என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நகர்ப்பகுதிகளில் தலைக்கவசம் அணிய விலக்கு

ரங்கசாமி

பட மூலாதாரம், NR CONGRESS

படக்குறிப்பு,

ரங்கசாமி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி, ராஜ்பவன் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது கோயில் வாசலில் திறந்த வேனில் நின்றபடி வெளியிட்டார்.

இதில் பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்:

 • புதுச்சேரி நிதி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்தின் கடனான 8,863 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
 • 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
 • மருத்துவ, பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்.
 • புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை‌ பாடப் பிரிவுகளில், உள்ளூர்‌ மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசிடம் அரசாணை பெறப்படும்.
 • புதுச்சேரியில் புதிதாக ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
 • அனைத்து குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
 • பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச பொறியியல் மருத்துவம் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 • கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் விதமாக, அரசுப் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு 40 வயதாக தற்போதைக்கு (One time relaxation) உயர்த்தப்படும்.
 • புதுச்சேரியில் ஓராண்டுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
 • நகராட்சி பகுதிகளில் தலைக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படும்.
 • நியாய விலை கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
 • மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும்.
 • தனியார் தொழிற்சாலையில் 80 சதவீதம் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
 • பெட்ரோல் - டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும்.
 • குப்பை வரி ரத்து செய்யப்படும்.
 • மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.
 • காவலர்களுக்கு 8 மணி‌ நேரப் பணி‌ நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
 • முந்தைய ஆட்சியில் முடக்கப்பட்ட 'காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம்' உயிர்ப்பித்து 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தற்போது கட்டுமானப் பணி முடியாத வீடுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
 • காலாப்பட்டு, கிருமாம்பாக்கம் பகுதிகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: