திமுக வேட்பாளராக எம்ஜிஆர் களம் கண்ட தேர்தல் மற்றும் பிற சுவையான தகவல்கள்

  • விஷ்ணுப்பிரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
எம்ஜிஆர்

பட மூலாதாரம், TWITTER

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகளும் தெரியவரும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிந்தைய தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி அந்தஸ்து கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் கிடைத்தது. ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள், முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு சவால் விடுக்கும் வகையில் சட்டமன்றத்தில் செயல்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அடுத்து வந்த தேர்தல்களில் அவர்களால் அந்த செல்வாக்கை கட்டிக் காக்க முடியவில்லை.

திமுக தொடங்கப்பட்டு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் 1957 தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

1957ஆம் ஆண்டில் அண்ணா காஞ்சிபுரத்திலும், கருணாநிதி குளித்தலை தொகுதியிலும் முதல் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டனர். 1967ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதல் முறையாக திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதா முதல் முறையாக போட்டியிட்ட தொகுதி போடிநாயக்கனூர்.

1962ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தோல்வியை தழுவினாலும், அக்கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலிலும் தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மு. கருணாநிதி.

எம்ஜிஆர். மறைவுக்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிமுகவில் ஜெயலலிதா அணிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கி ஜானகி அணிக்கு ஆதரவு வழங்கினார் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் 1989இல் நடந்த தேர்தலில் பலத்த அடியை சந்தித்தது சிவாஜியின் கட்சி. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் திமுக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.

பட மூலாதாரம், TWITTER

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெ. சீனிவாசன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தவர் சீனிவாசன். தேர்தல் முடிவுகளில் விருதுநகர் தொகுதியில் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றார். கக்கன், பக்தவத்சலம் போன்றோரும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவர் அண்ணா போட்டியிடவில்லை. மாறாக தென் சென்னை மக்களைவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல 1971ஆம் ஆண்டு தேர்தலில் காமராஜர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 ஆண்டு திமுக தேர்தலில் வென்றது. 1971இல் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோற்றது.

அதிமுக தொடங்கப்பட்டு முதன்முறையாக சந்தித்த தேர்தல், 1977ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, அந்த தேர்தலில் போட்டியிட்ட 200 தொகுதிகளில் 130ஐ கைப்பற்றி ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.

பட மூலாதாரம், DMK.IN

திமுகவில் இருந்து பிரிந்த வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 1994 ஆண்டு தொடங்கினார். அதன் பின் 13 ஆண்டுகள் கழித்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த மதிமுக முதன் முறையாக சட்டமன்றத்தில் இடம்பிடித்தது.

1996ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தெரிவித்த மூப்பனார், காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என புதிய கட்சி தொடங்கினார். 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய சில மாதங்களில் முதல் முறையாக 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. அதன் தலைவர் விஜயகாந்த் விருதாசலம் தொகுதியில் 61,337 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற ஐ.என்.டி.யூ.சி. கட்சியை சேர்ந்த வேட்பாளர் சின்னசாமி வெறும் 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 1,00,283 ஆகும்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் திமுக, அதிமுக இல்லாத மாற்றுக்கூட்டணி உருவாக்கப்பட்டது. தேமுதிக, தமாக, விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை அதில் இடம்பெற்றன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்தார்.முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் தேர்தல் களம் கண்டார்.

பட மூலாதாரம், Getty Images

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை 6,02,407ஆகும். குறைந்த வேட்பாளர்களை கொண்ட தொகுதி நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,63,370 ஆகும்.

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 320 பெண் வேட்பாளர்கள் தேர்தல் களம் கண்டனர்.

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி, சென்னையில் உள்ள ஆர். கே. நகர். இங்குதான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார். குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள் ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறை. இந்த மூன்று தொகுதிகளிலும் தலா 8 வேட்பாளார்கள் களம் கண்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் அப்போதைய திமுக தலைவர் மு. கருணாநிதி ஆவார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரா. பன்னீர்செல்வத்தைக் காட்டிலும் 68,366 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட இன்பதுரை இவர் திமுகவின் அப்பாவுவைக் காட்டிலும் 49 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: