தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மிரள வைக்கும் ரெய்டுகள், கோடிகளில் கொள்ளை - தேர்தல் களத்தில் பரபரப்பு காட்சிகள்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
திமுக

பட மூலாதாரம், @Udhaystalin

தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகளால் பதுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. `தேர்தல் திருவிழாவில் கிடைத்த வரையில் லாபம்' எனக் கட்சி நிர்வாகிகள் கருதுவதால், தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நாள்: ஏப்ரல் 1

தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் பூத் கமிட்டி நிர்வாகி ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் இது!

` உங்க பூத்துக்கு எவ்வளவு தொகை வந்தது?'

` 3,000 ரூபாய் சார்..'

` 15,000 கொடுக்கச் சொன்னோம்.. வவுச்சர்ல கையொப்பம் போட்டிருக்கீங்களே!'

` கையெழுத்து எங்களோடதுதான். ஆனா, அமவுண்டை குறிப்பிடாம கையெழுத்து வாங்கினாங்க..!'

- இந்தப் பதிலால் அதிர்ச்சியடைந்த தேர்தல் பொறுப்பாளர், வேட்பாளர் உதயநிதியின் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, `கட்சித் தலைமை கொடுத்த பணத்தை யாரெல்லாம் பதுக்கியது?' என்பது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.

இதே பாணியில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

சென்னையில் உள்ள மிகச் சிறிய தொகுதி அது. அ.தி.மு.க சார்பாக பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளார். அண்மையில் பூத் கமிட்டியின் செலவுகளுக்காக அவர் கொடுத்த லட்சக்கணக்கான பணம் முறையாகச் சென்று சேரவில்லை. இது தொடர்பாக, வேட்பாளரே களமிறங்கி விசாரணை நடத்தியதில் சில நிர்வாகிகள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட பணத்தை காவல்துறையின் உதவியோடு மீட்டிருக்கிறார் அவர்.

இதேபோன்ற பிரச்னைகளை மாநிலம் முழுவதும் உள்ள பல தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தில் 50 சதவிகிதமே செலவிடப்படுவதாகவும் மீதமுள்ள பணத்துக்குக் கணக்கே காட்டுவதில்லை எனவும் அக்கட்சிகளின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். தென் மண்டலத்தில் உள்ள சில தொகுதிகளில் தி.மு.கவின் மாவட்ட செயலாளர்களே பெரும்பான்மையான பணத்தைப் பதுக்கிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், @Udhaystalin

``சட்டன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கான திருவிழா மட்டும் கிடையாது. ஒவ்வொரு கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் இது மிக முக்கியமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களில் எல்லாம் போராட்டம், ஆர்ப்பாட்டம் என வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவார்கள். அப்போதெல்லாம் பெரிதாக லாபம் இருக்காது. தேர்தல் காலம் வந்து விட்டால், வேட்பாளர்களின் செல்வாக்குக்கு ஏற்ப பணப்புழக்கம் இருக்கும். கிளை, ஒன்றியம், நகரம் என பலதரப்பட்ட நிர்வாகிகளும் காசு பார்க்கவே விரும்புவார்கள்," என்கிறார் தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர். தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார்.

``தி.மு.க சார்பாக ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலுக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். அவர் மூலமாகவே தொகுதிக்குள் அனைத்து விவகாரங்களும் முன்னெடுக்கப்படுவது வழக்கம். அவருக்கு உதவியாக பகுதி செயலாளர்களும் வட்ட செயலாளர்களும் செயல்படுவார்கள். சேப்பாக்கத்தை பொறுத்தவரையில்m பகுதிக்கழக செயலாளர் மூலமாக வட்டச் செயலாளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் மூலம் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் பல சுற்றுகளாகப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. `இந்தப் பணம் முறையாகச் சென்று சேர்ந்து விட்டதா?' என மேல்மட்ட நிர்வாகிகள் பெரிதாக ஆராயவில்லை. காரணம், வட்ட செயலாளர்கள் மூலமாக சரியாகச் சென்று சேர்ந்திருக்கும் என நம்பியுள்ளார். ஆனால், தொடர்ந்து பூத் கமிட்டிகளில் இருந்து புகார் வரவே நேரடியாக களமிறங்கியுள்ளனர்.

செலவுக்கே லட்சங்களில் பணம்!

இதில், பி.எல்.ஏ எனப்படும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தனித்தனியாக போன் செய்து விசாரணை நடத்தியுள்ளார். அதில், மிக குறைவான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, தொகையைக் குறிப்பிடாமல் இளைஞரணி நிர்வாகி ஒருவர் வவுச்சரில் கையொப்பம் பெற்றுள்ளார். பூத் கமிட்டிக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகள் சிலர் பதுக்கி விட்டனர். இத்தனைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களின் செலவுக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது. பூத் கமிட்டிக்கு சரியாகப் பணம் சென்று சேராததை அறிந்த தொகுதிப் பொறுப்பாளர், தலைமையின் கவனத்துக்கும் விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளார். இதனால், தி.மு.க தலைவரின் குடும்பத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விவகாரம், விஸ்வரூபம் எடுக்கலாம்" என்கிறார் விரிவாக.

மிரள வைத்த முசிறி!

பட மூலாதாரம், TWITTER

இது ஒருபுறம் என்றால், வேட்பாளர்களின் செலவுக்காக அனுப்பி வைக்கப்படும் பணத்தை கடத்துவதும் அரங்கேறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முசிறி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஒருவருக்கு சொந்தமான காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. திருச்சி - கரூர் சாலையில் உள்ள பெட்டவாய்த்தலை என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்தப் பணம் பிடிபட்டது.

அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய வெள்ளை நிற இன்னோவா காரில் அ.தி.மு.க பிரமுகர்களாக அறியப்படும் சிலர் இருந்துள்ளனர். போலீசாரிடம் சிக்குவதற்கு முன்னதாக காரில் இருந்த பணத்தைப் புதரில் வீசியுள்ளனர். இதை கவனித்த அதிகாரிகள் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், `எங்களுக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லை' என அவர்கள் கூறியதால் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

புதரில் 1 கோடி... கொள்ளை 2 கோடி!

பட மூலாதாரம், SELVARAJ FB

படக்குறிப்பு,

முசிறி அஇஅதிமுக வேட்பாளருமான செல்வராஜ் (வலது)

அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளி வந்துள்ளன. முசிறி வேட்பாளரின் தேர்தல் பணிக்காக 3 கோடி ரூபாய் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த ரவுடி கும்பல் ஒன்று அந்த காரை பின்தொடர்ந்து 2 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது. இதன் பிறகு பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தவே, காரில் இருந்தவர்கள் அந்தப் பணத்தைப் புதரில் வீசி எறிந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 6 பேர் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் திருச்சி கலெக்டர் சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் சப் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்ட அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. `இதன் பின்னணியில் அ.தி.மு.கவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இருக்கலாம்' எனவும் கூறப்படுகிறது.

திசை திருப்பும் செயலா?

இது தொடர்பாக, அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``முசிறி விவகாரத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை. வேட்பாளர் தரப்பில் தவறு நடந்ததா அல்லது திசை திருப்புவதற்காக இதுபோன்று பேசப்படுகிறதா என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து விட்டுப் பேசுகிறேன்" என்றார்.

இயல்பாக நடக்கக் கூடியதுதான்!

தி.மு.க நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ. கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``தேர்தல் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் செலவுக்காக பணம் கொடுப்பார்கள். இந்தப் பணத்தை வைத்து பூத் கமிட்டி அமைப்பது, தொண்டர்களை வைத்துக் கூட்டம் போடுவது போன்ற பணிகள் நடக்கும். இந்தப் பணத்தை சிலர் முறையாக செலவழிக்க மாட்டார்கள். இது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.

இது தொடர்பான புகார்களை தொகுதி பொறுப்பாளர்கள், கட்சித் தலைமைக்குத் தகவல் தெரிவிப்பார்கள். இதைப் பற்றிய விசாரணையின்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து எச்சரிக்கை கொடுப்போம். அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுப்போம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருப்பதால் பணம் பதுக்கல், கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இரண்டு கழகங்களும் முழுமையான விசாரணை நடத்தினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை' என்கின்றனர் இக்கட்சிகளின் தொண்டர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: