மோதியின் மதுரை, குமரி பரப்புரை: உள்ளூர் மக்களை கவர கடைப்பிடித்த உத்தி

மோதி

பட மூலாதாரம், @EPSTamilNadu

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே எஞ்சிய நிலையில், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அதில், இரு வெவ்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளை குறிப்பிட்டு அவற்றுக்கு பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியால் மட்டுமே தீர்வைத் தர முடியும் என்று பேசினார் நரேந்திர மோதி.

இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றம் மற்றும் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள விவேகானந்தா கல்லூரியில் பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை மாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், "இன்று புனிதவெள்ளி. இயேசுவின் தியாகத்தையும் அவர் மக்களுக்காக ஏற்றுக்கொண்ட வலிகளையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். மக்களுக்கு நம்பிக்கை தரும் திட்டங்களை எடுத்துரைக்கவே வந்துள்ளேன். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பல சிக்கல்களை தீர்த்துள்ளோம். 1964ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளாக சேதமடைந்த தனுஷ்கோடி ராமேஸ்வரம் சாலையை சரி செய்துள்ளோம். முந்தைய அரசுகளால் ஒதுக்கபட்ட பாம்பன் பாலத்தையும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மும்பை - கன்னியாகுமரி பொருளாதார வழித்தடம் அமைக்கும் பணிக்கான திட்டம் அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் சாலையை மேம்படுத்த 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார் மோதி.

"பாஜகவின் சிந்தைனை நாட்டின் வளர்ச்சி மீது இருக்கும் நிலையில் எதிர்கட்சிகளின் சிந்தனை அவற்றின் வாரிசுகள் மீதும் சொத்து சேர்ப்பதிலுமே உள்ளது."

"முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை அவரது பிறந்த மண்ணான ராமேஸ்வரத்திலேயே அமைத்து அடையாளம் ஆக்கியுள்ளோம். கருணாநிதியின் தோளோடு தோள் கொடுத்து பணியாற்றிய மூத்த திமுக தலைவர்கள் இன்று இளம் வாரிசுகளை கண்டு மனக்குமுறல்களுடன் உள்ளனர். தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது அரசியலில் வாரிசு உரிமைகளுக்கு மக்கள் எதிராக உள்ளனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி பலமுறை கவிழ்த்துள்ளது," என்று குறிப்பிட்டார் நரேந்திர மோதி.

"பாஜகவின் சித்தாந்தம் அனைவரும் இணைந்து அனைவரின் நம்பிக்கையையும் பெற்று மக்களுக்கு சேவை செய்வதுதான். அதற்கு முன் ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் இந்தியர்களாகவே பார்கிறோம். இரானில் இந்தியாவை சேர்ந்ந செவிலியர் ஒருவர் சிக்கித் தவித்த போது அவரை பாதுகாப்பாக மீட்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தோம். தமிழகத்தை சேர்ந்த அருட்தந்தை அலெக்ஸிஸ் பிரேம்குமார் அப்கானிஸ்தானில் சேவையாற்ற சென்ற நிலையில் தீவிரவாதிகளிடம் சிக்கித் தவித்தபோது, அவரை மீட்க முடியாது என குடும்பத்தினரே நினைத்த நிலையில் அவரை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வந்துள்ளோம்"

"கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்று பரவிய நிலையில் பல இந்தியர்கள் பல நாடுகளில் சிக்கி தவித்த நிலையில் அவர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் பாதுகாப்பாக இந்தியா கொண்டு வந்தோம். வெளிநாட்டில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 5 லட்சம் பேரையும் மீட்டு இந்தியா கொண்டு வந்தோம். அப்போது அவர்கள் எந்த ஜாதி மதம், எந்த புனித நூல்களை படிப்பவர்கள் என்று நாங்கள் பார்க்கவில்லை, அனைவரையும் இந்தியர்களாகவே பார்த்தோம்.

செழிப்பான பண்ணைகள், வளமான தொழிற்சாலைகள், வளமான மீன் வளம் அமைக்கும் வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் கொப்பரை தேங்காயின் விலை கடந்த ஆட்சியை விட அதிகமாக விவசாயிகளுக்கு கிடைக்க செய்துள்ளோம். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக நாங்கள் கூடுதல் முயற்சி எடுத்து வருகிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து 40 இந்திய மீனவர்களையும் 4 படகுகளையும் மீட்டுள்ளோம் தற்போதைய நிலையில் எந்த இந்திய மீனவர்களின் படகுகளும் இலங்கையில் இல்லை. மீனவர்கள் மீன் பிடித்து வந்த பிறகு அவற்றை விற்பனை செய்ய உள்ளூர் தடைகள் நீக்கப்படும். சரியான சாலைகள், உள்ளூர் நீர்வழிகள் அமைக்கப்படும். பிஎல்ஐ திட்டம் எனப்படும் உணவு பதப்படுத்தும் திட்டம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்கும். குமரி மக்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனுடன் நீண்ட காலம் பணியாற்றி உள்ளேன். அவரை வரும் 6ஆம் தேதி நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அவர் பாராளுமன்றத்தில் உங்களுடைய குரலாக ஒலித்துக்கொண்டிப்பார் என்றார் பிரதமர் மோதி.

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வை குறிப்பிட்ட மோதி

பட மூலாதாரம், @narendramodi

முன்னதாக, மதுரை அம்மா திடலில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மோதி, "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜல்லிக்கட்டை 2011ஆம் ஆண்டு தடை செய்தது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு அந்த தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. அதற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஒப்புதல் அளித்தது," என்று கூறினார்.

2011இல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒரு மத்திய அமைச்சர் அது ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என விவரித்தார். 2016ஆம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என கூறியது. ஆனால் 2016-17இல் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து அதிமுக அரசு, அதுவரை அமலில் இருந்த தடையை நீக்கி அவசர சட்டம் கொண்டு வந்தது.

(கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற இயலாத சூழல் நிலவியது. இந்த தடைக்கு எதிராக மாநிலம் முழுதும் தீவிரமாக போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு 2017ஆம் ஆண்டு அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததால், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. சில நாட்களுக்கு முன் போடியில் பரப்புரை செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்கக் காரணம், என்றார்.)

காங்கிரஸும், திமுகவும் பலமுறை பதவியில் இருந்தும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை பற்றி யோசித்தது கூட கிடையாது. உரிய நடைமுறைகளை பின்பற்றி மருத்துவமனை திட்ட வேலைகள் மேற்கொள்ளப்படும். தொற்று நோய் சிகிச்சைகக்காக ஒரு தனி பிரிவு சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும். மருத்துவ பட்டபடிப்பிற்கும், மேற்பட்டபடிப்பிற்குமான இடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பையும், பொறியியல் படிப்பையும் மாணவர்கள் தாய்மொழியில் பயில்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது, என்று கூறினார் மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: