பாஜக, அதிமுக vs திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள்: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

  • விக்னேஷ். அ
  • பிபிசி தமிழ்
பாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலம் - ஓர் தேர்தல் அலசல்

(எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் நிலவரம் குறித்த பிபிசி தமிழின் கட்டுரை இது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் சூழ்நிலையை இது விவரிக்கிறது.)

தமிழ்நாட்டில் 1984 சட்டமன்றத் தேர்தலில் இருந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறிமாறி ஆட்சியைப் பிடித்த நிலை 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாறியது.

மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

1984 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது தமிழகத்தில் அதுதான் முதல் முறை.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக தங்களை அறிவித்துக் கொண்ட, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்தின் தேமுதிக மற்றும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் களம் கண்டன.

மூன்றாவது அணி ஒன்று அமைந்ததால் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறி திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக சில அரசியல் நோக்கர்கள் அப்போது கூறினார்கள்.

திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு கூறப்பட்ட இன்னொரு முக்கியமான காரணம் கொங்கு மண்டலம் என்று பரவலாக அறியப்பட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள், தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் விசிக கணிசமான ஆதரவைக் கொண்டுள்ள வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், இடதுசாரிகள் ஓரளவு வாக்கு வங்கியைக் கொண்டுள்ள டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் அதிமுகவிற்கு நிகராகவோ, அதிமுகவை விட அதிகமாகவோ தொகுதிகளில் வென்றது திமுக.

ஆனால் 'கொங்கு மண்டலம்' என்று அறியப்படும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவே வெற்றி பெற்றது திமுக.

இந்த முறை கொங்கு மண்டலத்தில் நிலவரம் என்ன? பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் திமுக இந்தப் பகுதியில் இனிவரும் ஆண்டுகளில் காலூன்ற வாய்ப்புள்ளதா என்று பார்க்கலாம்.

மேற்கு தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவை. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக கூட்டணியில் பாஜக எப்படி வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறதோ, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கென ஒரு வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு தொடரும் என்று அதிமுக தரப்பும் , அது தேர்தல் கால அறிவிப்பு மட்டுமே என்று திமுக தரப்பும் இப்பகுதியில் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மேற்குத் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைப்பு ரீதியான பலம் அதிகமாக உள்ளது.

பட மூலாதாரம், The India Today Group via getty images

சாதி, மத ரீதியிலான அணி திரட்டல்களின் தாக்கம் எப்படி உள்ளது?

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகளில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தாராபுரம் வருகை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோயம்புத்தூர் வருகை ஆகியவை இந்த தேர்தல் நேரத்தில் மிகவும் கவனம் பெற்ற பரப்புரைகளாக உள்ளன.

மைய நீரோட்ட ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் ஆதரவாகவும், எதிராகவும் கடும் விவாதத்துக்கு உள்ளானவை இவை.

கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இந்த நிகழ்வுகள் அதீத கவனம் பெறக் காரணம், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக இருக்கும் அதிமுக எதிர்த்து பிரசாரம் செய்வதைவிடவும், பாஜக எதிர்ப்பை முன்வைத்து திமுக தலைமையிலான கூட்டணி மாநிலம் முழுவதும் பரப்புரை செய்வதுதான்.

தமிழ்நாடு பாஜகவின் முக்கிய முகங்களான எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் கொங்கு மணடலத்தில் களம் இறங்குகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சரவையில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர்களிலேயே மிகவும் நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள செங்கோட்டையன் உள்ளிட்டோர் கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

பட மூலாதாரம், BJP4TamilNadu facebook page

படக்குறிப்பு,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல். முருகன்

கடந்த காலங்களைப் போல அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டுமல்லாது கொள்கைளுக்கு இடையிலான மோதலாக இந்தத் தேர்தல் உள்ளது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகள் அளவுக்கு திமுக வலுவாக இல்லாத இடமாகப் பார்க்கப்படும் கொங்கு மண்டலத்தில் இதன் எதிரொலி அதிகமாகவே காணப்படுகிறது. கோயம்புத்தூர் நகரத்தில் கூட கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் அதிமுகவும் தனது கட்டமைப்பை வலுவாக்கியுள்ளது.

கோவை பகுதியின் நிலவரத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் கோவையில் உள்ள எழுத்தாளர் இரா. முருகவேள்.

"ஒரு காலத்தில் தொழிற்சங்கங்கள் மூலம் கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் வலுவாக இருந்தன. அப்போது கோயம்புத்தூர் நூற்பாலைகளின் நகரமாக இருந்தது. பின்னர் ஒரு பெரிய நூற்பாலை உடைந்து மூன்று, நான்கு நூற்பாலைகளாக ஆன பின்னர் இந்தக் கட்சிகளின் பலம் குறையத் தொடங்கியது. இந்த இடைவெளியை நிரப்ப திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தவறிவிட்டன. அந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இங்குள்ள இஸ்லாமியர்கள் மக்கள்தொகை, புதிதாக உருவான பணக்காரர்கள், மார்வாரி மொழி பேசும் தொழில் முனைவோர் வருகை உள்ளிட்ட காரணிகளும் அதற்கு வலு சேர்த்தன.

அவ்வப்போது பலமான கட்சியாக பாஜக தோன்றினாலும், பிற கட்சிகள் சேர்த்துக்கொள்ள விரும்பாதவர்களை பாஜக சேர்த்துக் கொள்வது, பாஜக ஆட்சிக்கு வந்தபின் எடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்ற கொள்கை முடிவுகள் உண்டாக்கிய பாதிப்பு ஆகியவற்றால் நிலையான பலம் மற்றும் வளர்ச்சி அக்கட்சிக்கு இங்கு இல்லை," என்கிறார் முருகவேள்.

"இந்தத் தேர்தலில் கூட அதிமுக அணியினர் இங்கு இறங்கி வேலை பார்ப்பது கண்முன் தெரிகிறது. திமுக தரப்பு வேலை செய்வது அந்த அளவுக்கு வெளிப்படையாகத் தெரியவில்லை. அதற்கு காரணம் இங்கு அதிமுக ஏற்கனவே அமைப்பு பலத்துடன் இருப்பதுதான். ஒருவேளை பொதுவாக இருக்கும் அலையால் திமுக வென்றால் அதன்பின் அவர்கள் அமைப்பை மறுகட்டமைப்பு செய்யக்கூடும். அதுதான் அமைப்பு ரீதியாகவும் கொங்கு மண்டலத்தில் அவர்களை வலுவாக்கும்," என்கிறார் அவர்.

சாதிகளும் வாக்கு வங்கியும்

கொங்கு மண்டத்தின் கணிசமான எண்ணிக்கையில் வாழும் கொங்கு வேளாள கவுண்டர்கள் 1975க்கு முன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை.

திமுகவைச் சேர்ந்த அப்போதைய வெள்ளகோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 'மிசா' சாமிநாதன், காங்கயம் தொகுதியின் கோவை செழியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் டி.எம். நல்லசாமி உள்ளிட்டவர்களின் முயற்சிகளால் 1975இல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கொங்கு வேளாளக் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார்.

(கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்த சட்டமன்ற உறுப்பினர்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அப்துல் ஜபாரும் ஒருவர்.)

இதே ஆட்சிக் காலத்தில் 25% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31% ஆக்கியது திமுக அரசு.

நில உடைமைச் சமூகமாக, பெரும்பாலும் வேளாண்மையை மட்டுமே நம்பியிருந்த கவுண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அரசுப் பணிகள் பெறவும், தொழில் தொடங்கவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, இட ஒதுக்கீட்டு விகிதம் உயர்த்தப்பட்டது ஆகியவை உதவின.

ஆனால், இது திமுகவுக்கு பெரும் வாக்கு வங்கியாக கொங்கு வேளாளர்கள் மாற உதவவில்லை. 1977இல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வர் ஆன பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டது.

(வன்னியர் சங்க போராட்டங்களின் பின் பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20% என்று இது 1989இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பிரிக்கப்பட்டது.)

1980களில் பொருளாதாரப் பலன்கள், கட்சியில் கிடைத்த செல்வாக்கு, தேர்தலில் நிற்கும் வாய்ப்பு ஆகியவற்றால் அதிமுகவின் வாக்கு வங்கியாக கொங்கு வேளாளர்கள் உருவாகினார். இது 1980களுக்கு பிறகு, 1996 தேர்தலைத் தவிர, கடந்த தேர்தல் வரை திமுகவுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வாழும் அருந்ததியினரும் அதிமுகவின் வாக்கு வங்கியாகவே இருந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் அரசியலில் நுழையும் முன்பிருந்தே இந்த சமூகத்தினர் இடையே கணிசமான அபிமானத்தைப் பெற்றிருந்தார். காரணம், இவர்கள் வணங்கும் நாட்டார் தெய்வமான 'மதுரை வீரன்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் நடித்திருந்தார்.

(மன்னர் பரம்பரையில் பிறந்த மதுரை வீரன் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த தம்பதியால் வளர்க்கப்பட்டதாக இவர்களின் வாய்வழி வரலாறு சொல்கிறது.)

திமுக ஆட்சிக்காலத்தில் அருந்ததியினருக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னர், அமைப்பு ரீதியாக செய்லபடும் அருந்ததியினர் இயக்கங்களின் தலைவர்கள் பெரும்பாலானோர் திமுக ஆதரவு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பேசுபொருள் ஆகியுள்ள வன்னியர் இடஒதுக்கீடு

சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் கணிசமான இடங்களிலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் வன்னியர்களின் மக்கள்தொகை கணிசமாக உள்ளது.

பட மூலாதாரம், Aiadmk official facebook page

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களை சேர்த்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவிப்பதற்கு முன்னரே வன்னியர்கள் பரவலாக வாழும் மாவட்டங்களில், அதிமுகவை விடவும் திமுக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது.

அதன்பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தன்னை வன்னியர்களுக்கான கட்சியாகக் காட்டிக்கொண்டாலும், திமுக ஒப்பீட்டளவில் அப்பகுதிகளில் செல்வாக்கு குறையாமலே இருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20% இட ஒதுக்கீடு பெற்றுள்ள மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% மற்றும் அப்பட்டியலில் எஞ்சியுள்ள சாதிகளுக்கு 2.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

அடுத்த நாளே வன்னியர்களைத் தனது பெரும்பான்மை வாக்கு வங்கியாகக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிமுகவின் தேர்தல் கூட்டணி உறுதியானது.

இது தேர்தல் நேர நாடகம் என்றும் இதனால் வன்னியர்கள் ஏற்கனவே 10.5%க்கும் அதிகமான பலனையே பெற்று வருவதாகவும் கூறுகிறது திமுக அணி.

இந்த இட ஒதுக்கீடு ஆறு மாத காலத்துக்கு மட்டுமானதுதான் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் பேசியது பாமக தரப்புக்கு கடும் அதிருப்தியை உண்டாகியுள்ளது.

ஆனால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள தொகுதிகள் ஆகியவற்றில் அதிமுக கூட்டணி பெறும் வாக்குகளுக்கு இது ஒரு முக்கியக் காரணியாக இருக்கும் என்கிறார் இந்தப் பகுதிகள் குறித்து நன்கு பரிச்சயமான மூத்த ஊடகவியலாளர் சிவசுப்பிரமணியன்.

படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி

"எடப்பாடி பழனிசாமி சாதி சார்ந்த கட்சிகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசுவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணியும் அமைத்துக்கொள்ளவில்லை. ஆனால், இந்த ஐந்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் தங்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்று அதிமுக அணிக்கு வாக்களிக்கும் வன்னியர்களும் இந்தப் பகுதிகளில் இருக்கிறார்கள். ஆனால், பாஜகவுக்கு எதிரான மனநிலை இங்கெல்லாம் இருப்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது, " என்கிறார் சிவசுப்பிரமணியன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னெடுத்த தலித் அல்லாத சாதிகளின் கூட்டமைப்பு இப்போது நடைமுறையில் இல்லாதது குறித்துப் பேசிய அவர், "அந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான தலைவராக ராமதாஸ் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், பிற சமுதாயத்தினரின் பிரச்னைகள் என்ன என்பது குறித்துக் கூட அவர் எதையும் கேட்கவில்லை. அந்த அமைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும் இல்லை. இதனால் பிற சமுதாயங்களைச் சேர்ந்த அமைப்புகளுக்கு ராமதாஸ் மீது வருத்தம் உள்ளது, " என்கிறார்.

இந்த இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது முதலே இந்தத் தேர்தலில் ஒரு பேசுபொருள் ஆகியுள்ளது. முடிவுகளில் இது தாக்கம் செலுத்துமா என்று அடுத்த மாதம் தெரியும்.

பணம் படைத்த மாவட்டங்கள் - பின் தங்கிய மாவட்டங்கள்

இந்தியாவிலேயே மிகவும் தொழில் வளம் மிகுந்த பகுதிகளில் ஒன்று கொங்கு மண்டலம். தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது தேர்தல் காலத்தில் ஒரு முக்கியமான பிரச்னையாக விவாதிக்கப்படுகிறது என்றால், ஏற்கனவே இருக்கும் தொழில் நிறுவனங்கள் நல்ல நிலையில் இயங்க முடியாத சூழல் கொங்கு மண்டலத்தின் பிரச்னையாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 23.60 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1,51,61,000 பேர் பணிபுரிகின்றனர்.

இவற்றில் பெரும்பாலானவை கொங்கு மண்டலத்தில் உள்ளன. நெசவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் தறிகள், நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்திக்கான கருவிகள் ஆகியவற்றைத் தாண்டி பொறியியல் கருவிகள், வாகன உதிரி பாகங்கள், கிரைண்டர்கள், மோட்டார் பம்புகள், வார்ப்பட ஆலைகள், உலோகப் பொருட்கள் உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் நிரம்பி வழிகிறது கொங்கு மண்டலம்.

கடந்த சில தசாப்தங்களாகத்தான் பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை கொங்கு மண்டலத்தில் அதிகரித்து வருகிறது.

ஆனால், விவசாயம் தவிர்த்து, கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேல் முதுகெலும்பாக இருப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று காரணங்களால், அடுத்தடுத்து பலத்த அடி வாங்கியது இந்தத் துறை.

முதலாவது காரணம் 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல வங்கிகள் வாயிலான பரிவர்த்தனை செய்யாமல் பணத்தை ரொக்கமாகவே புழங்கி வந்த இந்த நிறுவனங்கள் இங்கு மிக மிக அதிகம்.

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் அமலான. ஜி.எஸ்.டி என்று பரவலாக அறியப்படும் சரக்கு மற்றும் சேவை வரியால் முன்பு செலுத்திய வரியைவிட கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியது இந்தத் துறை. கூடுதலாகச் செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில் (ரீ-ஃபண்ட்) உண்டான தாமதமும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகளின் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் காரணாமாக ஜி.எஸ்.டி-யில் சில தளர்வுகளை அளித்தது ஒன்றிய அரசு.

இவற்றில் இருந்தெல்லாம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது பேரிடியாக வந்தது கொரோனா பெருந்தொற்று பரவல்.

கொரோனா கட்டுப்பாட்டுக்காக ஊரடங்கு அமலானபோது ஆர்டர்கள், உற்பத்தி என இரண்டுமே குறையத் தொடங்கின. சில மாதங்களில் ஓரளவு மீளத் தொடங்கியபோது, இவற்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இருக்கும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியிருந்தனர்.

இப்பொழுது படிப்படியாக எல்லாமே சீரடைந்து வருகின்றன. ஆர்டர்கள், உற்பத்தி என அனைத்தும் அதிகமாகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்ட நெருக்கடிகளுக்குப் பின்னர், கூடுதல் முதலீடு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை. இப்போது இதில் இருக்கும் சிக்கல் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களால் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இங்கு நிலவுகிறது.

பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களின் அருகில் கூட இத்தகைய தொழில் நிறுவனங்களைப் பார்ப்பது கொங்கு மண்டலத்தில் மிகவும் இயல்பான காட்சிதான்.

இதற்கு முக்கியமாக, கிராமப் புறங்களில் நிலத்தின் விலை குறைவாக இருப்பது, பேருந்து வசதி இல்லாவிட்டாலும் சாலை வசதிகள் போதுமானதாக இருப்பது, கிராமப் புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்டவை காரணிகளாக இருந்தன.

சமீப ஆண்டுகளில் கிடுக்கிடுவன உயர்ந்து வரும் நிலத்தின் விலை தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு கடும் சவாலாக உள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் நேரடியாக நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

கொங்கு மண்டலத்தின் நகர்ப்புறங்களிலும் சரி, கிராமப் புறங்களிலும் சரி, நிலங்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அல்லது ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் வசம் சென்று விட்டன. குறைவான விலைக்கு நிலம் கிடைக்கும் இடங்களில் சாலை வசதி இல்லை. மும்முனை மின்சாரம் பெறுவதும் அவ்வளவு சுலபமானதாக இல்லை.

தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றில் சமீப ஆண்டுகளில் காட்டிய சிரத்தையை கிராமப்புறச் சாலைகளின் பக்கம் காட்டவில்லை என்பதை கொங்கு மண்டலத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

முதலமைச்சர் வசம் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் நெடுஞ்சாலைத் துறை மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய அளவுக்கு கிராமப்புறச் சாலைகளில் தீவிரம் காட்டாதது மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் நிதிப் பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணம்.

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் தொடர்ந்து கூறிவந்தாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இன்னும் இங்கே அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனைக்கும் காற்றாலை மின் உற்பத்தி கொங்குப் பகுதிகளில் அதிகம்.

ஜவுளி, பின்னலாடை, தறி ஆகியவை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. சமீப மாதங்களில் உண்டான பஞ்சு விலை உயர்வு தொழில் நிறுவங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என இரு தரப்புக்குமே ஒன்றிய அரசு மீது ஓர் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இத்தகைய காரணிகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் கட்சிகள் மீது அதிருப்தியை உண்டாகியுள்ளதாகவே களத்தில் இருப்பவர்கள் மூலம் அறிய முடிகிறது. ஆனால், பல தசாப்தங்களாக கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகக் கூறி இந்த மூன்று மாவட்டங்களிலும் பரப்புரை செய்து வருகின்றன அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைத் தோட்டத் தொழில் நசிவு, அதிலிருந்து வெளியேறி கோயம்புத்தூரை நோக்கிய குடிபெயர்வு மட்டுமல்லாது சுற்றுலா நோக்கில் செய்யப்படும் காடுகள் அழிப்பும் அங்கு வாழ்வாதார பிரச்னையாகவும், சுற்றுச்சூழல் பிரச்னையாகவும் உள்ளது. குன்னூர் நகராட்சி போன்ற இடங்களில் அவ்வப்போது குடிநீர் நெருக்கடி கூட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த மாவட்டத்திலேயே பெரும் அளவில் மக்கள் வாழும் ஊட்டி, குன்னூர் ஆகிய ஊர்களில் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஒரு பெரும் சவாலாக உள்ளது.

காடுகள் அளிப்பால் வன விலங்குகள் உணவுக்காக மனித வாழ்விடங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் குப்பைகளைத் தேடி வருவது கடந்த தசாப்தத்தில் ஓர் இயல்பான காட்சியாக உள்ளது.

கழிவுநீரால் இங்குள்ள நீர்நிலைகள் மாசடைவது நீலகிரி மாவட்டத்துக்கு மட்டுமல்ல. இங்கு தோன்றி கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை நோக்கி பாயும் பவானி ஆறும் பாதிக்கப்படுகிறது.

படுகர் இனத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியும் கனிசமாக உள்ளது.

வளமான பகுதிகள் - வளர்ச்சியில் இடைவெளி

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள் வடதமிழ்நாடு, கொங்கு மண்டலம் ஆகிய இரண்டுக்குமான தன்மைகளை உடையவை.

இந்த மாவட்டங்களில் இவற்றை அண்மித்துள்ள மாவட்டங்களைப் போல தொழில் வளர்ச்சி இல்லாவிட்டாலும், இவற்றின் புவியியல் அமைப்பு தொழில் வளர்ச்சி இல்லாத குறையை ஓரளவு ஈடுகட்டும் வகையில் உள்ளது.

பெங்களூரு, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக செல்வது இந்த மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்தாலும், இந்த இரு மாவட்டங்களுக்கென்று தனியாக சொல்லிக்கொள்ளும்படியான தொழில் துறை இல்லாதது ஒரு பெரும் குறைதான்.

வேளாண் பொருளாதாரத்தையே தமக்கானதாகக் கொண்டிருக்கும் இந்த மாவட்டங்கள் மாநில எல்லையில் இருப்பதால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளன. இவற்றின் இப்போதைய தேவை இங்கு இருந்து அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலத்துக்கும் செல்லும் மனித வளத்தை பயன்படுத்திக்கொள்ளும் தொழில் நிறுவனங்கள்தான்.

பின்தங்கிய பகுதிகளாக இருக்கும் இந்த மாவட்டங்களில் சமீப ஆண்டுகளில் உயர் கல்வி உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சியில் பெரும் இடைவெளி உள்ளது.

கல்வியில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் இந்த இடைவெளி, தொழில் வளர்ச்சியில் இன்னும் தொடர்ந்து வருகிறது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இந்த முறை திமுக - அதிமுக அணிகளிடையே மிகவும் நெருக்கமான போட்டி நிறைந்த இடங்களாகவே இந்த ஒன்பது மாவட்டங்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சில கருத்துக்கணிப்புகள் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கொங்கு மண்டலத்தில் இருக்கும் பல சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக அணிகளுக்கு இடையே இருக்கும் வாக்கு இடைவெளி குறைவாக இருப்பதையே காட்டுகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் பிற பகுதிகளைப் போலவே, கொங்கு மண்டலத்திலும் அதிமுக அணியைவிட கூடுதல் வாக்குகளைப் பெற்றது திமுக.

ஒவ்வொரு நாடாளுமன்ற மாக்களவைத் தொகுதிக்கும் உள்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் அடிப்படையில் அந்த வாக்குகளைப் பகுத்தாலும், திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் கூடுதல் வாக்குகளையே பெற்றது.

அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பதைத் தெரிந்துகொள்ள மே 2ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: