தேர்தல் செலவுக்கு போதுமான பணம் கொடுக்கவில்லை, எனவே பாஜகவுக்கு மாறினேன் - அதிர்ச்சி கொடுத்த வேட்பாளர்

பாரதிய ஜனதா கட்சி

பட மூலாதாரம், Getty Images

(இன்று 03.04.2021 சனிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

இன்னும் ஒரு சில நாட்களில் அசாம் மாநிலத்தில் மூன்றாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் ஒரு வேட்பாளர் தடாலடியாக பாஜகவில் இணைந்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தின் மூன்றாம் கட்ட தேர்தலில், தமல்பூர் என்கிற சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ரங்ஜா குங்கூர் பாசுமாடரி என்பவர் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அவர் வேட்புமனு தாக்கல் செய்து, போட்டியிடுவதும் தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

வாக்குப் பதிவுக்கு மிகச் சில நாள்களே இருக்கும் இந்த நேரத்தில், அவர் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியை விட்டு, பாரதிய ஜனதா கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், இத்தேர்தலில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதை அசாம் மாநில பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ், போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. மறுபக்கம் பாஜக, யுனைடெட் பீபிள்ஸ் பார்டி லிபரல் போன்ற கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறது.

ரங்ஜா குங்கூர் பாசுமாடரி தற்போது தன் வேட்பு மனுவை வாபஸ் வாங்க முடியாது. இத்தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அசாம் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் அவர் கூறியுள்ளார்.

இது பாஜகவின் கூட்டணியில் இருக்கும் யுனைடெட் பீபிள்ஸ் பார்டி லிபரலின் தமல்பூர் வேட்பாளர் லெஹோ ராம் போரோ வெற்றி பெறுவதை எளிதாக்கி இருக்கிறது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏன் திடீரென பாஜகவில் இணைந்தீர்கள் எனக் கேட்டதற்கு "தோ்தல் செலவுக்காக போடோலாந்து கட்சி தேவையான நிதியைத் தராத காரணத்தால் கட்சி மாறினேன்" என கூறியதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறைக்கு மோதி விமானத்தில் சோதனை செய்ய தைரியம் இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி வரும் விமானத்தில் சோதனை செய்வதற்கு வருமான வரித்துறையினருக்கு தைரியம் இருக்கிறதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வடலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் "என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.

தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோதி வரும் விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா? பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா?" என கேள்வி எழுப்பியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிஏஏ அமல் குறித்துதான் முதல் ஆலோசனை: மேற்கு வங்கத்தில் அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கூட்டத்திலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல் குறித்துதான் ஆலோசனை நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

பரய்பூா், ஆரம்பாக் ஆகிய இரண்டு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை பேரணியாக சென்று பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவா் அளித்த பேட்டியில் "மேற்கு வங்கத்தில் முதல் இரண்டு கட்டத் தோ்தல் நடைபெற்றுள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனா். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கூட்டத்திலேயே குடியுரிமை திருத்தச் சட்ட அமல் குறித்து தான் முதல் ஆலோசனை நடைபெறும்.

தோ்தலுக்கு முன்பு நந்திகிராம் தொகுதியில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறி வந்த மம்தா பானா்ஜி, தற்போது தேவையான வாக்குகளைப் பெறுவேன் என்று கூறுகிறார். இதன் மூலம் மம்தா பானா்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது" என அமித் ஷா பேசியதாக அச்செய்தியில் கூறப்படுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: