தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்ற தேர்தல் விளம்பரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியின் படம் – பகடி செய்த காங்கிரஸ்

ஸ்ரீநிதி

(இந்திய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பாஜகவின் அதிகாரப்பூர்வ தமிழக ட்விட்டர் பக்கம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், பரத நாட்டியம் ஆடுவது போன்ற இரு நொடி காணொளி ஒன்றை பயன்படுத்தியதற்காக ஏளனத்திற்கு உள்ளாகியுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இதை பலர் சுட்டிக்காட்டிய பிறகு பாஜக அந்த ட்விட்டர் பதிவை அழித்துவிட்டது. இருப்பினும் பலர் அந்த பதிவு குறித்து விவாதித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீநிதி சிதம்பரம் அந்த படத்தை பகிர்ந்து "தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது" என தெரிவித்திருந்தார்.

பாஜகவால் பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு நொடி காணொளி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் எழுதப்பட்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால் இசையமைக்கப்பட்ட "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடலுக்கான நடனத்தில் பயன்படுத்தப்பட்டது. இது 2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட பாடல்.

பாஜக அந்த புகைப்படத்தை பயன்படுத்தி, "தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்..வாக்களிப்பீர் தாமரைக்கே" என்று பதிவிட்டிருந்தது.

இதுகுறித்து பதிவிட்ட காங்கிரஸ், "பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, உங்களுக்கு `இசைவு`(consent) என்பது புரிந்து கொள்ள கடினமான ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்கு புரிகிறது. இருப்பினும் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் படத்தை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. நீங்கள் இதன்மூலம் உங்களின் பிரசாரம் பொய்யானது என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளது.

இது தங்களுக்கு காணொளி தயாரித்து வழங்கியவர் செய்த தவறு என்று தமிழ்நாடு பாஜக ஐ.டி பிரிவின் நிர்மல் என்.டி.டி.வி-இடம் தெரிவித்துள்ளார்.

`கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் பொய் கூறுகிறார்` - பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உண்மையை மூடிமறைத்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயம் குற்றஞ்சாட்டியுள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

கேரள கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் இருவர், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக சிலர் புகார் அளித்தனர். அவர்களை சிலர் தாக்கி ரயிலில் இருந்து இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், "கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்டு, ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயம் பொய் கூறுகிறார்," என்றார்.

இந்நிலையில் காசர்கோடு பகுதியில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கன்னியாஸ்திரீகள் மீது சிலர் புகார் தெரிவித்ததால், அது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்ததாகவும், புகாரில் உண்மையில்லை என்பது தெரிந்தவுடன், அவர்கள் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால் உண்மையை அவர் மூடி மறைக்கிறார். நாட்டில் யாருக்கு எங்கு பயணம் மேற்கொள்வதற்கும் உரிமை உள்ளது. ஆனால் கன்னியாஸ்திரீகள் என்ற காரணத்தால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களே அவர்களை தாக்கியுள்ளனர். அந்த நபர்களை காப்பாற்றும் நோக்கில் மத்திய அமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது அவமானத்திற்குரியது என்று தெரிவித்தார்.

கொரோனா - ’போர்கால நடவடிக்கை`

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று அதிகமாகவுள்ள மாவட்டங்களில் கோவிட் கேர் சென்டர்களை அதிகரிக்கவும், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவும், தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து சோதனை செய்து தொற்றுள்ளதா? என்பதைக் கண்டறிவதைத் தீவிரப்படுத்தவும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தத் தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், அதே வேளையில் பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா போன்ற மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த நோயைப் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பன்முக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: