கமலுக்கு நிர்வாகிகள் தரும் அதிர்ச்சி: தொடர் விலகலின் பின்னணி என்ன?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
கமல்

பட மூலாதாரம், MaKKAL NEETHI MAIYAM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். ` என்னுடன் பயணிக்க முடியாதவர்களுக்கு இரண்டு கதவுகளும் திறந்தே இருக்கும்' என்கிறார் கமல். என்ன நடக்கிறது ம.நீ.ம கட்சியில்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 3 சதவிகித வாக்குகளைப் பெற்றதால், சட்டமன்ற தேர்தலில் ம.நீ.மய்யத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அக்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

15 நிர்வாகிகள், 200 கிளை செயலாளர்கள் விலகல்

இதையடுத்து, `கமலின் தவறான நடவடிக்கைகளே தோல்விக்குக் காரணம். கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்குகிறது. தேர்தல் பணிகளைக் கவனிக்க வந்த சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தால்தான் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது,' என கூறி ம.நீ.மவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த மகேந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகினார்.

தொடர்ந்து சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் (கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள்) பொறுப்பில் இருந்து முருகானந்தம் வெளியேறியுள்ளார்.

அவருடன் தொழில் முனைவோர் அணியின் மாநில செயலாளரான வீரசக்தி உள்பட முக்கிய பொறுப்புகளில் இருந்த 15 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுதவிர, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட 414 வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட 200 கிளைச் செயலாளர்கள் மற்றும் 2000 கிளைக் கழக உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளையும் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விலகலுக்கு நிர்வாகிகள் தரும் காரணம்

படக்குறிப்பு,

முருகானந்தம்

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு விரிவான கடிதம் ஒன்றை முருகானந்தம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த நான், எனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். கட்சியின் தற்போது நிலவக் கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில் இனியும் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சரியில்லை என முடிவு செய்துள்ளேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நான் திறம்பட செய்து தென்மண்டலம் முழுவதும் குறிப்பாக, டெல்டா பகுதிகளிலும் திருச்சி மண்டலத்திலும் நமது கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சூழ்நிலையில் நான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தையும் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளேன்," என குறிப்பிட்டுள்ளார்.

நமது கட்சியா.. என் கட்சியா?!

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ` கட்சியில் இணைந்தபோது எனக்கான சுதந்திரமும் ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் திறம்பட உழைக்க முடிந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப் போய்விட்டதாகக் கருதுகிறேன். `இது நமது கட்சி' எனக் கூறி என்னைப் போன்ற நிர்வாகிகள் உழைத்துக் கொண்டிருந்த நிலையில், `இது என் கட்சி' என்ற தோரணையில் உயர்மட்டக் குழு கூட்டத்தில் தாங்கள் கூறியதிலும் மற்றும் சில நிகழ்வுகள் மற்றும் பல முடிவுகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டதன் மூலம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாகக் கருதுகிறேன்.

கட்சியின் செயல்பாடும் மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த நன்மதிப்பும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் பலவீனமான கட்சிகளுடன் வைத்துக் கொண்ட மோசமான கூட்டணியால் சுக்கு நூறாகிவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க தலைமைதான் காரணம். வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் குழு இரவு பகலாக சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தபோது நூறுக்கும் மேற்பட்ட சீட்டுகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது அதிர்ச்சியை அளித்தது.

பதில் இல்லாத கேள்விகள்

இது குறித்து உயர்மட்டக் குழு கூட்டத்தில் நான் உங்களிடம் கேட்டதற்கு, `அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நமது கட்சியில் ஆள் இல்லை' எனக் கூறிய வார்த்தை உறுத்திக் கொண்டிருக்கிறது.

உங்களுக்கு ஆலோசகர்களாக இருக்கக் கூடியவர்கள், உங்களைக் கட்சியின் இணைப்பில் இருந்து தனிமைப்படுத்தி தவறு செய்துவிட்டனர். `நாம் எல்லோரும் தலைவர்கள்' என்ற உங்களின் பேச்சு வெறும் பேச்சாகவே போய்விட்டது. `சங்கையா சொல்யூசன்ஸ்' என்பது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பு.

ஆனால், அந்த வேலையை அவர்கள் திறம்பட செய்யாமல் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டும் உங்களைத்தவறாக வழிநடத்தியும் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தனர்.

கட்சியில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.

குறைந்தபட்சம் உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இன்று வரை அவை பதில் இல்லாத கேள்விகளாக உள்ளன.

எங்களை பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்யச் சொன்ன அந்தக் கனமே சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாகக் கருதுகிறேன். இனியும் இந்தக் கட்சியில் தொடர்வதைவிட வெளியேறுவதே மேல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பழைய நிலைமைக்கு வரும்!

`நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதன் மூலம் கட்சிக்கு பாதிப்பு ஏற்படத்தானே செய்யும்?' என மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மக்கள் நீதி மய்யத்தைவிட்டு மகேந்திரன் வெளியேறியபோது, `கட்சி தொடர்ந்து செயல்படும். போகிறவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை' எனக் கமல் கூறினார். பொதுக்குழு கூட்டத்திலும், `என்னுடன் உடன்பட்டு பயணிக்க முடியாதவர்கள் செல்லலாம். கதவு எப்போதும் திறந்தேதான் இருக்கும்' என்றார்.

அதன்பிறகு தேர்தல் முடிந்த பிறகும், `என்னுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்களுக்கு இரண்டு கதவும் திறந்தேதான் இருக்கும்' என்றார். இதுபோன்ற விலகல்கள் எதுவும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அவரைப் பொறுத்தவரையில், `தான் எடுத்த முடிவுகள் கட்சியை வழிநடத்தும்' என நம்புகிறார். மக்கள் பிரச்னை, அரசியல் போன்றவற்றில் கமல் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கட்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போதுள்ள இடர்பாடுகளைக் களைந்து கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வருவார்" என்கிறார்.

இன்று மட்டும் 2,200 பேர் விலகல்

சமீபத்திய ராஜிநாமா வரிசையில், முருகானந்தம் மட்டுமின்றி, கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், பி.ஏ. விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேரும் தங்களுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டலத்தை சேர்ந்தவர்கள். தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :