கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய உத்தர பிரதேச அரசு மருத்துவமனை ஊழியர்

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய உத்தர பிரதேச அரசு மருத்துவமனை ஊழியர்

பட மூலாதாரம், PRAKASH SINGH

(இன்று 10.04.2021 சனிக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 மூதாட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று சரோஜ் (70), அங்கரளி (72), சத்யவதி (60) என்ற 3 மூதாட்டிகள் சென்றனர். ஆனால், அதே மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி முகாமும் நேற்று நடைபெற்றுள்ளது.

இரு தடுப்பூசி முகாம்களும் நடைபெற்ற நிலையில், மருத்துவமனைக்கு வந்த மூதாட்டிகள் மூன்று பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பகுதிக்கு சென்று வரிசையில் நிற்காமல் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பகுதிக்கு சென்று வரிசையில் நின்றுள்ளனர். அங்கு இருந்த மருத்துவ ஊழியர் எந்த தடுப்பூசி செலுத்த வந்துள்ளனர் என்று மூதாட்டிகளிடம் எந்த வித கேள்வியையும் கேட்காமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த தான் வந்துள்ளனர் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு மூதாட்டிகள் மூன்று பேருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

வீடு திரும்பிய மூதாட்டியில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் மூதாட்டி காண்பித்துள்ளார்.

அதை ஆராய்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர் தவறுதலாக தடுப்பூசி செலுத்தியதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அரசு மருத்துவமனை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து உத்தரபிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"கொரோனா இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்"

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்றைத் தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகள் பலன் அளிக்காவிட்டால், இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படும் என தமிழக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒரு சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதித்தும், சிலவற்றுக்கு கட்டுப்பாடுகளுடனும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அவை சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால், இரவு நேரத்தில் ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இரண்டாவது அலையைச் சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"ஏப்ரல் 14-16 வரை தடுப்பூசி திருவிழா" - தமிழக அரசு முடிவு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி போடும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக ஏப்ரல் 14 முதல் 16 வரை மாவட்டந்தோறும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுவதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஏப்ரல் 8 வரை, 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா நோய் குணப்படுத்தும் முறையில் இந்திய முறை மருத்துவம் ஈடுபடுத்தப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வல்லுநர்களோடு அடிக்கடி கலந்து ஆலோசித்து அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலவரையறைக்குள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியை முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக 14 ஏப்ரல் 16 ஏப்ரல் வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதியான நபர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது" என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: