தமிழ்நாட்டில் இன்று முதல் அமலாகிறது புதிய கொரோனா கட்டுப்பாடுகள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தீவிரமாகும் கொரோனா பரவல்: தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 10, சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

எனினும், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்துவிட்டதாக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 5,441 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பெருந்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருவிழாக்களுக்குத் தடை, பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகள், மால்கள் போன்றவற்றில் 50 சதவிகிதம் பேரையே அனுமதிக்க வேண்டும், ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் உள்ளிட்ட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

எவற்றுக்கெல்லாம் தடை?

பட மூலாதாரம், TWITTER

 • இன்று முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை காய்கனி அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
 • மாவட்டங்களில் மொத்த காய்கனி வளாகங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளுக்குத் தடை.
 • முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.
 • மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்கள் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை தொடரும்
 • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு எந்தத் தளர்வும் இல்லை.

எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி?

பட மூலாதாரம், Getty Images

 • கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம்.
 • அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி. நின்றுகொண்டு பயணம் செய்யக் கூடாது.
 • பலசரக்கு, காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக் கடைகள் ஆகியவை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம்.
 • ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் 50 சதவிகித இருக்கைகளுடன் 11 மணி வரை இயங்கலாம்.
 • கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை 50 சதவிகித வாடிக்கையாளர்கள், இருக்கைகளுடன் செயல்படலாம்.
 • திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும்.
 • உள் அரங்க நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

திருமணம், இறுதி நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

 • திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேரும், இறுதி ஊர்வலர்களில் 50 பேரும் பங்கேற்கலாம்.
 • விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
 • நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சி மட்டுமே அளிக்க வேண்டும்.
 • வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை பொதுமக்கள் வழிபட அனுமதி.
 • திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
 • வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.
 • ஆட்டோக்களில் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
 • வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோர் இ-பதிவு செய்திருக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: