பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்

  • விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
MINISTER

பட மூலாதாரம், ANBIL FB PAGE

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று அதிகரிக்கும் வேளையில் பொதுத்தேர்வை நடத்துவது சாத்தியம்தானா?

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த இரு நாள்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஜூம் செயலி கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள்தான் இவை:

``பள்ளி நிர்வாகத்துடன் போன் மூலமாக தொடர்பில் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் எவ்வளவு பேர்?"

``சார்... சென்னையில் 40 சதவிகித மாணவர்கள்தான் தொடர்பில் உள்ளனர். மற்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். அவர்களின் தொடர்பு எண்கள் கிடைக்கவில்லை. பிற மாவட்டங்களில் 85 சதவிகிதம் அளவிலான மாணவர்கள் தொடர்பில் உள்ளனர்."

``அவர்களில் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள், முடியாதவர்கள் என இரண்டு பிரிவாக பிரித்தெடுங்கள். அதில் எத்தனை பேரால் தேர்வெழுத வர முடியும் எனக் கேளுங்கள். இதனை தனியாக சேகரித்துக் கொடுங்கள். 2 அல்லது 3 நாள்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடைய வேண்டும்'.

`` சார்.. இதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் தேர்வை வைக்காமல் குறைந்தது 15 நாள்கள் வகுப்பறைகள் இயங்கினால்தான் மன நல ரீதியாக மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்ய முடியும். ஏனென்றால் ஒரு வருடம் பள்ளிகள் இயங்காததால் அவர்கள் தேர்வெழுதும் மனநிலையில் இல்லை. மிகப்பெரிய பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கின்றன. அதனால் அந்த மாணவர்கள் தேர்வெழுதுவதில் எந்தவித சிரமங்களும் இல்லை.

அதேநேரம், அரசு பள்ளி மாணவர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்பட பல கம்பெனிகளில் வேலை பார்க்கச் சென்றுவிட்டனர். அவர்களின் குடும்ப சூழல் அப்படி. நகரம் மட்டுமல்லாமல் கிராமப்புற மாணவர்களும் வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களுக்கும் மன நல ரீதியாக பயிற்சி கொடுக்க வேண்டும்."

ANBIL

பட மூலாதாரம், ANBIL FB PAGE

``ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக் டவுன் போடுகிறோம். அப்படியானால், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முக்கியமான தாள்களை எழுதும் வகையில் தேர்வு வைக்கலாம்."

``சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தேர்வு வைத்தால் தொற்று பரவ வாய்ப்பில்லை என்பது உண்மைதான். இதில், சனிக்கிழமைகளில் தேர்வு வைப்பதில் எந்தவிதச் சிரமம் இல்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பது மதம்சார்ந்த விஷயம். தேவாலயங்களை திறக்காமல் ஆன்லைனில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த குடும்பங்கள், தங்களின் பிள்ளைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வெழுத அனுமதிப்பதில் சிரமங்கள் உள்ளன. 2 அல்லது 3 மாநிலங்களை பின்பற்றி எதாவது முடிவை எடுக்கலாம் அல்லது சி.பி.எஸ்.சி என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம்".

``அது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் தேர்வுக்குத் தயாராகும் வழிகளை ஆராய்ந்துவிட்டு முதல்வரிடம் பேசுவோம். அவர் சம்மதித்தால் தேர்வை நடத்துவோம்"

- `அமைச்சருடனான அதிகாரிகளின் இந்த உரையாடல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிளஸ் 2 தேர்வை நடத்தி முடிப்பதில் அமைச்சர் காட்டும் ஆர்வத்தால் இரவு பகலாக பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டவாரியாக பிளஸ் 2 மாணவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன' என்கின்றனர் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள்.

தொற்று குறைந்தால் தேர்வு!

தேர்வு

பட மூலாதாரம், TWITTER

பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, `` பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறோம். இதில், பலரும் தெரிவித்த கருத்து என்னவென்றால் பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதுதான். தேர்வை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக முதல்வரிடம் பேசி அறிவிப்போம். சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

எனவே, தொற்று குறைவது குறித்து சுகாதாரத்துறை எப்போது அறிவிக்கும் என்பதை உற்று நோக்கி வருகிறோம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், `` தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாமே தவிர, ரத்து செய்யப்படும் என்று கூற விரும்பவில்லை. தேர்வுத் தேதிக்கு முன்பாக உளவியல் ஆலோசனை, தேர்வுக்குத் தயாராக போதிய இடைவெளி ஆகியவற்றுக்கு உரிய காலம் ஒதுக்கப்படும்" என்றார்.

ஆசிரியர்களின் அச்சம்!

`` பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் குறித்த தரவுகளை இரண்டு, மூன்று நாள்களுக்குள் சேகரித்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், எவ்வளவு மாணவர்கள் தங்களால் தேர்வெழுத வர முடியும் என உறுதி கொடுத்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். தேர்வை நடத்தி முடிப்பதை தனது சாதனையாக அரசு கருதுகிறது. மிகவும் பாதுகாப்பாக தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்புகின்றனர். காரணம், தேர்தல் பணிகளுக்குச் சென்ற ஆசிரியர்களில் கர்ப்பிணிகள் உள்பட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், சென்னையில் மட்டுமே நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துவிட்டனர்," என வேதனைப்படுகிறார் பள்ளிக் கல்வித்துறை ஊழியர் ஒருவர்.

ANBIL

பட மூலாதாரம், ANBIL FB PAGE

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` ஒரு வகுப்பறையில் 25 பேர் வரையில் அமர வைத்து தேர்வெழுத வைக்கலாம் என கடந்த அரசு முடிவெடுத்திருந்தது. தற்போது வகுப்பறைக்கு பத்து பேர் என முடிவு செய்துள்ளனர். சுமார் 7 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளதால், உயர் நிலைப் பள்ளிகளையும் தேர்வுக்குப் பயன்படுத்தும் முடிவில் உள்ளனர். தனித்தேர்வர்களுக்கும் அறைகள் தயாராகி வருகின்றன. ஊரடங்கு முடிந்தும் கொரோனா தொற்று குறைந்தால் ஜூன் மாதத்துக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் முடிவில் அரசு இருக்கிறது. அதேநேரம், `வெளியே வருவதற்கே பயமாக இருக்கிறது' என்ற மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். அரசின் உத்தரவை மறுக்க முடியாது என்பதால் அச்சத்திலேயே வேலை பார்க்கின்றனர்" என்கின்றனர்.

ஆசிரியர்களின் அச்சம் குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தேர்வு தொடர்பாக அமைச்சர் விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் கூறுவதைத் தாண்டி வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை," என்றார்.

பொதுத்தேர்வை நடத்துவது சாத்தியமா?

`கொரோனா சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது சாத்தியம்தானா?' என பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``தேர்வை நடத்துவோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். `நாளையே நடத்துவோம்' என அவர் கூறவில்லை. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, என்றைக்குத் தேர்வை நடத்தலாம் என்கிறார்களோ, அன்றைக்கு நடத்துவோம் எனவும் கூறியுள்ளார். `தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அட்டவணை வெளியிட வேண்டும்; 15 நாள்கள் வகுப்பறைகள் நடத்த வேண்டும்,' எனவும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களை தேர்வுக்குத் தயாராகும் வகையில் தயார்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

மேலும், ``பொதுத்தேர்வு நடக்குமா.. நடக்காதா என்ற மனநிலையில் இருக்க வேண்டாம். `நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்பதால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்' என அரசு கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படாவிட்டால், கல்லூரியில் நுழைவதற்கு நிச்சயமாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அது மாணவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் அச்சத்தையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். 15 நாள் ஊரடங்கு முடிந்ததும் நோய்த் தொற்று குறைகிறதா என்பதைப் பொறுத்து அரசு முடிவெடுக்கும்" என்கிறார்.

அவசியமில்லாத அச்சமா?

தொடர்ந்து பேசுகையில், ``மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தினால் தொற்று குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இப்போது தேர்வைப் பற்றி யாரும் பேசவில்லை. தேர்வெழுதுவது தாமதமானால் கல்வி ஆண்டும் தள்ளிப் போகும். ஆசிரியர்கள் எல்லாம் ஒவ்வொரு சங்கங்களில் உறுப்பினராக இருப்பார்கள். அதன்மூலமாக தங்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரியப்படுத்தலாம். மாணவர், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோர் அறிக்கைகள் கொடுப்பதைப்போல அவர்களும் அறிக்கை கொடுக்கலாம். எனவே, ஆசிரியர்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை," என்கிறார்.

``கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு பிளஸ் 2 வகுப்பில் பெறக் கூடிய மதிப்பெண்கள் மிக முக்கியம் என்பதால் தேர்வை நடத்தி முடிப்பதில் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. கொரோனா தொற்றையும் ஆசிரியர்களின் வயதையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாதுகாப்பு நடைமுறைகளோடு அரசு தேர்வை நடத்த வேண்டும்," என்கின்றனர் ஆசிரியர்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :