர்வாக ரீதியாக பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அரசு நிர்வாகத்தை அணுகுவதை எளிதாக்க வழிவகை செய்துள்ளன.

மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் முடிவை தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக கடைசி நிமிடத்தில் அதிமுக அரசு அறிவித்தது. இது வன்னியர்கள் மத்தியிலும், பிற சாதி மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த 7 மாவட்டங்கள் 40 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கின்றன. வன்னியர்கள், தலித்துகள், முதலியார்கள், உடையார்கள், கோனார்கள் முதலிய சாதிகளை கணிசமான எண்ணிக்கையில் கொண்டிருக்கும் இந்த வட்டாரம், சைவ, வைணவ, முஸ்லிம், கிறிஸ்துவ, தமிழ் சமண சமயங்களைப் பின்பற்றுவோரைக் கணிசமாக கொண்டுள்ளது. குறிப்பாக வந்தவாசி, ஆரணி, போளூர், செஞ்சி போன்ற வட்டங்கள் திகம்பர சமணப் பிரிவின் பழங்கால சின்னங்கள், குகைக்கோயில்கள் நிரம்பியவை. திருக்கோயிலூர், திருவரங்கம் ஆகிய வைணவ திவ்ய தேசங்களும், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற சைவத் தலங்களும் இடம்பெற்றுள்ள இந்த வட தமிழகப் பகுதியில்தான், சம்பந்தர் பிறந்த திருவெண்ணெய்நல்லூர், அப்பர் பிறந்த திருவாமூர் ஆகியவையும் உள்ளன. முழு நாத்திக கிராமமான கீழ் செக்கடிக்குப்பமும் இங்கே உண்டு. திராவிட இயக்க, பொதுவுடமை இயக்க வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற நகரங்கள் பல இங்கே உண்டு.

பின்தங்கிய நிலைமைகள் இருந்தபோதும், சமூக அமைதிக்கும், முதிர்ச்சியான அரசியல் செயல்பாடுகளுக்கும் பெயர் பெற்ற இந்த வட்டாரம், உணர்ச்சிகளின் அடிப்படையில் இல்லாமல் தமது அரசியல் பார்வைகளின் அடிப்படையில் தேர்தல்களை முடிவு செய்வதாகப் பெயர் பெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த வட்டாரத்தின் 40 தொகுதிகள் எந்தப்பக்கமாக சாயும் என்பது தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: