இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா இரண்டாம் அலை: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

இந்தியாவில் தீவிரமடைகிறது இரண்டாவது கொரோனா அலை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவும் வேகம், பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 1,400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. தேசிய பங்குசந்தையில் நிஃப்டி 388 புள்ளிகள் சரிவடைந்தது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவு நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

பெருந்தொற்று கண்டறிப்பட்ட பிறகு ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாட்டில் கொரோனா நிலை குறித்தும், தடுப்பூசி போடும் திட்டம் பற்றியும் ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவிஷீல்ட், கோவாக்சின் தவிர மூன்றாவது தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின்படி ஏப்ரல் 4-ஆம் தேதியன்று இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 478 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,89,067 கோடியாக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,65,101. தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 7,41,830.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் அலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தைத் தொட்டது. செப்டம்பர் 17-ஆம் தேதியன்று 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. பின்னர் மார்ச் மாதத்தில் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இங்கு 57,074 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் மும்பையில் மட்டும் 11,163 பேர். தமிழ்நாட்டில் கடந்த இரு நாள்களாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 நாள்களில் நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொரானா தொற்றுகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவின் பங்கு 57 சதவிகிதமாகும். உயிரிழப்பில் 47 சதவிகிதம். இது பற்றி பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா தவிர பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக எடுத்துரைக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை வழக்கங்கள் கைவிடப்பட்டதே கொரோனாவின் பரவல் மிக வேகமாக அதிகரித்ததற்குக் காரணம் என இந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்காக வரும் 6-ஆம் தேதி முதல் சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

மகராஷ்டிராவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: