செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி: 'தெர்மாக்கோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

  • ஏ.ஆர்.மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக
'தெர்மாகோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி

வைகை நதியை ஒரு வருடத்தில் தேம்ஸ் நதியாக மாற்றிக் காட்டுவேன். ஆனால் மதுரையை சிட்னியாக மாற்ற சில ஆண்டுகள் ஆகும் என்கிறார் மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமாகிய செல்லூர் கே. ராஜூ.

பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் துணி துவைப்பது, தெர்மாகோல் அமைச்சர் என்ற கேலிக்கு உள்ளாவது ஆகியவை குறித்து செல்லூர் கே. ராஜூ பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த நேர்காணலில் இருந்து.

கள நிலவரம் எப்படி உள்ளது? பத்து வருடமாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறீர்கள். அதனால் மக்கள் மத்தியில் ஏதாவது அதிருப்தியைப் பார்க்க முடிகிறதா?

கள நிலவரம் நன்றாக இருக்கிறது. நாங்கள் நல்லாட்சி கொடுத்திருக்கிறோம். மக்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்றும் அதிருப்தியைப் பார்க்கவில்லை.

பதினெட்டு மாதங்களில் மதுரையை சிட்னியாக மாற்றிக் காட்டுவேன் என்று 2018-ல் சொன்னீர்கள். மாற்றிவிட்டீர்களா?

மாற்றிக் கொண்டிருக்கிறோம். எடுத்த உடனே சிட்னியாக மாற்ற முடியுமா? சிட்னியும் ஒரு காலத்தில் குக்கிராமமாக இருந்து, அதன் பிறகுதான் வளர்ந்த நகரமாக மாறியிருக்கிறது.

பத்து ஆண்டுகளில் பல உயர்மட்டப் பாலங்கள் அமைத்திருக்கிறோம். வைகை ஆற்றை இணைப்பதற்கு இரண்டு பக்கங்களும் பாலம் அமைத்திருக்கிறோம். கப்பலூர் சாலையை நான்கு வழி சாலையாய் மாற்றி இருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்து அதில் ரூபாய் 1200 கோடியில் பணிகள் நடக்கிறது.

வைகையை தேம்ஸ் நதி போல் மாற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?

தேம்ஸ் நதி போல் ஒரு வருடத்திற்குள் மாற்றி விடுவோம். வைகை நதிக்கு இரண்டு பக்கங்களிலும் கரை எழுப்பிவிட்டோம். நவீன பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடைகள் எல்லாம் அமையவிருக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை பொழுதுபோக கூட்டி செல்லலாம். வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காத அளவிற்கு தூய்மை படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால் மதுரையின் தொன்மை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

தொன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் புது மண்டபத்தில் இருக்கும் கடைகளை அருகில் உள்ள சத்திரத்தில் அடுக்கு மாடி கட்டடம் கட்டி கொண்டுபோகப் போகிறோம். பயணிகள் வாகனம் நிறுத்துவதற்கு பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் 41 கோடி ரூபாயில் அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்திருக்கிறோம். பெரியார் நிலையத்தை (உள்ளூர் பேருந்து நிறுத்தம்) 167 கோடியில் கட்டிக் கொண்டிருக்கிறோம். வரலாற்று சின்னங்கள் பாதிக்கப்படாமல் புதிய கட்டடங்கள் எழுப்பப்படுகிறது.

பட மூலாதாரம், Sellur K Raju facebook page

உங்கள் பிரசாரத்தில் அம்மா சென்ட்டிமென்ட் அதிகமாக இருப்பது ஏன்? சமீபத்தில்கூட ஒரு முதிய பெண்மணியைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்களாமே?

இயற்கையாகவே நான் இளகிய மனம் படைத்தவன். மற்ற அரசியல்வாதிகள் போல் என் வாழ்க்கை இல்லை. புரட்சித் தலைவர் படத்தை பார்த்து பொது வாழ்க்கைக்கு வந்தவன்.

நேர்மை, நீதி என்றே வாழ்கிறவன். என்னை பெற்றெடுத்த தாய் என்னிடம் 'ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' என்று எப்போதும் சொல்வார்கள். அப்படிப்பட்ட என் தாய் மாதிரியே ஒரு அம்மாவை பார்த்தேன். அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.

கூட்டுறவு துறையில் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளீர்கள்?

பத்தாண்டுகளாக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கிறேன். என்னுடைய காலத்தில் கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தியுள்ளேன். ஆனால் திமுக காலத்தில் 2008-ல் தேர்தலை அறிவித்துவிட்டு பெரும் தகறாராகி பிறகு நடத்தவில்லை. அவர்கள் காலத்தில் வைப்பு நிதி ரூபாய் 26,000 கோடியாக இருந்தது. ஆனால் என்னுடைய காலத்தில் ரூபாய் 61,000 கோடியாக உயர்ந்துள்ளது.

அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உரிமை பெற்றுவிட்டோம். வங்கிகள், கிளைகள் அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டோம். இரண்டு முறை பயிர் கடன் ரத்து செய்திருக்கிறோம். பொது விநியோகத் திட்டதின் கீழ் உள்ள 32,993 நியாய விலை கடைகளின் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கிறோம்.

இது வரை நான் மட்டுமே 28 விருதுகள் வாங்கி இருக்கிறேன். திமுக தன் 22 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு விருதுதான் வாங்கி இருக்கிறது. இதுவரை கூட்டுறவுத் துறை தொடங்கியதிலிருந்து பத்து ஆண்டு காலம் என்னை போல் யாரும் தொடர்ந்து அமைச்சராக இருந்தது இல்லை.

நியாய விலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி தரமானதாக இல்லை என்று மக்கள் சொல்கிறார்களே?

நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகிற பொருட்கள் எல்லாமே கூட்டுறவு துறையால் வாங்கப்படுவது கிடையாது. உணவுத் துறையிலிருந்து வாங்கி கொடுப்பதைத்தான் விநியோகம் செய்கிறோம். அதுவும் மத்தியத் தொகுப்பிலிருந்து வருகிறது.

விற்பனையாளர்களிடம் தரமற்ற பொருட்களை மக்களுக்கு விற்கக் கூடாது என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். எந்தக் கடைகளில் வழங்குகிறார்கள் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரி ஏதாவது எதிர்க் கட்சிகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

டீ குடிப்பது, கூடை பின்னுவது, துணி துவைப்பது என்று பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் இறங்குகிறார்கள். இதெல்லாம் நாடகம் இல்லையா?

மக்களை சந்திப்பதற்கு இதெல்லாம் எளிமையான பிரசார உத்திகள் என்று நினைக்கலாம். தவறு ஒன்றும் இல்லை. ஆனால் துவைக்கிறது போன்ற செயல்கள் சற்று மிகையானவை. நான் ரெட் லைட் போட்டு காரில் செல்லும் போது மட்டும் தான் அமைச்சர், கீழே இறங்கிவிட்டால் மக்களில் ஒருவன். நான் நடிக்கிறேனா என்று மக்களுக்கு தெரியும்.

தெர்மாகோல் அமைச்சர் என்று உங்களை சமூக வலை தளங்களில் கிண்டல் செய்கிறார்கள். வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தது உண்டா?

சித்திரை திருவிழா வரும் சமயம் வைகையிலும் தண்ணீர் 17 அடி தான் இருந்தது. அதனால் நீர் ஆவியாவதை தடுப்பதற்கு, அன்று இருந்த மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் பொதுபணித் துறை முதன்மை பொறியாளர் அவர்களுடன் கூட்டம் போட்ட போது, அவர்கள் இந்த யோசனையை சொன்னார்கள்.

அதைச் செய்தோம். அது மீம்ஸ் ஆகிவிட்டது. செல்லூர் ராஜு உலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு ஆகிவிட்டது. அதை நான் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன். அந்த அதிகாரி செய்த தவறு. முறையாக தெர்மாகோல் காற்றில் பறக்காத அளவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அந்த அதிகாரியை மாற்றிவிட்டோம்.

தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பணம் வாங்குகிறார்களோ, வாங்கவில்லையோ எனக்குத் தெரியாது. பணம் கொடுத்தாலும், வாக்காளர்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெருவார்கள்.

எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்? திமுக, அதிமுக எத்தனை தொகுதிகளில் வரும்?

நான் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்படியார் தான் முதலமைச்சர் ஆவார். திமுக எதிர்க் கட்சியாகக்கூட வரமுடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: