கருணாநிதியின் முதல் தேர்தல் அனுபவம்: குளித்தலை நினைவுகளைப் பகிரும் நண்பர் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

கருணாநிதி

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல், திமுகவுக்கு வித்தியாசமானது மற்றும் முக்கியமானது. காரணம் அதன் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அக்கட்சி மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. அதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சித் தலைமையை அதிகாரப்பூர்வமாக ஏற்ற பிறகு நடக்கும் முதலாவது மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இது.

ஆனால், இந்த தேர்தல் அனுபவத்தை முதல் முறையாக கருணாநிதி பெற்ற காலம் வரலாற்றில் நிலைத்திருக்கிறது. ஆம். கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டது, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில்.

தேர்தல் தொடர்பான தகவல்களை ஏ டூ இசட் வழங்கும் அச்சு ஊடகங்கள், நொடிக்கு நொடிக்கு அலறும் காட்சி ஊடகங்களின் பிரேக்கிங் செய்திகள், இவை இரண்டையும் பின்னுக்கு தள்ளி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தேர்தல் செய்திகள் இந்த சட்டப்பேரவைத் தேர்தலை பரபரப்பாக்கியுள்ளன.

ஆனால், அச்சு ஊடகம் மட்டுமே இருந்த காலகட்டம் அது. அதுவும் பெரிய அளவில் நாடு வளர்ச்சி அடைந்திராத 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்தான் திமுக முதன் முதலில் தேர்தல் களம் கண்டது. அத்தகைய தேர்தல் அனுபவம் கருணாநிதிக்கு எப்படி இருந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான 83 வயதாகும் கரூரைச் சேர்ந்த சு.ப. ராசகோபாலன். அவரது சொற்களிலேயே நீள்கிறது இந்தக் கட்டுரையின் இனி வரும் பகுதி.

"1957ஆம் ஆண்டில்தான் திமுக முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது கலைஞர் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஏனெனில் அவர் பிறந்த திருக்குவளை அந்த தொகுதியில் தான் இருந்தது. ஆனால் அண்ணா, கலைஞரை குளித்தலை தொகுதியில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டார்."

அதை ஏற்று கலைஞர் முதன் முதலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது கலைஞரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டுப்புத்தூர் தர்மலிங்கம் என்பவரும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வக்கீல் சண்முகமும் போட்டியிட்டனர்.

அந்த காலத்தில் குளித்தலை தொகுதி ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் இருந்தது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம் ஆக இருந்தன.

குளித்தலை தொகுதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூரில் தொடங்கி நங்கவரம், நச்சலூர், மருதூர், பெட்டவாய்த்தலை, குளித்தலை, லாலாபேட்டை, கரூர் நகர் பகுதியிலுள்ள திருமாநிலையூர் என்ற இடம்வரை விரிவடைந்திருந்தது.

அந்த தொகுதியின் ஒருபுறம் காவிரிக்கரை அமைந்திருத்தாலும், அதன் மறுபுறம் வானம் பார்த்த பூமி. பிரசாரத்தின்போது மதிய நேரத்தில் எங்காவது உணவருந்தலாம் என்றாலும் இப்போது இருப்பது போல உணவு விடுதிகள் அந்த காலத்தில் கிடையாது.

தேர்தல் பிரசாரத்தின்போது சுவர்களில் விளம்பரம் செய்யும் முறையை தொடங்கியவர் கருணாநிதிதான். இதற்காக , தான் பிறந்த ஊரான திருவாரூரிலிருந்து ராஜன் என்ற ஓவியரை தொகுதிக்கு வரவழைத்திருந்தார் கலைஞர்.

இதேபோல, லாலாபேட்டையில் இருந்த ராமலிங்கம் என்ற ஓவிய ஆசிரியர். இவர்கள் இருவரின் கைவண்ணத்தில் தான் திமுகவின் சின்னமான உதயசூரியன். சுவர்களில் மிளிர்ந்தன. சுவர் விளம்பரங்களில் பொதுமக்களை கவரும் வகையில்,

நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார்

நோட்டு அடித்தால் போதாது.

காகிதப்பூ மணக்காது

காங்கிரஸ் ஆட்சி இனிக்காது

டாட்டா பிர்லா கூட்டாளி

பாட்டாளிக்கு பகையாளி.

போன்ற கலைஞரின் வசனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.மற்றொரு புதிய முறையையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் டோர் ஸ்லிப் எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை.

அதாவது ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது அந்த வீட்டின் கதவில் எங்கள் ஓட்டு எங்கள் வீட்டுப் பிள்ளை கருணாநிதிக்கே என்ற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை ஒட்டி விடுவார்கள்.

இதற்காகவே, கலைஞர் பிரசாரத்துக்கு செல்லும்போது, கூடவே பசை வாலி மற்றும் துண்டு பிரசுரங்களுடன் தொண்டர்கள் சுற்றி, சுற்றி வருவார்கள். அதே போல, எங்கள் வீட்டுப்பிள்ளை எங்கள் வாக்கு கருணாநிதிக்கு என்று பொறிக்கப்பட்ட மாத காலண்டர்களையும் வீடுதோறும் வழங்கியவர் கருணாநிதி.

கலைஞரின் பிரசாரத்திற்காக அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அண்ணா எம்.ஜி.ஆர் ஆகியோர் தங்களது பேச்சு திறமையால் வாக்கு சேகரித்தனர். என்.எஸ். கிருஷ்ணன் வில்லுப்பாட்டு நடத்தி வாக்கு சேகரித்தார்.

அப்போது கலைஞரிடம் ஒரு ஃபியட் கார் இருந்தது. அந்த பேர் காரில் முன்புறம் மூன்று பேர் பின்புறம் மூன்று பேர் என ஆறு பேர் பயணித்துதான் தொகுதி முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டார் கலைஞர்.

பிரசாரத்தின் போது ஆங்காங்கே தொண்டர்களின் வீடுகளில் தங்கிக் கொள்வார் கலைஞர். லாலாபேட்டையில் முத்து நாயுடு என்ற திமுக தொண்டர் வீட்டில் தங்கிக் கொள்வார்.

அதேபோல கரூர் பகுதிக்கு பிரசாரத்திற்கு வரும்போது அங்குள்ள வேலுப்பிள்ளை என்பவரின் வீட்டில் தங்குவார். பிரசாரம் முடிந்து இரவு 12 அல்லது அதிகாலை இரண்டு மணிக்கு வருவார். அந்த நேரத்தில் இரவு உணவு விடுதிகள் எங்கேயும் திறந்திருக்காது. கலைஞர் கரூர் மார்க்கெட் ரோட்டில் எஸ்வி சாமியப்பன் என்ற லாரி உரிமையாளரின் லாரி செட் இருந்தது, அந்த செட்டில் தான் திமுக காரியாலயம் இயங்கி வந்தது. அதில் போய் கருணாநிதி தங்கிக் கொள்வார். கலைஞர் சாமியப்பனிடம் 2 ரூபாய் கொடுப்பார் அதில் எட்டு பொட்டலங்களில் இட்லி வாங்கி வருவார். அதை எல்லோரும் சாப்பிடுவோம்.

பட மூலாதாரம், KALAIGNAR KARUNANITHI FB

அந்த காலகட்டத்தில், தொலைபேசி அவ்வளவாக எளிதாக கிடைக்காத காலகட்டம். தற்போது கரூர் காவல் நிலையம் எதிரே, இப்போது உள்ள அஞ்சல் அலுவலகத்தில்தான் அப்போது டெலிபோன் இணைப்பகம் இயங்கி வந்தது அப்போது கரூரில் உள்ள நபர்கள் யாருக்காவது டிரங்க் கால் போட வேண்டுமென்றால் இந்த இணைப்பக வாசலில் வந்து காத்திருப்பார்கள்.

கலைஞர் பிரசாரத்திற்காக வந்துள்ளது தெரிந்ததும் அந்த இணைப்பகத்தில் வேலைபார்த்த சிவராமன் என்பவர், வரிசையாக காத்திருப்பவர்களுக்கு இடையே கலைஞருக்கு சென்னைக்கு டிரங்கால் போட்டுக் கொடுப்பார்.

கலைஞர் டிரங்க் கால் போட்டு சென்னையில் இருக்கும் மாறனிடம் பேசுவார். பிரசாரத்திற்கு பணம், பிரசுரங்களை அனுப்புவது குறித்து பேசுவார்.

இரவில் இரண்டு மணிக்கு படுத்தாலும் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் கலைஞர் எழுந்து கொள்வது வழக்கம். குளித்து முடித்து விட்டு தூங்கும் மற்ற தொண்டர்களையும் எழுப்பி விடுவார். அதேபோல அதிகாலையிலேயே கிளம்பி விடுவார் கலைஞர். அப்போது திமுக கட்சிகார்ர்களை பார்க்க மாட்டார் எதிர்கட்சியினரை அவர்கள் வீட்டிலேயே சந்தித்து திமுகவிற்கு வாக்கு கேட்பார்.

கலைஞரின் கார் ஓட்டுநரான பர்வீன் கனி, டோர் ஸ்லிப்பை அந்த எதிர்க்கட்சியினர் வீட்டு கதவில் ஒட்டி விடுவார். பிறகு கதவில் ஒட்டி உள்ள டோர் ஸ்லிப்பை பார்த்து காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் அந்த உள்ளூர் பிரமுகர்களிடம், கருணாநிதி வந்தார..? உங்களிடம் ஓட்டு கேட்டாரா? திமுகவை ஆதரிக்க போகிறீர்களா? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

வந்தாரு வாக்கு கேட்டாரு என அந்த வீட்டு உரிமையாளர் விளக்கம் கொடுப்பார். அப்போது கரூர் அருகே உள்ள உப்பிட மங்கலத்தை சேர்ந்த கோவிந்தசாமி ரெட்டியார் என்ற விவசாயி குடகனாறு நீர்த்தேக்க பிரச்னையை கையில் எடுத்து பெரிதாக பேசிக்கொண்டிருந்தார்.

அவர் காங்கிரசை சேர்ந்தவர் உப்பிடமங்கலம் பகுதியில் செல்வாக்கு மிக்கவர். அவரை சந்தித்த கலைஞர் நான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டசபையில் குடகனாறு நீர்த்தேக்கம் குறித்து பேசுவேன் என வாக்குறுதி அளித்தார். அதேபோல எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வாக்குறுதிப்படி சட்டசபையில் குடகனாறு நீர்த்தேக்கம் குறித்து கலைஞர் பேசினார்.

பட மூலாதாரம், KALAIGNAR KARUNANITHI FB

தேர்தல் பிரசாரத்தின்போது வெள்ளியணை உப்பிட மங்கலம், காணியாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆதாரமான குடகனாறு நீர்த்தேக்கத்தை அமைக்க பாடுபடுவேன் என்றும் நங்கவரம் விவசாயிகள் பிரச்னை, குளித்தலை, முசிறி இடையே காவிரியாற்றில் குறுக்கே போக்குவரத்துக்கான வசதி உள்பட பல்வேறு விஷயங்கள் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்தன.

அப்போது நாங்கள் நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு திமுக கொடி ஏற்றப்பட்ட சைக்கிளில் கிராமம், கிராமமாக பிரசாரத்துக்கு போவோம். எந்த கிராமத்திலும் சாப்பாட்டுக்கு வழி இருக்காது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கம்மஞ்சோறு, கொஞ்சம் கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டுத்தான் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

கருணாநிதி வெற்றி பெற்ற பிறகு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தபடி குளித்தலை தொகுதியில் குளித்தலை-முசிறி இடையே காவிரி ஆற்றில் போக்குவரத்து பாலத்தையும் கரூர் பகுதியில் பாசனத்துக்காக குடகனாறு திட்டத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டபோது, குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி என்ற கிராமத்தில் பெண்களுக்கான வாக்குச் சாவடியில் அனைத்து வாக்குகளும் கருணாநிதிக்கு விழுந்திருந்தன என அந்த கால நினைவுகளை பகிர்ந்தார் சு.ப. ராசகோபாலன்.

சு.ப. ராசகோபாலன் 1857ஆம் ஆண்டில் இருந்து கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்தவர். அப்போது ராசகோபாலுக்கு 20 வயது. கலைஞர் இறக்கும் நாட்கள்வரை ராசகோபாலுடன் நட்பு பாராட்டி வந்தார்.

மிசா காலத்தில. சு.ப. ராசகோபால் கைதாகி சிறைக்கு சென்றார். 1962ஆம் ஆண்டில் விலைவாசி போராட்டத்தில் கைதாகி கலைஞர் கருணாநிதியுடன் சிறைக்கு சென்றவர் 1964 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் 1965ல் கருப்புக்கொடி போராட்டத்திலும் கைதாகி கருணாநிதியுடன் சிறையில் இருந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: