கனிமொழிக்கு கொரோனா; கடைசி கட்ட பிரசாரத்தை தவறவிட்டதால் கவலை

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
கனிமொழி

பட மூலாதாரம், KANIMOZHI TWITTER

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்றால் வேட்பாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை தி.மு.க எம்.பி கனிமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களே இருப்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு தலைவர்கள் தங்களின் பிரசாரப் பயணங்களை முன்னெடுக்கின்றனர். அனல் பறக்கும் வெயிலிலும் தங்களது உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும் தவறுவதில்லை. அதையும் மீறி வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் அவதிப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், மருத்துவமனையில் இருந்தபடியே டிஜிட்டல் பிரசாரங்களை முன்னெடுத்தார்.

`மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்பதுதான் சிறந்தது. என்னால் முடிந்த அளவுக்கு வீடியோ கால் மூலம் மக்களிடம் பேசி வருகிறேன்' என்கிறார்.

தொடர்ந்து விருகம்பாக்கம் தே.மு.தி.க வேட்பாளர் பார்த்தசாரதி, துறையூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் இந்திரா காந்தி, அம்பத்தூர் தி.மு.க வேட்பாளர் ஜோசப் சாமுவேல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக கட்சியின் இதர நிர்வாகிகள், தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க மகளிரணித் தலைவியும் எம்.பியுமான கனிமொழிக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு வந்தார். நேற்று ராஜபாளையம், சங்கரன்கோவில், ஆலங்குளம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டிருந்தார். மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது, பா.ஜ.க வேட்பாளர்களின் மிரட்டல்களுக்குப் பதில் அளிப்பது எனப் பரபரப்பாக இயங்கி வந்தார்.

பட மூலாதாரம், KANIMOZHI TWITTER

இதையடுத்து, நேற்று மாலை சென்னை திரும்பிய அவர், தொடர்ந்து கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

`கொரோனா தாக்கம் இருக்கலாம்' என்ற அச்சத்தில் தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் கனிமொழியின் வீட்டுக்கே வந்து பரிசோதனை செய்துள்ளனர். சரியாக 11 மணியளவில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

`எப்படியிருக்கிறார் கனிமொழி?' என தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம்.

``தொடர் பிரசார பயணங்களாலும் மக்களைத் தொடர்ந்து சந்தித்ததாலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். கடந்த 1 ஆம் தேதி அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, கனிமொழியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ` அமித் ஷா பிரசாரம் செய்து விட்டுப் போயிருக்கிறார். கரூரிலும் அரவக்குறிச்சியிலும் பிரசாரம் செய்ய வேண்டும். மறக்காமல் அங்கே செல்லுங்கள்' என உத்தரவிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட கனிமொழி, கரூரில் பேச வேண்டிய விவகாரங்களைக் குறிப்பெடுத்து வைத்திருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் அவரால் அங்கே போக முடியவில்லை.

இது தொடர்பாக, உடனே கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டவர், `என்னால் வர முடியவில்லை. மிகுந்த வேதனையில் இருக்கிறேன்' என்றார். அதேபோல், திருப்பூர் பிரசாரத்தை முடித்து விட்டு தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருந்தார். அதுவும் முடியாமல் போய்விட்டது. இவ்வளவு நாள் செய்த பிரசாரத்தைவிடவும் கடைசி இரண்டு நாள் பிரசாரத்தை மிகவும் முக்கியமானதாக நினைத்தார். அது சாத்தியப்படாமல் போனதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்" என்கின்றனர் விரிவாக.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: