`லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

திருமண ஜோடி

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதை தார்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 19 வயது பெண் மற்றும் 22 வயது ஆண் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். மதன், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த ஜோடியின் வழக்கறிஞர் ஜே.எஸ். தாகுர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மாநில உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறும் ஜோடி, குடும்பத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தின் மூலம் பாதுகாப்பு கோருவது தொடர்கதையாகி வருகிறது. சில வழக்குகளில் கருணையுடன் மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க கீழமை நீதிமன்றங்கள் உத்தரவிடுவதுண்டு.

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், சமீப காலமாக திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் சிலரும் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த வழக்கில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த பெண்ணின் குடும்பம் தற்போது பஞ்சாபின் லூதியாணாவில் வசித்து வருகிறது. அந்த பெண்ணுடன் வாழும் ஆண் எல்லை மாவட்டமான தான்தரனில் வசித்து வருகிறார். இந்த ஜோடி கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறி நீதிமன்றத்திடம் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

தச்சு வேலை செய்பவரான அந்த ஆண், பெண்ணின் குடும்பத்தாரை சம்மதிக்க வைக்க முயன்றபோதும், வேறு ஜாதியைச் சேர்ந்த நபர் என்பதால் இவர்களின் திருமணத்தை பெண் வீட்டார் எதிர்த்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், தங்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் நேருவதாகக் கோரும் ஜோடி, இதன் காரணமாகவே தங்களால் திருமணம் செய்து கொள்ள இயலவில்லை என்றும் உரிய பாதுகாப்பு கிடைத்ததும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களின் மனுவை பரிசீலித்த நீதிபதி, விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் அந்த பெண்ணை திருமணம் செய்தால் உயிருக்கு ஆபத்தாகலாம் என்று அவர்கள் கருதுவதாக உத்தரவில் குறிப்பிட்டார்.

அதே சமயம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்பும் நோக்குடன் அவர்கள் மனு மீது உத்தரவிட்டால் அதை நீதிமன்றம் ஏற்பது போல ஆகும். அத்தகைய ஒரு வாழ்க்கை முறை தார்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்க முடியாது என்பதால் எவ்வித பாதுகாப்பையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் இசைவு அடிப்படையில் ஜோடி சேர்ந்து வாழும்போது அந்த வழக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. ஆனால், பல்வேறு இந்திய மாநிலங்களில் அத்தகைய வழக்கம் கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வழக்கின் தன்மைக்கு ஏற்ப திருமணமாகாமல் ஜோடி சேர்ந்து வாழ்வதை ஏற்காமல் சில உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்து வருவதால் இந்த விவகாரம் விவாதப்பொருளாகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :