மே 2இல் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், ECI

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, முன்னெப்போதுமில்லாத வகையில் தினமும் லட்சத்தை எட்டி வரும் வேளையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதியன்று எவ்வித வெற்றிக்கொண்டாட்டங்களும் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூத்த முதுநிலை செயலாளர் சுமித் முகர்ஜி பிறப்பித்துள்ள உத்தரவில், "நாடு முழுவதும் காலியாகவிருக்கும் சட்டப்பேரவைகளுக்கும் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் எவ்வாறு தேர்தல் நடத்துவது என கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு தேர்தல் வழிகாட்டுதல்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வந்த தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் தொடர்பாக யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. அதன் பேரில் ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முன்பு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சேர்த்து மேலும் இரண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை ஆணையம் விதிக்கிறது. அதன்படி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு எவ்வித வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளர்களுடன் அவர் சார்ந்த இருவர் மட்டுமே தேர்தல் அதிகாரியிடம் சென்று வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது," என்று ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்துக்கு கடந்த மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்த ஆணையம், கடந்த மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 ஆகிய தேர்தளில் ஏழு கட்ட தேர்தலை நடத்தி முடித்துள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவை வரும் 29ஆம் தேதி ஆணையம் நடத்தவுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முன்னதாக, தேர்தல் பரப்புரையின்போது கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகளை சரியாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிருப்தயை பதிவு செய்தது.

இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் பரப்புரையில் சமூக இடைவெளி அலட்சியம் காட்டப்பட்டதும் ஒரு காரணம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனை தாக்கத்துக்கு தேர்தல் ஆணையமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியது

சென்னை உயர் நீதிமன்றத்தை போலவே, கொல்கத்தா உயர் நீதிமன்றமும் மேற்கு மாநிலத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் தேர்தல் பரப்புரைகளின்போது சரியாக பின்பற்றவில்லை என்று தமது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: