அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா?
படக்குறிப்பு,

உயிரிழந்த அர்ஜுன் மற்றும் சூர்யா (வலது)

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டத்தை அறிவிக்க, மறுபுறம் உண்மை கண்டறியும் குழுவை பாட்டாளி மக்கள் கட்சி அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் என்ன நடந்தது?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த மறுநாள் (7 ஆம் தேதி) தலித் சமூக இளைஞர்களுக்கும் வன்னிய சமூக இளைஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அர்ஜுன், சூர்யா என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதில், சூர்யாவுக்குத் திருமணமாகி 27 நாள்களே ஆகின்றன. அர்ஜுனனுக்குத் திருமணம் முடிந்து ஏழு மாதங்களே ஆகியிருந்தன.

சோகனூர் படுகொலை சம்பவம் குறித்த தகவல் கேள்விப்பட்டதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அக்கிராமத்தில் குவிந்துவிட்டனர். இந்த விவகாரத்தில், பெருமாள் ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதன், அஜித், சுரேந்திரன், நந்தகுமார், கார்த்திக், சத்யா ஆகிய ஆறு பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவரின் சடலத்தையும் வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோகனூர் சம்பவம் தொடர்பாகப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "இந்தப் படுகொலைகளைச் செய்த சாதி வெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். காவேரிப்பாக்கம் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இந்த வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் விடவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்," எனக் கொந்தளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஏப்ரல் 10) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் திருமாவளவன் நடத்தி முடித்திருக்கிறார். வி.சி.கவின் போராட்ட முயற்சிகளை கண்டித்துப் பேசியுள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, "சாதி பிரச்னையால் இந்தச் சம்பவம் நடக்கவில்லை. சாராய போதையில் சிலர் இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாதி பிரச்னையால் நடந்திருந்தால் ஊரே திரண்டிருக்கும். மேலும், சம்பவம் நடந்த ஊரில் பா.ம.கவினரும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இல்லை. அனைத்து சமூகத்தினரும் இணக்கமாக வாழ்கிறார்கள். இந்தச் சம்பவம் இரு தரப்பினரிடையே நடந்த மோதல். இதை அரசியலாக்கக் கூடாது," என்றார்.

"ஆள்களைக் கூட்டி வா"

"செம்மேடு, சோகனூர் இரண்டுமே தலித் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியாக உள்ளது. சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனும் செம்மேட்டைச் சேர்ந்தவர் சூர்யாவும் தூரத்து உறவினர்கள்தான். தேர்தல் முடிந்த மறுநாள் இரவு 7 மணியளவில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பழனியின் மகன் சத்யா என்பவர் சோகனூர் வழியாக சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்குள் நடந்த ஒரு கோபமான உரையாடலுக்கு பிறகு சத்யா சென்றுவிட்டார்," என்கிறார் அரக்கோணம் சம்பவத்தின் பின்னணியை அறிந்தவரான சமூக செயல்பாட்டாளர் சமரன்.

அன்று இரவு 8 மணிக்கு சூர்யாவுக்கு சத்யாவிடம் இருந்து போன் வருகிறது. "உன்னோடு பேச வேண்டும்.. வா.. உனக்குப் பயம் இருந்தால் ஆள்களைக் கூட்டி வா" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அஜித், சூர்யா, அர்ஜுன் என தனது தரப்பில் இருந்து ஐந்து பேரைக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு 20 பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மதுபோதையில் இருந்துள்ளனர். `பானைக்கு ஓட்டு கேட்கறீங்க.. தலையில துண்டு கட்டிட்டி சுத்தறீங்க' எனக் கூறி அர்ஜுன் தரப்பிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். ஒருகட்டத்தில் எதிர்த் தரப்பில் இருந்தவர்கள் ஆயுதம் எடுத்ததும் அஜித் என்பவர் ஓடிப் போய்விட்டார். அப்போது நடந்த மோதலில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அரை மணிநேரத்தில் இந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது" என்கிறார் சமரன்.

நிலைகுலைந்த குடும்பங்கள்

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பழனி இருக்கிறார். வி.சி.க தரப்பில் யாராவது எம்.எல்.ஏ ஆகிவிட்டால் மணல் கடத்தல் தொழில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறந்துபோன சூர்யாவுக்கு திருமணமாகி 27 நாள்கள்தான் ஆகின்றன. இவரது அண்ணனுக்கு சொந்தத்தில் பெண் ஒருவரைப் பேசி முடித்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் சூர்யாவை காதலிப்பது தெரிந்ததும் குடும்பத்தினர் பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர். தாம் காதலிக்கும் பெண்ணை அண்ணனுக்குத் திருமணம் செய்ய வைக்க முயன்றதால், கடந்த மாதம் தற்கொலைக்கும் சூர்யா முயன்றுள்ளார். அர்ஜுனுக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றன. இந்தச் சம்பவத்தால் இரண்டு குடும்பங்களும் நிலைகுலைந்து போய்விட்டது" என்கிறார் வேதனையோடு.

பட மூலாதாரம், Thol.Thirumavalavan facebook page

அதேநேரம், இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் கிராமத்தில் உள்ள மற்றொரு பிரிவினர், "இந்தக் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பமும் கிடையாது. பா.ம.கவின் கொடிக் கம்பமும் கிடையாது. புரட்சி பாரதம் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மட்டுமே உள்ளன. அன்று இரவு 8 மணியளவில் இரண்டு தரப்பிலும் சாதி பெயரைச் சொல்லி மோதியுள்ளனர். குடிபோதையிலும் கஞ்சா போதையிலும் நடந்த சம்பவம் இது. அரக்கோணம் என்பது தனித்தொகுதி. இங்கு அ.தி.மு.க வேட்பாளரும் வி.சி.க வேட்பாளரும் தேர்தலில் மோதினார்கள்.

திசைமாறியதா வாக்குமூலம்?

அ.தி.மு.க வேட்பாளரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இங்கு பா.ம.க எப்படி வந்தது எனத் தெரியவில்லை. மணல் கடத்தல், போதை, முன்விரோதம் ஆகிய காரணங்களால் இந்தச் சம்பவம் நடந்தது. மேலும், சம்பவம் நடந்த கிராமங்களில் எஸ்.சி மக்களின் வாக்கு வங்கி அதிகம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற இளைஞர்கள் பேசும்போது, அடிக்கும்போது சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாகக் கூறியுள்ளனர். இதன்பின்னர், அவர்களின் வாக்குமூலமும் திசைமாறிவிட்டது' என்கின்றனர் எதிர் தரப்பினர்.

இதைத் தொடர்ந்து அரக்கோணத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, `` எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால், எங்களால் அமைதியாக இருக்க முடியுமா. இந்தப் பகுதியில் சாதி மோதல்கள் எதுவும் கிடையாது. இந்த விவகாரத்தில் பா.ம.கவையும் அ.தி.மு.கவும் இழுக்கக் காரணம், மணல் கொள்ளைதான். இந்தப் பகுதியில் வேலூர் மாவட்ட அ.தி.மு.க முக்கிய புள்ளியின் உதவியாளர் ஒருவர் மணல் மாஃபியாவாக இருக்கிறார். இதனால் அந்த நபரை மையமாக வைத்து இந்தச் சம்பவம் நகர்த்தப்படுகிறது" என்கிறார்.

கத்திக்குத்தும் கல்லடியும்

இரட்டைக் கொலை விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "7 ஆம் தேதி இரவு ராஜபேட்டை என்ற இடத்தில் இரண்டு பேர் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிர்ப்புறத்தில் வன்னிய சமூக இளைஞர்கள் 3 பேர் வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள் கையை காட்டியுள்ளனர். யார் எனக் கேட்டதும், `காலனியில் இருந்து வருகிறோம்' எனக் கூறியுள்ளனர். இதனால் கோபப்பட்ட வன்னிய இளைஞர்கள் பைக்கை எட்டி உதைத்தும் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலித் இளைஞர்கள், காலனி ஆள்களுக்கு போன் போட்டுப் பேசியுள்ளனர். அடித்தவர்கள் தரப்பிலும் 10 பேருக்கு போன் செய்து பேசியுள்ளனர். சற்று நேரத்தில் ஆள்கள் கூடிவிட்டனர். அப்போது நடந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடிப்பில் கத்திக் குத்து பலமாக விழுந்துள்ளது. மற்ற 3 பேருக்கு கல்லடி விழுந்துள்ளது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டதும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். இதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்," என்கிறார் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார்.

`ஹாய்' எனக் கூறியதால் கொலை

`கொலைச் சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா?' என்றோம். "எங்கள் விசாரணையில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. `ஹாய்' எனக் கூறியதால் ஏற்பட்ட மோதல் இது. 7.30 மணிக்கு பைக்கை எட்டி உதைத்த முதல் சம்பவமும் 8 மணிக்கு இரண்டாவது சம்பவமாக கொலையும் நடந்து முடிந்துவிட்டது. மருத்துவர் கொடுத்த அறிக்கையிலும் மது, கஞ்சா போதை என எந்த ஆதாரங்களும் இல்லை. ஒருவேளை எதிர்த்தரப்பில் போதையில் இருந்திருக்கலாம். தொடக்கத்தில் சம்பவ இடத்தில் பீர் பாட்டில் கிடந்தது. இதனால் போதையில் ஏற்பட்ட தகராறு என்ற தகவல் வெளியானது. இதில், வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி மோதலாகவும் எதிர்த் தரப்பில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதால் அரசியல் மோதலாகவும் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை

சோகனூர் சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் வட்டாட்சியர் பழனிராஜன், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், "சோகனூர் காலனி, செம்பேடு காலனியில் வசித்து வந்த சிலரும் பெருமாள் ராஜபேட்டை, வேடல் நகரைச் சேர்ந்த சிலரும் கௌதம நகர் பகுதியில் நின்று மது அருந்தியபோது வாய்த் தகராறு ஏற்பட்டு கத்திக்குத்தில் முடிந்தது. இதையடுத்து செம்பேடு காலனியைச் சேர்ந்த சூர்யாவும் (25) சோகனூர் காலனியைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரும் கத்திக்குத்துக்கு உள்ளாகி திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களைக் கத்தியால் குத்தியவர்கள் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் பெருமாள்பேட்டையைச் சேர்ந்த அஜித், மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்," எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே, செம்பேடு கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கையையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

`நீ எப்படி பானை சின்னத்துக்கு வாக்கு கேட்கலாம்'

இதையடுத்து, "இரட்டைக் கொலையை வி.சி.க அரசியலாக்குகிறதா" என அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "அந்தப் பகுதியை வன்கொடுமை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள தலித் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பழனி, அவரது மகன் சத்யா, இன்னொரு அ.தி.மு.க பிரமுகர் சிவக்குமார் ஆகியோர் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்," என்றார் வன்னியரசு.

ஊர் வழியாகத்தான் இவர்களின் கடத்தல் மணல் வாகனங்கள் செல்கின்றன. இதனை இங்குள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். மேலும், கடந்த ஒரு மாத காலமாக பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து, `நீ எப்படி பானை சின்னத்துக்கு வாக்கு கேட்கலாம்' எனக் கூறி அர்ஜுன், சூர்யா உள்ளிட்ட 3 பேரை கொடும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். ஏற்கெனவே இருந்த பகையை தேர்தலை காரணமாக வைத்து படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டனர்" என்றார்.

ஆனால், ` இது இயல்பாக நடந்த சம்பவம் என ராணிப்பேட்டை எஸ்.பி சொல்கிறாரே?' என்றோம். "அப்படியானால், ஊர்க் கூட்டத்தில் பேசிய எஸ்.பி, `இது திட்டமிட்ட படுகொலை' என ஏன் கூற வேண்டும்? ஏற்கெனவே, அங்கு மணல் மாஃபியா கும்பல் உள்ளது. அர்ஜுனும் சூர்யாவும் வி.சி.கவை சேர்ந்தவர்கள் அல்ல, தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். அங்கு மணல் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். முன்பகை இருப்பதால்தான் படுகொலை நடந்தது. இது எப்படி எதேச்சையாக நடந்த சம்பவமாக இருக்க முடியும்" என்றார் கொதிப்புடன்.

'பா.ம.கவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தட்டும்'

தொடர்ந்து பேசுகையில், `` மரணம் நடந்திருப்பதால்தான் அரசியலாக்குகிறோம். படுகொலை நடந்திருக்காவிட்டால், அதைப் பற்றி நாங்கள் பேசப் போவதில்லையே. `பானையை உடைப்போம்' என்று கூறிவிட்டுத்தான் அடிக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் சோகனூரில் மட்டும் நடக்கவில்லை. வானூர் தொகுதி, திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்கள் விரும்பிய சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவமாகத்தான் இதைப் பார்க்கிறோம். இதுகுறித்து புகார் கொடுத்தால்கூட நடவடிக்கை எடுப்பதில்லை. தனிப்பட்ட காரணம் என்றால் ஏன் தலித்துகளை மட்டும் கொலை செய்ய வேண்டும்.

இந்த விவாகரத்தில் பா.ம.கவினர் நேரில் சென்று உண்மை கண்டறியும் குழு மூலம் ஆய்வு நடத்தட்டும். அதை உலகுக்குச் சொல்லட்டும். இளவரசன் மரணத்தில் ஏன் உண்மை கண்டறியும் குழுவை பா.ம.க அனுப்பவில்லை. கோகுல்ராஜ் படுகொலையின்போது அவர்கள் எங்கே போனார்கள். தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சாதி மோதல் படுகொலைகளுக்குக் காரணமே மருத்துவர் ராமதாஸ்தான். பா.ம.கவில் உள்ள இளைஞர்களை ராமதாஸிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்கிறார்.

'ஒன்றுமே இல்லாத பிரச்னை' - பா.ம.க பாலு

பட மூலாதாரம், Balu Kaliyaperumal facebook page

வி.சி.கவின் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு மரணத்துக்கும் போராட்டம் நடத்த வேண்டும். அப்படிப்பட்ட பிரச்னை இது. இது ஒன்றுமே இல்லாத பிரச்னை. இதை எப்படி விவரிப்பதே எனத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் பா.ம.க, வன்னியர் எனப் பேசத் தொடங்கிவிடுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை கண்டறியும் குழுவின் பணிகள் முடிந்துவிட்டன. நாளை இதன் விவரங்களை வெளியிட்டுவிட்டு விரிவாகப் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலா.. சாதிப் பின்னணியிலும் தேர்தல் போட்டியிலும் ஏற்பட்ட மோதலா என்பது குறித்த விவாதங்கள் இன்னும் ஓயவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் தொடர் போராட்டங்களால் அரக்கோணம் தகித்துக் கொண்டிருக்கிறது. காவலர்கள் குவிக்கப்படுவதும் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் கவனத்துடன் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: