கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ்

அதிமுக

பட மூலாதாரம், AIADMK FB

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய்ப்பிரசாரங்களால் மக்கள் தங்களின் கழக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தொண்டர்களுக்கு திறந்த மடல் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ள மூன்று பக்க கடிதத்தை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.

அதில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தேர்தல் களத்தில் கண்ட தேர்தல் தொடர் வெற்றியைப் போல அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர் வெற்றிகளைப் பெற தொண்டர்கள் காட்டும் உழைப்பையும் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து திகைத்துப் போயிருப்பதாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளனர்.

எடப்பாடி அரசு ஒரு நாள் தாங்குமா? ஒரு வாரம் ஓடுமா? இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும், இரண்டு மாதத்தில் கவிழ்ந்து விடும், ஆறு மாதத்தில் கவிழும், தீபாவளிக்குள் போய்விடும் என ஆருடம் கூறியவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அவற்றை எல்லாம் தாண்டி மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் சிறந்த ஆட்சியை கொடுத்து தலை நிமிர்ந்து வாக்கு கேட்கிறோம்.

மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம் தவறிப்பெய்த பேய் மழை, கடுமையான வறட்சிக்காலம் என்ற இயற்கைக்பேரிடர்கள் அனைத்தையும் சமாளித்தோம். கொடிய கொரோனா பெருந்தொற்றை சமாளித்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

நம்முடைய தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளும், ஊடகங்களும் பரபரப்புக்காகவும் தங்கள் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போகின என்பதை நாம் அறிவோம்தானே?

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப்போயின என்பதை தமிழ்நாடு நன்கு அறியும். இப்போது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய்ப் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்களின் கழக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் படித்த நம்மை இந்த பொய்ப் பிரசாரங்கள் என்ன செய்யும்?

தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினர் அனைவரும் கூட்டணி கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு உழைப்போம் என்று கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திடீர் மடல் ஏன்?

சமீப வாரங்களாக தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக பல்வேறு தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் ஆய்வு நிறுவனங்கள் என அழைத்துக் கொள்ளும் அமைப்புகளும் பல்வேறு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம் என்றும் அதிமுக அணிக்கு குறைவான இடங்கள் கிடைக்கலாம் என்றும் தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இத்தகைய சூழலில் அவை வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்த திறந்த மடலை அதிமுகவினருக்காக என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: