அதிமுக விஐபி வேட்பாளர்கள் பிரசாரத்தில் வீட்டுப் பெண்களை ஈடுபடுத்தும் புதிய காட்சி

  • ஏ.ஆர்.மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக
அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி அவர் தந்தைக்காக திருமங்கலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
படக்குறிப்பு,

அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி அவர் தந்தைக்காக திருமங்கலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னணி கூட்டணிகள் இரண்டுமே பெண்களை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட மிக குறைவான இடங்களையே ஒதுக்கியிருக்கின்றன.

திமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அக்கட்சியின் நன்கு அறியப்பட்ட பெண் முகமாகத் தன்னை வளர்த்து கொண்டும், தக்கவைத்து கொண்டும், பிரச்சாரங்களில் பங்கெடுத்து வாக்கு சேகரிக்கிறார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவிற்கு ஒரு பிரபல பெண் முகம் இல்லாத நிலையே இருக்கிறது.

இதை நன்கு உணர்ந்த சில அமைச்சர்களும், முக்கிய வேட்பாளர்களும் தங்கள் மகள்களையும், குடும்பத்து பெண்களையும் தங்களுக்காக பிரசாரத்தில் களம் இறக்கியுள்ளனர். இவர்கள் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் கண்டிராத முகங்கள்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் ஒரே மகள் பிரியதர்ஷினி, திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான வி.வி. ராஜன் செல்லப்பா மனைவி மகேஸ்வரி, மருமகள் வனிதா ராஜ்சத்யன், 10 வயது பேத்தி, சகோதரி சந்திரகாந்தா ஆகியோர் தொகுதி மக்களை, குறிப்பாக பெண்களை, சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர். அதே போல் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மருமகளும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் மனைவியுமான ஆனந்தி அவர் மாமனாருக்காக போடிநாயக்கநூரில் பெண்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார்.

அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை நிர்வகிக்கும் பிரியதர்ஷினி தன் தந்தையுடனும், அவர் நடத்தும் அமைப்பில் பணியாற்றும் பெண்களுடனும் மக்களை சந்தித்து தன் தந்தைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். அதே போல் ராஜன் செல்லப்பாவின் குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் செல்லப்பாவிற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் க. பொன்னுத்தாய் நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கும் அவருக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் திரண்டு வார்டு வாரியாகப் பிரிந்து தீவிரமாகக் களப்பணி ஆற்றுகின்றனர். அதற்கு ஈடுகொடுக்கத்தான் செல்லப்பா அவர் குடும்பத்து பெண்கள் வாக்கு சேகரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதித்திருப்பதாகக் கூறுகின்றனர் அதிமுகவினர்.

படக்குறிப்பு,

முன்னாள் மதுரை மேயரும், அதிமுக திருப்பறங்குன்றம் வேட்பாளருமாகிய ராஜன் செல்லப்பாவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் 15 வயது மகள் ரித்தன்யா பிரியதர்ஷினியும் தன் தந்தையுடன் பிரச்சாரத்திற்கு வாகனத்தில் கூடவே சென்று ஆங்காங்கே பேசுகிறார். சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலிலும், தன் மகளுக்கு 10 வயதே ஆகியிருந்த போதிலும், அவரை தன்னுடன் பிரச்சாரத்திற்கு கூட்டிச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார் விஜயபாஸ்கர். அப்போது அது சர்ச்சையாகி குழந்தைகளை எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

திமுக தலைவர்களின் வீட்டு பெண்கள் பொதுவாகவே தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுவதுண்டு. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திமுக துணை பொது செயலாளரும் ஆத்தூர் வேட்பாளருமாகிய ஐ. பெரியசாமி மகள் இந்திரா போன்றோர் இம்முறையும் அந்தந்த தொகுதிகளில் பெண் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தன் வீட்டு பெண் பிள்ளைகளை அதிமுக தலைவர்கள் இம்முறை பிரச்சார களத்தில் அறிமுகம் செய்திருப்பதை பற்றி போடியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "ஜெயலலிதா இருந்தவரை பெண்களை ஈர்க்க அவர்கள் பிரச்சாரம் மட்டுமே எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு பிறகு கட்சி பலவீனமடைந்து விட்டது. அதனால் அவரவர் தொகுதியில் வேட்பாளர்கள் அவர்கள் வீட்டு பெண்களை வாக்கு சேகரிப்பிற்கு களம் இறக்கியுள்ளனர்," என்கிறார்.

மற்றொரு நிர்வாகியோ, "உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதனால், அதை மனதில் வைத்து அவர்களை பொதுவெளிக்கு வர அனுமதித்துள்ளார்கள் சில முக்கிய வேட்பாளர்கள். அதற்கு ஒரு அறிமுக மேடை தான் இந்த பிரச்சாரக் களம். அரசியலுக்கு வருவதற்கு உள்ளாட்சி தேர்தலே நுழைவுவாயில். அந்தக் கணக்கில்தான் தன் மகள், மருமகள் போன்றவர்களை வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்களே ஒழிய பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை," என்கிறார்.

இது குறித்து கருத்து கேட்ட போது, காந்திகிராம பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் க. பழனித்துரை, "முன்பு தமிழ்நாட்டில் அரசியல் சொற்பொழிவுகள் சக்தி வாய்ந்ததாக இருந்தன. இப்போது அது இல்லை. பணப் பரிமாற்றத்தில் தான் வாக்குகள் சேகரிக்க முடியுதே தவிர, மக்களை சித்தாந்தத்தின் மூலம் ஈர்க்க முடியவில்லை.

பணம் இருந்தால் தான் கட்சிகள் செயல்படமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. அரசியல்வாதிகள் நிதிக்குவியலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் குவியலை பாதுகாக்க குடும்ப உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். மந்திரிகளும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகிறார்கள். அரசியல் சார்பு இருந்தால்தான் சேர்த்த பணத்தை பாதுகாக்க முடியும். அதனால் தன் வாரிசுகளை அரசியலுக்குள் திணிக்கிறார்கள். இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. மற்றபடி அரசியலில் ஆண் பெண் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இல்லை," என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: