தமிழக ஆளுநரின் புதிய நியமனங்கள் - சர்ச்சையாகும் உத்தரவுகளின் அதிர்ச்சிப் பின்னணி

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
பன்வாரி லால் கிரிஜா வைத்தியநாதன்

பட மூலாதாரம், Twitter

தமிழக ஆளுநர் மாளிகையை மையமாக வைத்து புதிய சர்ச்சைகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் முடிந்த நிலையில், புதிய துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்துக்குக் கடந்த 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. `வாக்கு இயந்திரம் விவகாரத்தில் தவறு நேர்ந்துவிடக் கூடாது' என இரவு பகலாக அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய துணைவேந்தர் நியமனம் உள்பட ஆளுநரின் சில அதிரடி நடவடிக்கைகளால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

புதிய துணைவேந்தர் நியமனம்

சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த மறுநாள், ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கே.என்.செல்வகுமாரை, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.

"டாக்டர் கே.என்.செல்வகுமார், தான் பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்" என குறிப்பிட்டுவிட்டு, `கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மூத்த பேராசிரியரான செல்வகுமார், ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன், கால்நடை பராமரிப்புத் துறை தொழில்நுட்பக் கண்காணிப்புக்குழு உறுப்பினர், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதூரக் கல்வி இயக்குநர், கல்விக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்' என விவரிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாத காலம் ஏன் பொறுக்கக் கூடாது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

துரைமுருகன்

ஆளுநரின் நியமன உத்தரவுக்கு எதிராக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், `ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கின்ற நல்ல தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனைத் திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிகத் தெளிவாகத் தெரிகிறது. வாக்குப் பதிவு நடந்த அன்றோ, அடுத்த நாளோ வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும்.

ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒருமாத காலம் இடைவெளி இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பைப் பல ஆண்டுகளுக்கு ஏற்கப்போகும் துணைவேந்தரின் பெயரை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாது என்பதுதான் எனது கேள்வி. இதுபோதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தேடுதல் குழு சர்ச்சை

`ஆளுநரின் அவசர அறிவிப்பு ஏன்?' என மூத்த கல்வியாளர் ப.சிவக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஆளுநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் எஸ்.பி.தியாகராஜன், ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதே குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக ஜே.என்.யூ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜே.என்.யூவில் மாணவர் போராட்டம் வெடித்தபோது அதைப் பல வகைககளிலும் ஜெகதீஸ் குமார் ஒடுக்கினார். இப்படிப்பட்ட ஒருவரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தேடுதல் குழுவில் ஆளுநர் நியமித்தார்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து அறிவிப்பு வருகின்ற வரையில் ஆளுநர் எந்த முடிவையும் எடுப்பது சரியானதல்ல. புதிதாக அமையப் போகின்ற அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரை கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை அவசரம் அவசரமாக ஆளுநர் நியமித்துள்ளார். இது மாநில அரசின் உரிமைகளை மீறுகின்ற செயலாகப் பார்க்கிறோம். மத்திய அரசு, மாநிலப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்துவதாகத் தொடர்ந்து பேசி வருகிறோம். அதை நிரூபிக்கும் வரையில் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" என்கிறார்.

ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?

பட மூலாதாரம், TWITTER/ K P ANBALAGAN

படக்குறிப்பு,

கே.பி.அன்பழகன்

`அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறதே?' என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். நாம் கூறிய தகவல்களை பொறுமையாகக் கேட்டவர், ``சிறிது நேரத்தில் இதுதொடர்பாக விரிவாகப் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இதையடுத்து, `ஆளுநரின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தற்போது நான் பேச முடியாத சூழலில் இருக்கிறேன். அதேநேரம், ஆளுநருக்கு ஏன் இவ்வளவு அவசரம் எனத் தெரியவில்லை. இவ்வாறு பதவிகளை நிரப்புவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், யாரையும் கலந்தாலோசிக்காமல் நியமனம் செய்ததில் நியாயம் இல்லை" என்றார்.

மாநில அரசுக்கு உரிமை உள்ளதா?

`ஆளுநர் மீது புகார்கள் அணிவகுக்கிறதே?' என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``எந்த அரசாங்கம் வந்தாலும் ஆளுநர் இருப்பார். அவருக்குப் பதவிக்காலம் இருக்கிறது. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர்தான் புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும். மாநில அரசின் பரிந்துரைப்படி நியமிக்க வேண்டும் என எந்த இடத்தில் சொல்ல சொல்லப்பட்டுள்ளது? தேடுதல் குழு பரிந்துரை கொடுத்திருக்கும். அதன் அடிப்படையில் கால்நடைப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சட்ட விதிமீறல் எங்கே உள்ளது?

அப்படிப் பார்த்தால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நியமனத்தில் மாநில அரசின் பங்களிப்பு எங்கே இருக்கிறது? தேடுதல் குழுவின் பரிந்துரைகளை ஏற்கவும் நிராகரிக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றால், தேடுதல் குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்கிறார்.

சிக்கலில் கிரிஜா வைத்தியநாதன்

இதற்கிடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணர்-உறுப்பினராக கிரிஜா வைத்திநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடைவிதித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், `தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொழில்நுட்ப உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் கல்வித் துறை சார்ந்தவர்களாக இருந்தால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து நேரடி களத்தில் பணியாற்றிய அனுபவமும் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாரிகள் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றிய அனுபவமும் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் சார்ந்த பணி என்ன என்பது விளக்கப்படவில்லை. கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு குறிப்பிடப்பட்ட தகுதியை இங்கேயும் பொருத்திப் பார்த்தால், அதிகாரிகளும் சுற்றுச்சூழல் சார்ந்து நேரடியாக கள அனுபவம் பெற வேண்டும் என்றே சொல்ல வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு அந்த அனுபவம் இல்லை' என மனுவில் குறிப்பிட்டிருந்தது.

அதிகார துஷ்பிரயோகமா?

இதனை எதிர்த்து பதில் மனுத்தாக்கல் செய்த மத்திய அரசுத் தரப்பு, `கிரிஜா வைத்தியநாதன் மூன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல்துறை செயலராகவும் தலைமைச் செயலராக இருந்தபோது அவர் சுற்றுச்சூழல் துறை சார்ந்த விவகாரங்களையும் கவனித்தார்' எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு முடிவடையும் வரையில் கிரிஜா நியமனத்துக்கு நீதியரசர்கள் தடை விதித்தனர்.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக பிபிசி தமிழிடம் விவரித்த பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், "மத்திய அரசு, நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இங்கு பல நுகர்வோர் நீதிமன்றங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் நியமித்துள்ளனர். தி.மு.கவில் மாவட்ட மகளிரணித் தலைவியாக இருந்தவரையெல்லாம் பதவிக்குக் கொண்டு வந்தனர். எனவே, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா நியமிக்கப்பட்டதை அதிகார துஷ்பிரயோகமாகப் பார்க்க முடியாது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: