வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
அதிமுக பாமக

பட மூலாதாரம், AIADMK FB

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு நாள்களே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனிநபர் தாக்குதல்கள், பண விநியோகம் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தாலும் கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். `தென் மண்டலத்தில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.கவால் பாதிப்பு ஏற்படலாம்' என்பதால், அதற்கேற்ப பிரசார வியூகங்களை அ.தி.மு.க வடிவமைத்து வருகிறது.

கொதிப்பில் பா.ம.க

அதன் ஒருபகுதியாக வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்துகள், பா.ம.க தரப்பின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. முன்னதாக, ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஓ.பி.எஸ், ` வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது தற்காலிமானதுதான். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும்' எனக் கூறியிருந்தார். இதேபோன்ற கருத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டு, பின்னர் தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

முதல்வர் தரப்பும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பும், இடஒதுக்கீடு நிரந்தரமானது எனக் கூறிவரும் நிலையில், தென்மண்டலத்தில் ஒலிக்கும் குரல்களால் கொங்கு அமைச்சர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ` தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்னை அல்ல. அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும். சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது' என்கிறார்.

முதல்வரிடம் முறையிட்ட ராமதாஸ்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு,

கோப்புப்படம்

மேலும், ` பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இதுதான் நடைமுறையாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும்கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானதுதான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரசாரம் செய்கின்றன' எனக் குறிப்பிட்டார். இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் துணை முதல்வர் பெயரை நேரடியாக ராமதாஸ் குறிப்பிடவில்லை.

`துணை முதல்வரின் பேச்சு, வடமாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?' என பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வன்னிய சமூகத்துக்கு 10.5 சதவிகித ஒதுக்கீடு என்பது யாராலும் மாற்ற முடியாது. சட்டம் தெரியாதவர்கள்தான் இதைப் பற்றி பொதுவெளியில் பேசுவார்கள். சட்டமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டாலே போதும். மேலும், இந்த ஒதுக்கீட்டைக் கூடுதலாக ஆக்கலாமே தவிர, யாராலும் குறைக்க முடியாது. இதையும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்த பிறகுதான் செய்ய முடியும்" என்கிறார்.

ஓ.பி.எஸ் ஏன் பயப்படுகிறார்?

தொடர்ந்து பேசுகையில், `` சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது நல்லதுதான். ஆனால், இதனைச் செய்வதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன்வர மாட்டார்கள். கேரள, கர்நாடக போன்ற மாநிலங்களில் தொகுப்பு இடஒதுக்கீடு உள்ளது. அங்கெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திவிட்டு தொகுப்பு ஒதுக்கீட்டை வழங்குகிறார்கள். இப்படியொரு முறை இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ள பயம் என்னவென்றால், `இடஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள்' என பிற சமூகங்கள் மத்தியில் தி.மு.கவினர் பரப்பும் தகவல்கள்தான்.

இதனால் தென்மாவட்டங்களில் பாதிப்பு வரலாம் என்பதால் ஓ.பி.எஸ். இவ்வாறு பேசுகிறார். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. `நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது' என அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்துவிட்டார். அதன்பிறகு இப்போது துணை முதல்வர் பேசுவது எந்தவகையிலும் சரியில்லை. எடப்பாடியை பொறுத்தவரையில் அவரது கணக்கில் ஓ.பி.எஸ் இல்லை. கொங்கு மண்டலம், வட மாவட்டங்களிலும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். ஓ.பி.எஸ் பேச்சின் காரணமாக வடமாவட்டங்களிலும் சமூக மக்கள் மத்தியில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவர் ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார்," என்கிறார்.

இடஒதுக்கீடு நிரந்தரமா?

ஓ.பி.எஸ்ஸின் பேச்சு தொடர்பாக விளக்கம் பெற பா.ம.க தலைவர் ஜி.கே.மணியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். ` பிரசாரப் பயணத்தில் இருக்கிறார். விரைவில் இதுகுறித்துப் பேசுவார்' என அவரது உதவியாளர் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பா.ம.கவின் மாநிலப் பிரசாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. தற்போது சூழலுக்கு ஏற்ப சிலர் மாற்றிப் பேசி வருகிறார்கள். இதனால் நாங்கள் குழம்ப மாட்டோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இடஒதுக்கீடு நிரந்தரமானது என்பதில் எங்களுக்கும் முதல்வருக்கும் எந்தவித மாற்றுக் கருத்துகளும் இல்லை. மற்றவர்கள் பேசுவதைப் பற்றியும் எங்களுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை" என்கிறார்.

எந்தத் தவறும் இல்லை

பட மூலாதாரம், AIADMK FB

`ஓ.பி.எஸ்ஸின் பேட்டி, பா.ம.க தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதே?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இடஒதுக்கீடு தொடர்பாக ஓ.பி.எஸ் பேசுவதால் ராமதாஸ் ஏன் கோபித்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. சட்டமன்றத்தில் முதல்வர் பேசும்போது, `இது தற்காலிமானது. சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு ஆவண செய்யப்படும்' எனக் கூறியிருக்கிறார். இதே கருத்தைத்தான் துணை முதல்வரும் கூறியிருக்கிறார். முதல்வர் கூறும்போது கோபப்படாமல் மற்றவர்கள் கூறும்போது ராமதாஸ் ஏன் கோபப்படுகிறார் எனத் தெரியவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` துணை முதல்வர் கூறியதிலும் எந்தத் தவறும் இல்லை. ஓ.பி.எஸ்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவர் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவர் கூறுகின்ற வார்த்தைகளும் மிக முக்கியமானவை. அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர். இடஒதுக்கீடு வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. எனவே, ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து அரசியல் செய்வது சரியானதல்ல" என்கிறார்.

வடக்கு வலுவிழக்கிறதா?

`தென்மண்டல பாதிப்பை தணிக்கத்தான் ஓ.பி.எஸ் இவ்வாறு பேசுகிறாரா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வன்னியர்கள் தரப்பில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது. இது வடமாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், திருச்சிக்குத் தெற்கே செல்லச் செல்ல இது அங்கே வலுவாக இருக்கும் பிற சமூகத்தினரிடம் எதிர்வினையை உருவாக்கி இருக்கக்கூடும் என்று அப்போதே சொல்லப்பட்டது. அதை களத்தில் கண்டபிறகு அதனை சமாளிக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர், ` இது தற்காலிக ஏற்பாடு' என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, தென் மாவட்டங்களில் அ.ம.மு.க, அ.தி.மு.கவின் வாக்குவங்கியில் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்த பிரச்சினை அவர்களைத் துரத்துகிறது. ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களே இப்படிச் சொல்லும் அளவுக்குத்தான் களம் உள்ளது. இது வடக்கேயும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் மருத்துவர் ராமதாஸும், `சட்டமான பின்னர் என்ன தாற்காலிக ஏற்பாடு?' என அறிக்கை விடுத்துள்ளார். இதனால் வடக்கே கிடைத்த ஆதரவையும் இழந்து, தெற்கே இருக்கும் ஆதரவையும் இழந்துவிடும் ஆபத்தை அ.தி.மு.கவுக்கு ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: