முதல்வர் குறித்த ஆ. ராசாவின் பேச்சுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு; ஸ்டாலின் எச்சரிக்கை

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஆ. ராசா

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா முதலமைச்சரைப் பற்றி பேசிய பேச்சு ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், தி.மு.க. தலைவர்கள் அதனைக் கண்டிக்கத் துவங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் பேசும் பேச்சுகள் சிறு சிறு வீடியோக்கள் வடிவில் பரப்பப்பட்டுவருகின்றன. இதுபோன்ற பேச்சுகள், சம்பந்தப்பட்ட பேச்சாளர்களுக்கு பிரபலத்தை அளிக்கும் அதே நேரத்தில், கண்ணியக்குறைவாகப் பேசும் பேச்சாளர்களுக்கு சிக்கல்களையும் உருவாக்கிவிடுகின்றன.

சமீபத்தில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இதுபோன்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஆ.ராசா என்ன பேசினார்?

"ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும் எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார்.

அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.

ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை இ.பி.எஸை யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிகைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்ஸுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது.

நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற தில்லியிலிருந்து மோடி என்கிற டாக்டர் வருகிறார்" என்று தொடர்ந்து பேசினார் ஆ. ராசா.

இதில், நடுவில் உள்ள சில பகுதிகள் நீக்கப்பட்டு, ஆ. ராசாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் இதனைக் கடுமையாக கண்டிக்கத் துவங்கினர். ஏற்கனவே, மு.க. ஸ்டாலினின் அந்தஸ்தையும் எடப்பாடி கே. பழனிச்சாமியின் அந்தஸ்தையும் ஒப்பிட்டு ஆ. ராசா பேசியிருந்த பேச்சும் கண்டனத்திற்குள்ளாகியிருந்தது.

இதையடுத்து, இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி. "அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்" என தனது ட்வீட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று இந்த விவகாரம் பெரிதானது. அ.இ.அ.தி.மு.கவின் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் சி. திருமாறன் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய புகாரில் ஆ. ராசா தொடர்ந்து இவ்வாறு பேசுவதால், அவர் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரினார்.

இதற்குப் பிறகு ஊடகம் ஒன்றிடம் பேசிய ஆ. ராசா, தனது பேச்சு வெட்டி, ஒட்டப்பட்டு பரப்பப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளபப்ட்டிருப்பதாகக் கூறினார். இருந்தபோதும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருந்தது.

பேச்சில் கண்ணியம் வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில்தான் தி.மு.க. தலைமையும் இது போன்ற பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அத்தகைய பேச்சுகளை கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட மூலாதாரம், Getty Images

தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் ஐ. லியோனி, தி.மு.கவின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும்போது, "வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துக் குடித்து பெண்களின் இடுப்பு பெருத்துப் போய் பேரல் போல் ஆகிவிட்டனர்" என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சின் வீடியோவை பகிர்ந்த பா.ஜ.கவின் காயத்ரி ரகுராம், "இதுபோன்ற ஆணாதிக்கவாதிகளுக்கு கனிமொழி என்ன சொல்ல விரும்புகிறார்?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில்தான் ஆ. ராசாவின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: