இரட்டைத் திரிபு கொரோனா: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.31 லட்சம்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்துவிட்டதாக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் நாட்டில் 1.31 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல் அலையின் எண்ணிக்கையைக் கடந்து புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைரஸ் பரவல். இதற்கு முக்கியமான காரணம் இரட்டைத் திரிபு கொரோனா என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கணிசமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கடந்த 9 நாட்களில் ஒரு நாள் பாதிப்பின் அளவு இரண்டு மடங்கைக் கடந்திருக்கிறது. மார்ச் மாத இறுதியில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரமாக இருந்தது, தற்போது 1.31 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

இறப்புகளின் எண்ணிக்கையும் இதே விகிதத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் 354 பேர் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 780 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் கடந்த 9 நாள்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த சில நாள்களாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த இரு நாள்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. நேற்றைய நிலவரப்படி 4,276 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இரட்டைத் திரிபு கொரோனா என்பது என்ன?

மகாராஷ்டிராவில் பெருமளவிலான பாதிப்புக்கு இரட்டைத் திரிபு கொரோனாவே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இரட்டைத் திரிபு கொரோனா பரவியிருக்கலாம் என்றாலும் உறுதியான புள்ளி விவரங்கள் இல்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, பல்வேறு பகுதிகளிலும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இப்படித் திரிபடைந்த பல்லாயிரக் கணக்கான வகைகள் விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத இரட்டைத் திரிபு கொரோனா மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது ஒரே வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாகவும் உருப்பெற்றிருக்கிறது. இந்த வகைக்கு B.1.617 என விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கு போடப்படுகின்றன. ஒன்று சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட். மற்றொன்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின். இந்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதியானவர்கள். இந்த வயது வரம்பை உடனடியாகக் குறைக்க முடியாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறையா?

இந்தியாவில் தடுப்பூசி போடத் தொடங்கியபோது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அதைச் செலுத்திக் கொள்ள முன்வந்தார்கள். தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். தங்களுக்கு போதிய அளவுக்கு தடுப்பூசிகள் வழங்ககப்படவில்லை என மாநில அரசுகள் மத்திய அரசு மீது குறைகூறத் தொடங்கிவிட்டன.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநில அரசுகள் தங்களிடம் தடுப்பூசிகள் போதிய அளவு இல்லை என புகார் கூறியுள்ளன. மும்பைில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியது மத்திய அரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளை முறையாகப் பயன்படுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் குறைகூறியுள்ளார். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மகாராஷ்டிராவிடம் இருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் - துணைநிலை ஆளுநர் தமிழிசை

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 10) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இது குறித்து கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இன்று பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். அதில், கொரோனா‌ தொற்று அதிகரித்து இருக்கிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மிகத் தீவிர நடவடிக்கைகளைப் புதுச்சேரி அரசு மேற்கொள்ள இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுகிறது.

"100 சதவீத கட்டுப்பாடு அதனை மையமாகக் கொண்டு 100 விதி அடிப்படையில், 11ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை 100 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. மேலும் 100 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 100 சதவீதம் கொரோனாவை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது," என்றார் அவர்.

புதுச்சேரியில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

புதுச்சேரியில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் இல்லாமல், யாரும் நடமாடக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக முகக் கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

திரையரங்குகள் அனைத்திலும் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

பொது விழாக்கள், இலக்கிய விழாக்கள், சமய விழாக்கள், குடும்ப விழாக்கள் அனைத்திலும் இருக்கைகள் ஒன்றுக்கு ஒன்று இடைவெளி விட்டே அமர வேண்டும்.

கோயில்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், பூஜைகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு மேல் கோயில் நடைகள் மூடப்படும்.

புதுச்சேரியில் இரவு 12 மணி முதல் 5மணி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. இதில், மக்கள் நடமாட்டத்திற்கும், கடைகள் திறப்பதற்கும் அனுமதி இல்லை.

பேருந்துகளில் சமூக இடைவெளி கடைப்பிடித்து இருக்கைகளில் அமர வேண்டும். பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய‌ அனுமதியில்லை.

ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். கார் டாக்சியில் சமூக இடைவெளியுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மூன்று வேளை கொரோனா தடுப்பூசி போடப்படும்.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.

"கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், அனைத்து தரப்பினருடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

புதுச்சேரியில் இருக்கும் ஒவ்வொரு அரசு செயலர்கள், புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு பணியை மேற்பார்வையிட உள்ளனர்.

முதல் கட்டமாக தற்போது குறிப்பிட்ட கொரோனா நடவடிக்கைகள் அனைத்தும் புதுச்சேரியில் நாளைமுதல் அமல்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்," என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: