தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `கெடு விதித்த தேர்தல் ஆணையம்!' - ஆ.ராசா அளித்த விளக்கம் என்ன?

ராசா

பட மூலாதாரம், A.RAJA FACEBOOK

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாருக்கு விளக்கம் தரும் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறார் தி.மு.க எம்.பி ஆ.ராசா.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா, கடந்த 26ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதாக ஆளும் அதிமுகவினர் பிரச்னை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து ஆ. ராசாவின் பேச்சுக்கு தி.மு.க தரப்பில் இருந்தும் சில அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, `கண்ணியத்தோடு பேச வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து விளக்கமளித்த ஆ.ராசா, `நான் தனிப்பட்ட முறையில் முதல்வரை விமர்சிக்கவில்லை. நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது' எனக் கூறியிருந்தார்.

இதன் பின்னர், ஆ. ராசாவுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராசா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, என் தாயை இழிவுபடுத்துகிறார்கள் எனக் கூறி கண் கலங்கினார். அரசியல் களத்திலும் முதல்வரின் உருக்கமான பேச்சு விவாதத்தை தூண்டியது. இதற்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, `என்னுடைய பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். என்னுடைய பேச்சுக்காக அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இன்று மாலை ஆறு மணிக்குள் ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஃபேக்ஸ் மூலமாக ஆ.ராசா தனது விளக்கத்தை அனுப்பியிருக்கிறார். அதன் அசல் கடிதம், சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த விளக்கத்தில், ` முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்தவொரு அவதூறு பேச்சையும் நான் பேசவில்லை. அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் மாணவனாகவும் கலைஞரின் வழிகாட்டலில் தி.மு.க உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் எப்போதும் செயல்பட்டதில்லை. திராவிட இயக்கத்தின் நோக்கமே, பெண்களை உயர்த்துவதும் அவர்களை சரிசமமாக மதிப்பதும்தான். இதுபோன்ற இயக்கத்தில் இருந்து வந்த ஒருவர், பெண்களையோ தாய்மார்களையோ அவமதிப்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

என்னுடைய பேச்சு தொடர்பாக சில விளக்கங்களை முன்வைக்கிறேன். முதல்வர் குறித்து நான் அவதூறாக பேசியதாக அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றன. கடந்த 27 ஆம் தேதி பெரம்பலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் இது குறித்து தெளிவுபடுத்திவிட்டேன். என்னுடைய பேச்சை சரியான உணர்வுடன் முதல்வர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். கடந்த 28ஆம் தேதி நடந்த திருவொற்றியூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், எனது பேச்சை அதன் அர்த்தத்துக்கு மாறாக குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.

எங்களுடைய தலைவர் ஸ்டாலினும், "அண்ணாவால் வகுக்கப்பட்டு அவரால் தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட மூன்று வழிகாட்டுதல்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தொண்டர்கள் அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டும்" என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த 29ஆம் தேதி ஊட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் உணர்ச்சிவசப்பட்டதை பார்த்த பிறகு, நான் அவரிடம் மன்னிப்பை வேண்டினேன். அது எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அதில் முதல்வரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இதற்காக என்னுடைய மன்னிப்பையும் தெரிவித்து விட்டேன்.

அந்த வகையில் தேர்தல் ஆணையத்திடம் இந்த தற்காலிக விளக்கத்தை அளிக்கிறேன்.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக நான் எதையும் பேசவில்லை. என் மீது அ.தி.மு.க தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட மார்ச் 27ஆம் தேதியிட்ட புகாரின் நகல் எனக்கு தரப்படவில்லை. அதனால் எனக்கு எதிராக என்ன குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பதை என்னால் அறிய இயலவில்லை. எனவே, அந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை என்னால் அளிக்க இயலவில்லை. அந்தப் புகார் மனு நகலை எனக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸின்படி, அவதூறாகப் பேசியதாக என் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழும், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் ஒரு பிரிவின்படியும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிகிறேன். அதன் மீது முழுமையாகவும் பக்க சார்பற்ற விசாரணையும் நடத்தப்பட்டால் நான் இழிவாக பேசியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தவறானது என தெரிய வரும்.

மேலும், இந்த விவகாரத்தில் இப்போது தேர்தல் ஆணையம் எதை கண்டறிந்தாலும் யோசனை தெரிவித்தாலும் அது என் மீதான வழக்கின் விசாரணைக்கு புறம்பானதாக அமையும். எனவே, எனது மொத்த உரையின் நகலை பெற்று அது பரிசீலிக்கப்படும்பட்சத்தில் எனது மீதான குற்றச்சாட்டுகள் நான் பேசிய அர்த்தத்துக்கு மாறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதும் அரசியல் ஆதாயத்துக்காக அது ஊதிப்பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிய வரும் என நம்புகிறேன்.

தமிழில் சிமிலி அல்லது உவமானம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். அதன்படியே எனது பேச்சின்போது, முதல்வர் பழனிசாமியும் ஸ்டாலினும் உருவான அரசியல் பரிணாமம் பற்றிப்பேசும்போது, சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிதாக பிறந்த குழந்தையுடன் ஒப்பிட்டு உவமானப்படுத்திப் பேசினேன்.

அதுவும், ஸ்டாலின் தலைவராவதற்கு எப்போதுமே உழைத்திருக்கவில்லை என முதல்வர் கூறியதற்கு பதில் தரும் வகையிலேயே அந்த உவமானத்தை முன்வைத்தேன். எனவே, ஆணையத்தின் குழு, என்னுடைய பேச்சின் முழு உரையையும் பரிசீலனை செய்யுமானால், அந்த நடவடிக்கை, எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்கும் என நம்புகிறேன்' என ராசா குறிப்பிட்டுள்ளார்.

``ஆ.ராசா கொடுத்துள்ள விளக்கம் என்பது தற்காலிமானதுதான். அ.தி.மு.க தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் என்ன இருந்தது என்பதை அறிந்த பிறகு முழு விளக்கத்தை அவர் கொடுப்பார்" என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: