முகேஷ் அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலகல்

Anil Deshmukh
படக்குறிப்பு,

அனில் தேஷ்முக்

தமக்கு எதிராக மூத்த காவல் அதிகாரி பரம்பீர் சிங் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ ஆரம்பகட்ட விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலகியுள்ளார்.

நீதிமன்றம் தம் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால், தார்மிக அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக், தமது பதவி விலகல் கடிதத்தை சிவசேனை கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவிடம் இன்று வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 'ஆன்டிலியா' இல்லம் அருகே வெடிபொருட்களுடன் நின்றுகொண்டிருந்த ஒரு வாகனம் பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்த மாநிலத்தில் இதை மையப்படுத்தி அரசியல் புயல் வீசி வருகிறது.

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக மும்பை மாநகரக் காவல்துறை விசாரித்து வந்த நிலையில் மும்பையின் காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங், மகாராஷ்டிர மாநிலத்தில் ஊர்க் காவல் படையின் தலைமைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் அனுப்பிய கடிதம், அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

படக்குறிப்பு,

பரம்பீர் சிங்

சச்சின் வாசே எனும் மகாராஷ்டிர காவல் அதிகாரி இந்த சதியில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் தேஷ்முக் பல முறை சச்சின் வாசேவைத் தனது இல்லத்திற்கு அழைத்திருக்கிறார் என்று அக்கடிதத்தில் பரம்பீர் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்து, மாதத்திற்கு நூறு கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேஷ்முக் சச்சின் வாசேவிடம் கூறியுள்ளார் என்றும் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

இந்த நிகழ்வுகளுக்கிடையே அனில் தேஷ்முக் பதவி விலகியுள்ளது இந்த விவகாரத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார்

பிப்ரவரி 25 அன்று காலை மும்பையின் மையமான பகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றிய கார் ஒன்று நின்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

வெடிகுண்டு கண்டுபிடித்து அகற்றும் வல்லுநர்களோடு அங்கு வந்த போலீசார், அந்தப் பகுதியை பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவந்தபின், ஆளில்லாத அந்த காரை பரிசோதனை செய்தனர். உள்ளே, 2.5 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

வெடிபொருள் ஏற்றிய கார், தானேவில் கார் உதிரிபாகம் விற்கும் கடை நடத்தும் மன்சுக் ஹிரன் என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரித்தபோது, அந்த கார் வேறொருவருக்கு சொந்தமானது என்றும், கார் ரிப்பேர் செய்ததற்கு அவர் பணம் தராததால் தாம் அதை எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Mumbai police

படக்குறிப்பு,

ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார்

வாகனப் பதிவெண் போர்டுகள், முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் எழுதப்பட்ட அச்சிட்ட மிரட்டல் குறிப்பு ஆகியவற்றையும் காவல் துறையினர் அந்தக் காரில் கண்டெடுத்தனர்.

அடுத்த சில நாள்களில், அந்த வண்டியின் உரிமையாளர் என்று சொல்லப்படும் மன்சுக் ஹிரன் என்பவரின் சடலம், மும்பை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அந்த நபருக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படும் காவல் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, வெடிபொருள் ஏற்றிய கார் தொடர்பான புலன் விசாரணையை, மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான, தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்களோடு காரை நிறுத்தும் திட்டத்தில் சச்சின் வாசேவுக்கு பங்கு உண்டு என்கிறார்கள் தேசிய புலனாய்வு முகமையினர். கைதாகியுள்ள சச்சின் வாசே அதை மறுக்கிறார்.

தனது கணவருக்கு வாசேவை நன்கு தெரியும் என்றும் அந்த ஸ்கார்பியோவை சச்சின் வாசே இரண்டாண்டுகளாகப் பயன்படுத்தி வந்ததாகவும் ஹிரானின் மனைவி கூறியுள்ளார்.

ஆனால், ஹிரான் பற்றியோ, அவரது கொலை பற்றிய தமக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் சச்சின் வாசே.

அவர் 1990ம் ஆண்டு போலீஸில் சேர்ந்தவர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லப்படும் ஒரு போலீஸ் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: