லாக்டவுன் திட்டம்: தமிழகம்-புதுச்சேரி அரசுகள் மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
(இன்று 27.04.2021 செவ்வாய்க்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1, 2-ஆம் தேதிகளில் பொதுமுடக்கம் அறிவிப்பது குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூா்த்தி ஆகியோர் அடங்கிய அமா்வு ஆக்சிஜன் பற்றாக்குறை தொடா்பாக வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற பொது நல வழக்கில், தமிழகம், புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் நீதிபதிகளிடம், 'ஆக்சிஜன் தேவை குறைந்தவா்கள் கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனா். 2,400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் சென்னையில் உருவாக்கப்படுகிறது. அவற்றில் 1,200 படுக்கைகள் கொண்ட மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படுகிறது,' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ' மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து, அதனை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்க உத்தரவிடுவோம். சிகிச்சைக்கும், விஐபி கலாசாரத்துக்கும் இடமளிக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான சிகிச்சையளிக்க வேண்டும். கள்ளச்சந்தையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்கப்படுவது குறித்து மருந்து கட்டுப்பாட்டாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, குன்னூா் தடுப்பூசி மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு 10 நாள்களில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். மே 1, 2-ஆம் தேதிகளில் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு உதவ வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை வழங்கிய மாற்றுத் திறனாளி
பட மூலாதாரம், Getty Images
கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அதற்கான செலவுக்கு முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்புகின்றனர். அதை அறிந்த கண்ணூர் மாவட்டம், குருவா பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிக்கு சென்றார். பிறவியிலேயே இரு காதுகளும் கேட்காத அவர், தன் வங்கிக் கணக்கில் இருந்த 2 லட்சத்து 850 ரூபாயில், 2 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு மாற்றினார். அவரது கணக்கில் வெறும் 850 ரூபாய் மீதம் உள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
பீடி சுற்றும் தொழில் செய்யும் ஏழை தொழிலாளி ஜனார்த்தனன் தன் வாழ்நாள் முழுவதுமாக சேர்த்த பணத்தை வழங்கியுள்ளார். இதைப் பற்றி அந்த வங்கியில் வேலை செய்யும் அதிகாரி ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட ஜனார்த்தனின் சேவை குணம் அதன் பின்பே வெளியுலகுக்கு தெரிய வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள மக்களின் உணர்ச்சிப் பெருக்கை காட்டுவதாக சிலாகித்தார்.
இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் ஜனார்த்தனன் கூறுகையில், ''கடந்த ஆண்டு என்மனைவி இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். நான் 13 வயதில் இருந்தே பீடி சுற்றி வாழ்க்கையை நடத்துகிறேன். அதில்தான் 2 லட்சம் ரூபாய் சேர்த்து இருந்தேன். என் சகோதர, சகோதரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது என் வங்கிக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதில் என்ன இருக்கிறது? அதனால்தான் கொடுத்து விட்டேன். நான் வாழ்க்கை நடத்த அரசாங்கம் மாதம் 1,600 ரூபாய் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்குகிறது. பீடி சுற்றும் தொழில் இருக்கிறது. எனக்கு அது போதும்''' என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆக்சிஜன் வாங்க பிரதமர் நிவாரண நிதிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நன்கொடை
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு 50,000 டாலரை நன்கொடையாக வழங்கி இருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் "கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுடனான எனது அன்பு அதிகரித்து வருகிறது. நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் அன்புடன் பழகக் கூடியவர்களில் இந்தியர்களும் ஒருவர். தற்போது இந்தியாவில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து கடும் துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன்".
"மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது தேவை தானா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.பி.எல். தொடர் மக்களின் வேதனையை ஒரு சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன்".
"இந்தியாவில் இருக்கும் சூழலை மனதில் கொண்டு, இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜனை வாங்க, என்னால் முடிந்த தொகையை நன்கொடையாக பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன்" என கம்மின்ஸ் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பாதிக்கப்பட்ட மணமகனை திருமணம் செய்த இளம்பெண்
பட மூலாதாரம், Getty Images
கேரள மாநிலத்தில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமகனை திருமணம் செய்துள்ளார் ஒரு இளம்பெண் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கு அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25-ம் தேதி திருமணம் செய்ய கடந்த ஆண்டே பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்துவந்த சரத்மோன் தனது திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா திரும்பினார். கேரளா திரும்பியபோதும் சரத்மோன் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால், சரத்மோன் மற்றும் அவரது தாயார் ஜிஜிமொல் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் (ஏப்ரல் 25) திருமணம் செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை மணப்பெண் அபிராமி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
குடும்பத்தினரின் வேண்டுகோளையடுத்து, சரத்மோன் - அபிராமி தம்பதியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் (பிபிஇ) நேற்று சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமி வந்தார். அங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை அபிராமி திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட சரத்மோன் - அபிராமி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து சரத்மோன் குணமடைந்த பின்னர் சரத்மோன் - அபிராமி தம்பதியர் தங்கள் இல்லற வாழ்வை தொடங்குவார்கள் என புதுமண தம்பதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
- பந்து வீச்சில் கலக்கிய கொல்கத்தா, நிதானம் காட்டிய மார்கன்
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
- "ஸ்டெர்லைட் ஆலையில் மிகக் குறைந்த அளவே மருத்துவ ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும்"
- செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா: எதற்குப் பயன்படும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: