தமிழ்நாட்டு அரசியலில் முத்திரை பதித்தவர்களின் பயணம் - காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி

பட மூலாதாரம், Twitter/ Getty Images

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டோமானால் அது எண்ணற்ற திருப்புமுனைகளை கொண்டிருப்பதை காண முடியும். ஆனால், அவை யாவும் சற்றேறக்குறைய பத்து தலைவர்களின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்தவையாகவே இருக்கும்.

இந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளுகளில் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தலைவர்கள், தற்போது களத்தில் உள்ள தலைவர்களின் வாழ்க்கைப் போக்கை விவரிக்கும் வகையில் பிபிசி தமிழில் வெளியான கட்டுரைகளை இங்கே பெயர் வாரியாக தொகுத்தளிக்கிறோம்.

காமராஜர்

பட மூலாதாரம், Twitter

மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பிறகு பதவியைத் துறந்து, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜை குறிப்பிடலாம்.

தனது வாழ்காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் காமராஜ் அணி, ராஜாஜி அணி என இரு அணிகள் இயங்கும் அளவுக்கு தனக்கென தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட தலைவராக விளங்கினார்.

அண்ணாதுரை

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். அவர்தான் அண்ணா.

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவரும் இவரே.

கருணாநிதி

படக்குறிப்பு,

சிவாஜி கணேசன் - கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் அண்ணாதுரை மறைந்தவுடன் புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.

எம்.ஜி. ராமச்சந்திரன்

திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார்.

திரையில் எம்ஜிஆர் என்ன பேசினாலும், அது அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு செய்தி விடுக்கும் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதுவரை தேசிய அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையே நிலவிய போட்டியில், திராவிட இயக்க அரசியலை தூக்கிப்பிடிக்கும் முகமாக எம்ஜிஆரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் அங்கீகரித்தன.

ஜெயலலிதா

தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.

ஒரு நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் மிகவும் வெற்றிகரமான மனிதராக ஜெயலலிதா காட்சியளித்தாலும் அதற்குப் பின்னால் வலிமிகுந்த வாழ்க்கை இருந்தது.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், AFP

தி.மு.கவின் இளைஞரணி செயலராக மு.க. ஸ்டாலின் மீது வெளிச்சம் படர ஆரம்பித்தபோது, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தாலும் மு. கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வரவில்லை என்பதை தன் கடுமையான உழைப்பின் மூலம் சுட்டிக்காட்டியவர் மு.க. ஸ்டாலின்.

தனது தந்தை மீது வைக்கப்பட்ட வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை தற்போது மு.க. ஸ்டாலினும் எதிர்கொள்கிறார். 2021 தேர்தலின் முடிவுகள், மு.க. ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாது, தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.

வி.கே. சசிகலா

பட மூலாதாரம், Getty Images

ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒதுக்கிவைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது.

எடப்பாடி கே. பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து மெல்லமெல்ல கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் தன் அரசியல் சாணக்கியத்தனத்தை நிரூபித்தவர். இத்தனைக்கும் அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி தேர்தல் தோல்விகளால் நிறைந்தது.

காமராஜர், பக்தவத்சலம், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற நிலையை எட்டியிருக்கிறார் பழனிசாமி. தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவர் இதுவரை வெற்றிபெற்றதில்லை என்பது உண்மைதான்.

சீமான்

சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிக் காலத்திலும் திராவிட இயக்க சிந்தனைகளில் பிடிப்புள்ளவராக சீமான் இருந்துள்ளார். இதற்காக தனது நோட்டு புத்தகங்களில் எல்லாம் உதயசூரியன் சின்னத்தைத்தான் வரைந்து வைத்திருப்பார். திராவிட இயக்க வரலாறு குறித்து நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

திரைத் துறையில் கோலோச்சினாலும் பெரியாரிய கொள்கைளையும் சாதி ஒழிப்பையும் மையமாக வைத்து சீமான் பேசி வந்தார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே கூட்டம் கூடியது. இயல்பாகவே திராவிட இயக்க சிந்தனைகளில் ஊறித் திளைத்ததால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரியவராகவும் இருந்தார். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கானவராக இருந்தார்.

கமல் ஹாசன்

பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளர்ந்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய கமல் தற்போது கோவை தெற்குத் தொகுதியில் வாக்குகளைக் கோரி வருகிறார். அவருடைய அரசியல் பயணம் மிகக் குறுகியது என்றாலும், திரையுலகப் பயணம் அசாத்தியமானது.

கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவரது கொள்கை எதனை அடிப்படையாக வைத்தது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்துப் பேசியபோது "என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்" என்றார். அதன் பொருள் பலருக்கும் விளங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: