எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: ரசிகர் கூட்டத்தை வாக்குகளாக மாற்றிய சினிமா, அரசியல் வெற்றிக் கதை

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
எம்ஜிஆர்

பட மூலாதாரம், TWITTER

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர், திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர். அரசியல் ஈர்ப்பால் தொடக்கத்தில் காங்கிரஸிலும், பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், பின்னாளில் அஇஅதிமுக என்ற தனிக்கட்சி கண்டு மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றினார்.

நடிப்புத்துறையில் ஆர்வம் காட்டிய சகோதரர்கள்

எந்த அரசியல் கட்சிக்கு எதிராக புதிய கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தாரோ அந்த அரசியல் கட்சி தனது ஆயுள் முடிவுறும்வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத அளவுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவைப் பெற்றிருந்தார் எம்ஜிஆர்.

அவர் மறைந்து 34 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றிருக்கிறார் எம்ஜிஆர்.

இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீதே இருந்தது.

அந்த காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.

திருப்பம் தந்த படங்கள்

பட மூலாதாரம், TWITTER

14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.

அந்த ஒரு திருப்பத்திலேயே தனக்கான பாதை எது என்பதை உணர்ந்தவராக தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும், அவை சாமானியர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு கைகொடுத்தவை, எம்ஜிஆர் நடித்த கதை வசனங்கள் மற்றும் திரைப்பாடல்கள்.

1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதேபோல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.

திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு

பட மூலாதாரம், TWITTER

ஆனால், அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை எம்ஜிஆர் இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

இருவரும் திரைத்துறையிலும் அதற்கு முன்பும் மேடை நாடக வசனங்கள், திரையுலக பிரவேசத்துக்கு முந்தைய நட்புறவை கொண்டிருந்தவர்கள்.

அந்த உறவுதான் திமுக தலைவர் அண்ணாதுரையிடம் எம்ஜிஆருக்கு நட்பை ஏற்படுத்தித் தர கருணாநிதியை தூண்டியது. எம்ஜிஆருக்கு பொது மக்களை வசீகரிக்கக் கூடிய ஆற்றலும் திறமையும் இருப்பதை உணர்ந்த அண்ணாதுரை, அவர் மூலம் வெகுஜன மக்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க முற்பட்டார்.

1962இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், TWITTER

தமிழக அரசியல் வரலாற்றில் 1960களில் ஈடு இணையற்ற இரட்டையர் போல நெருங்கிய நட்பை கருணாநிதியும் எம்ஜிஆரும் பாராட்டி வந்தனர். அந்த காலகட்டங்களில் எம்ஜிஆர் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி.

அதனால் திரையில் எம்ஜிஆர் என்ன பேசினாலும், அது அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு செய்தி விடுக்கும் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அதுவரை தேசிய அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையே நிலவிய போட்டியில், திராவிட இயக்க அரசியலை தூக்கிப்பிடிக்கும் முகமாக எம்ஜிஆரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் அங்கீகரித்தன.

எம்ஜிஆரை சுட்ட எம்.ஆர். ராதா

பட மூலாதாரம், TWITTER

திரைத்துறை பயணத்தில் முன்னணி வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர். ராதா. இவரும் எம்ஜிஆரும் சேர்ந்து 25 படங்கள் நடித்துள்ளனர். எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம் தொடர்பாக ஒருமுறை ஒரு தயாரிப்பாளருடன் எம்ஆர். ராதா எம்ஜிஆரை சந்திக்கச் சென்றார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் எம்ஜிஆரை எம்ஆர் ராதா சுட்டதாக சர்ச்சை எழுந்தது.

உண்மையில் அந்த அறையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது. அந்த சம்பவத்தில் துப்பாக்கி தோட்டா, எம்ஜிஆரின் இடது காதருகே துளைத்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது இடது காதின் கேட்கும் திறன் குறைந்தது. ஆனாலும், தோட்டா தொடர்ந்து கழுத்துப் பகுதியிலேயே தங்கியது. அது நாளடைவில் எம்ஜிஆரின் குரல் வளையை பாதித்தது.

இந்த நிலையில், 1969இல் அண்ணாதுரை காலமானார். அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் திமுகவில் கட்சி நிதியில் முறைகேடு நடப்பதாக எம்ஜிஆர் குற்றம்சாட்ட, இரட்டையர் போல உறவைப் பாராட்டி வந்த எம்ஜிஆரும் கருணாநிதியும் பிரிந்தனர். அதன் விளைவு, திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கம் என்ற வடிவில் எதிரொலித்தது.

ஆனால், அத்துடன் அரசியல் பொதுவாழ்க்கை முடிந்து விடவில்லை என்று கருதிய எம்ஜிஆர். 1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தனது புதிய கட்சி அண்ணாவின் கோட்பாடுகளை பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.

இது பற்றி ஒருமுறை எம்ஜிஆரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கருணாநிதியின் கொள்கைகளை திமுக பின்பற்றுகிறது. ஆனால் அதிமுக, அண்ணாவின் கொள்கையை பின்பற்றுகிறது என்று கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அதீத முன்னுரிமை

பட மூலாதாரம், JAYALALITHA

திரைப்பட உலகில் எம்ஜிஆருடன் சேர்ந்து நடிக்க பல முன்னணி கதாநாயகிகள் தவமிருந்த காலகட்டத்தில், தன்னை விட 30 வயது இளையவரான ஜெயலலிதாவுடன் எம்ஜிஆர் நடித்த படங்கள் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றி படங்களாயின. இதனால், தனது அடுத்தடுத்த படங்களில் ஜெயலலிதாவுடன் நடிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.

ஆனால், ஜெயலலிதாவுடனான திரை நட்பு பின்னாளில் தனிப்பட்ட வாழ்விலும், அரசியலிலும் அவருக்கு எம்ஜிஆர் கொடுத்த முக்கியத்துவத்தை எம்ஜிஆரின் குடும்ப உறவுகளும், சில தலைவர்களும் விரும்பவில்லை. இருந்தபோதும், ஜெயலலிதாவின் இளமை, துடிதுடிப்பு, புத்திசாலித்தனம் எம்ஜிஆரை ஈர்த்தன. அதனால், அவருக்கு அரசியலிலும் பொதுவாழ்விலும் புதிய, புதிய பொறுப்புகளை கொடுத்தார் எம்ஜிஆர்.

அடுத்த தலைமுறையை கவர்ந்த திட்டங்கள்

எம்ஜிஆர் தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு, இலவச பற்பொடி, சீருடை, காலணி போன்றவை சிறார்கள் மனதில் எம்ஜிஆருக்கு ஒரு நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் எம்ஜிஆரின் அரசியலை கொண்டு சேர்க்க உதவியது.

1975ஆம் ஆண்டில் நாட்டில் அவசரநிலையை இந்திரா காந்தி அரசு அமல்படுத்திய வேளையில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக அவரது அரசு கலைக்கப்பட்டது. பின்னர், 1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, மிகப்பெரிய பலத்துடன் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால், அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று, மொரார்ஜி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது. அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார் எம்ஜிஆர். பின்னர் சரண் சிங் அரசுக்கும் தமது ஆதரவை 1979ஆம் ஆண்டுவரை அளித்தார் எம்ஜிஆர்.

சரண் சிங் ஆட்சிக்கு பிறகு, நடந்த தேர்தலில், இந்திரா காங்கிரஸுடன் திமுக கூட்டணி சேர்ந்தது. அதில் ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் கட்சி, இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. இந்திரா காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணி காரணமாக, 1976இல் எந்த காரணத்துக்காக தனது அரசை அப்போதைய மத்திய அரசு கலைத்ததோ அதுபோலவே எம்ஜிஆர் ஆட்சியை கலைக்க கருணாநிதி கொடுத்த அழுத்தத்தால் எம்ஜிஆர் அரசு 1980இல் கலைக்கப்பட்டது.

அப்போது சில மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்த பிறகு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த அரசே 1987ஆம் ஆண்டில் எம்ஜிஆர் சாகும்வரை மாநிலத்தில் தொடர்ந்தது.

இதற்கிடையே, 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் நியூயார்க்கில் தமது சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருந்தார் எம்ஜிஆர்.

இந்திரா மறைவுக்குப் பிறகு மத்தியில் அவரது மகன் ராஜிவ் காந்தி தலைமையில் அரசு அமைந்தது. அப்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டது. இந்திராவின் படுகொலை, எம்ஜிஆரின் உடல் சுகவீனம் என இரண்டும் சேர்ந்து அந்த கூட்டணிக்கு அனுதாப அலை ஏற்பட்டதில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தனது 10 ஆண்டுகால தொடர் முதல்வர் பதவியில் மத்தியில் ஆட்சி செலுத்திய இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், மீண்டும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என ஐந்து அரசுகளை பார்த்தவர் எம்ஜிஆர்.

அரசியலிலும் சமூக வாழ்விலும் தனக்கென ஒரு முத்திரையைப்பதித்த எம்ஜிஆரின் தனி வாழ்க்கை ஆளுகை மிகவும் விந்தையானது என்பதை அவருடன் அரசியல் செய்தவர்கள் அறிந்து வைத்திருந்தனர். தனக்கு எதிராக திரும்பியவர்களை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதவராக காணப்பட்டார் எம்ஜிஆர்.

தனது அமைச்சரவையில் இருந்த சகாக்களானாலும் சரி, எதிர் கட்சி தலைவர்களானாலும் சரி எப்போதும் அவர்களை ஒருவித சந்தேக கண்ணோத்துடனேயே பார்த்து வந்தார் எம்ஜிஆர். அவரது ஆட்சி நிர்வாகத்தில் எல்லாமே ஒரே தலைமையின் உத்தரவுக்குக் கீழேயே இருந்தன.

குடும்ப வாழ்க்கை

பட மூலாதாரம், TWITTER

எம்ஜிஆர் திரைத்துறையில் கொடி கட்டிப்பறந்த காலத்தில் தங்கமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் உடல் சுகவீனத்தால் உயிரிழந்தார். பிறகு இரண்டாவதாக சதானந்தவதியை திருமணம் செய்து கொண்டார்.

அவரும் காச நோயால் உயிரிழக்க நேர்ந்தது. பிறகு மூன்றாவது முறையாக திரைப்பட நடிகையாக இருந்த ஜானகியை எம்ஜிஆர் மணம் முடித்தார். எம்ஜிஆரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது முதல் கணவர் கணபதியை விவாகரத்து செய்தார் ஜானகி. ஆனால், இந்த மூன்று பெண்களுடனான திருமணங்கள் மூலம் எம்ஜிஆருக்கு வாரிசு பிறக்கவில்லை.

பட மூலாதாரம், TWITTER

முன்னதாக, 1984இல் சிறுநரக பாதப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளால் சுகவீனம் அடைந்தார் எம்ஜிஆர். அதன் பிறகு வெளிநாட்டு மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர் நடந்த தேர்தலில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே வென்ற எம்ஜிஆர், ஆட்சியில் தொடர்ந்தபோதும், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், எம்ஜிஆரின் உயிர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிரிந்தது.

அவரது இறப்புக்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: