கொரோனா வைரஸ்: இந்தியாவை அச்சுறுத்தும் "கடுமையான, தீவிரமான" இரண்டாம் அலை

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி
கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பகுதியில், இந்தியாவின் மேற்குப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தொற்றுநோயின் கொடிய எழுச்சி விரைவாக தளர்த்தப்படுவதாக நம்பத் தொடங்கினர்.

மகாராஷ்டிராவின் வர்தாவில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட லாப நோக்கற்ற கஸ்தூர்பா மருத்துவமனையின் கோவிட்-19 வார்டில் அப்போது 28 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அதேபோன்று, கடந்த ஆண்டு வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது, சுமார் 180 நோயாளிகள் இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களில் அவ்வப்போது அந்த வார்டே காலியாக இருந்தது.

இதையடுத்தும், கோவிட்-19 வார்டில் உள்ள 300 படுக்கைகளில் 100 படுக்கைகள், மருத்துவமனையின் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டன. கடந்த ஆண்டு இறுதிமுதல் இந்த ஆண்டின் முதல் இரு மாதங்கள் வரை நாடு முழுவதும் நோய்த்தொற்று குறைந்திருந்தது. வர்தாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறத் தொடங்கினர்.

கஸ்தூர்பா மருத்துவமனையில், சுகாதார ஊழியர்கள் ஒரு கடுமையான ஆண்டை பொறுத்துக் கொண்டனர். அவர்களில் 70 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டதுடன், கொரோனாவின் நாள்பட்ட அறிகுறிகளால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவற்றையெல்லாம் கடந்து அங்குள்ள 650 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நிம்மதி உணர்வு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது.

"எங்கள் கொண்டாட்டங்கள் வெகுகாலம் நீடிக்கவில்லை" என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.பி. கலந்த்ரி பிபிசியிடம் கூறினார்.

இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான நாக்பூருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மருத்துவமனையை நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை விட்டு வைக்கவில்லை.

கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 170க்கும் கொரோனா நோயாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளால் 30 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகிறது. அதேவேளையில், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

"இரண்டாம் அலையில் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். 40 வயதுக்கும் குறைவான அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் நோய்த்தொற்றால் அனுமதிக்கப்படுவதை காண முடிகிறது" என்று மருத்துவர் கலந்த்ரி கூறுகிறார்.

1.2 கோடிக்கும் அதிகமானவர்களுடன் அமெரிக்கா மற்றும் பிரேஸிலுக்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும், இந்தியாவில் 1,60,000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான இறப்பு விகிதமாக கருதப்படுகிறது.

இரண்டாவது அலை எவ்வளவு கொடியது?

கொரோனா வைரஸின் பேரழிவு தரும் மற்றும் ஆபத்தான இரண்டாவது அலையின் அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொண்டு வருவதாக பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.

நோய்த்தொற்றின் இரட்டிப்பு வீதம் அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக எடுக்கும் நேரம், பிப்ரவரி 28 அன்று 590 நாட்களாக இருந்த நிலையில், மார்ச் 30 அன்று 170 நாட்களுக்கும் குறைவாக மாறிவிட்டது.

குறிப்பாக, கடந்த திங்கட்கிழமை மட்டும் இந்தியா முழுவதும் புதிதாக 68,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவே ஆகும்.

இரண்டாம் அலை எந்தளவுக்கு வேறுபட்டது?

கொரோனா வைரஸ் பரவலை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் லண்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் கணிதவியலாளர் முராத் பனாஜி கூறுகையில், "கடைசியாக மே மாதத்தில் தொற்றுநோய் வேகமாக பரவியது. அப்போது சில ஆயிரங்களை கொண்டிருந்த தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை, இப்போது 55,000 என்ற அபாயகரமான சராசரியை அடைந்துள்ளது," என்கிறார்.

"கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நோய்த்தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், அது மட்டுமே நோய்த்தொற்று பரவல் வேகமடைந்துள்ளதற்கு காரணமாக கூற முடியாது" என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நாட்டின் தினசரி பாதிப்பில் சுமார் 60 சதவீதம் பதிவாகிறது.

இரண்டாம் அலைக்கு காரணம் என்ன?

இந்தியாவின் இரண்டாவது அலை மக்கள் குறைந்த எச்சரிக்கையுடன் இருப்பதாலும், அரசாங்கத்தின் தெளிவற்ற கட்டுப்பாடுகளினாலும் தூண்டப்படுகிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏறக்குறைய ஓராண்டாக தங்கள் வீடுகளில் முடங்கிய பின்னர், பல இந்தியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கூட்டமான திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களில் ஒன்றுகூடத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று கருத்துத் தெரிவித்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், இந்தியா "கடுமையான, தீவிரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது, முழு நாடும் ஆபத்தில் உள்ளது" என்று கூறினார்.

ஆனால், மக்களின் பொறுப்பற்ற நடத்தைக்கு அனுமதித்ததற்காக அரசாங்கமே அதன் பங்கை ஏற்க வேண்டுமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ளார். ஆனால், எதிர்வரும் நாட்களில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் நாட்டின் ஐந்து மாநிலங்களில் தங்கு தடையின்றி நடைபெற்று வரும் அரசியல் பிரசாரத்திற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

அதுமட்டுமின்றி, சமீபத்திய வாரங்களில், மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன. இவற்றில் பங்கேற்கும் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை.

"சில மாதங்களுக்கு முன்புவரை அதிக அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த மக்கள், தற்போது அவற்றை காற்றில் வீசியுள்ளது என்னை மிகவும் கவலையடைய செய்கிறது" என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியக்கவியல் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியர் பிரமார் முகர்ஜி .

ஆனால், இவை மட்டும் பிரச்னைக்கு முழுமையான காரணமாக இருக்க முடியாது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னால் அந்த வைரஸின் புதிய வகை திரிபுகள் இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பினாலும் அதை அரசு இதுவரை ஏற்கவில்லை.

இந்தியாவின் டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் வாழும் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனைகளில் பலருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. அது உண்மையென்றால், தற்போது ஏன் இந்த நகரங்களில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது?

"தற்போது அதிகளவில் பரவி வருவது கொரோனா வைரஸின் புதிய திரிபா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில், அவை இதற்கு முன்பிருந்த திரிபை விட அதிவேகமாக பரவக்கூடியதாகவும், முந்தைய நோய்த்தொற்றுக்கு பிறகு ஒருவரது உடலில் உருவான நோயெதிர்ப்பு திறனை மீறி செயல்படக்கூடியதாகவும் இருக்கலாம்" என்று மருத்துவர் பனாஜி கூறுகிறார்.

எத்தனை காலத்திற்கு இரண்டாம் அலை நீடிக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இதொரு நீண்டப் போராட்டமாக இருக்குமென்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் பரவல் மோசமாக உள்ள நிலையில், ஆந்திர பிரதேசம், பிஹார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தொற்றின் வேகம் இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒருவேளை இந்த அதிகரிப்பு வேகம் இதே வீச்சில் தொடர்ந்தால் அது முதலாம் அலையின் உச்சத்தை தாண்டுவதுடன், நாடுமுழுவதும் முந்தைய அலையை விட பாதிப்பின் அளவு அதிகரிக்கும் என்று மருத்துவர் பனாஜி எச்சரிக்கிறார்.

எனினும், இந்த மோசமான நிலையிலிருந்து தப்பிப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், சுமார் இரண்டு மாதங்களில், ஐந்து கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருப்பதன் மூலம், "கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படுவதன் பலன் ஓரிரு மாதங்களில் தெரியும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியா செய்ய வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் மென்மேலும் பரவாமல் தடுக்க நாடுமுழுவதும் வைரஸின் புதிய திரிபு பரவலை கண்டறியும் பணிகளை முடுக்கிவிடுவதுடன், நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பிராந்தியங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், முதலாம் அலையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் அங்குள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகலாம்.

நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ள பகுதிகளில், அதை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு சுகாதார கட்டமைப்பு தள்ளப்பட்டால், அங்கு பொது முடக்கத்தை அமல்படுத்த பரிசீலனை செய்யலாம்.

"கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைவாக இருந்தபோது இந்தியா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தாததை எண்ணி நான் விரக்தி அடைகிறேன்" என்று மருத்துவர் முகர்ஜி கூறுகிறார்.

"நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இல்லாதபோது தடுப்பூசி செலுத்துவதை நிர்வகிப்பது எளிமையாக இருக்கும். ஆனால், தற்போது சுகாதார அமைப்புகள், தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் என இருவேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: