இந்தியாவில் கொரோனா பேரழிவுக்கு நடுவில் 'நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்' என அழைப்பு - எப்படி உள்ளது?

  • செளதிக் பிஸ்வாஸ்
  • இந்தியா செய்தியாளர்
கொரோனா வைரஸால் ஆயிரக் கணக்கானோர் மரணம்

பட மூலாதாரம், REUTERS

"இது ஒரு கடினமான நேரம். பலர் இறந்துவிட்டார்கள். அவர்கள் போய்விட்டார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது."

ஆளும் பாஜகவின் வழிகாட்டும் அமைப்பாகப் பார்க்கப்படும் இந்து தேசியவாத அமைப்பான, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவரான மோகன் பாகவத், சென்றவார இறுதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'பாஸிட்டிவிட்டி அன்லிமிடெட்' தொடர் சொற்பொழிவின் போது இவ்வாறு கூறினார்.

அவரது நோக்கம், நூறாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கியுள்ள கொடூரமான கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் தத்தளிக்கும் இந்தியர்களின் மன உறுதியை உயர்த்துவதாகும்.

அதிகம் பரவக்கூடிய திரிபுகளால் உந்தப்பட்ட இந்த அலை, நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் தற்போதைய நெருக்கடிக்குத் தயாராவதில் தோல்வி காரணமாக மேலும் அதிகரித்ததாக, பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக அரசை எதிர்க்கும் பல நிபுணர்களும் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

"நம்மை விட்டுச்சென்றவர்கள் ஒரு வகையில் விடுதலை பெற்றுள்ளனர். ஏனென்றால் அவர்கள் இந்த சூழ்நிலையை இனி எதிர்கொள்ள வேண்டியதில்லை. நாம் [தப்பிப் பிழைத்தவர்கள்] இப்போது அதை எதிர்கொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும்,"என்று பாகவத் தொடர்ந்து பேசினார்.

பட மூலாதாரம், Getty Images

"இது ஒரு கடினமான, துக்ககரமான நேரம். நாம் எதிர்மறையாக மாறக்கூடாது. நாம் நேர்மறையாக இருக்க வேண்டும், நம் உடலை 'கொரோனா நெகட்டிவாக' வைத்திருக்க வேண்டும்," என்றார் அவர்.

இந்த உருவகங்களை ஒரு கணம் மறந்துவிடுங்கள். இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவு உண்மை நிலையை கவனியுங்கள்.

இந்தியாவில் இதுவரை 2,50,000 க்கும் அதிகமானோர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறப்புகளில் சுமார் 40% தற்போதைய இரண்டாவது அலையின் போது ஏற்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,20,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், சராசரியாக 1,500 பேர் இந்த நோயால் இறந்தனர். (உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.) மே மாதத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று பல கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் தங்கள் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், நெரிசலான அவசரகால அறைகளுக்கு வெளியேயும் மூச்சு திணறி இறந்துள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கைகளை தேடி அலைந்து, ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகளை கறுப்புச் சந்தையில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட குடும்பங்கள், பொருளாதார ரீதியாகவும் நிலைகுலைந்தன.

பட மூலாதாரம், Reuters

கிராமப்புறங்களிலும் வைரஸ் பரவியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் ஆறுகளில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகளை செய்வதற்கான வசதியின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களை தங்கள் தோள்களிலும், ரிக்ஷாவிலும், பைக்குகளிலும் வைத்து இடுகாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். சவக்கிடங்குகளில் உடல்கள் குவிந்துள்ளன.

நெருங்கிய சொந்தங்களை இழந்து, பொருளாதார ரீதியாகவும் இழப்புக்களை சந்தித்ததால் கோபம் கொண்டுள்ள மக்கள், அரசால் கைவிடப்பட்டதாகக் கூறுகின்றனர்.

நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைத்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். இப்போது நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை, ஜூலை இறுதிக்குள் 250 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை நிலைகுலைச்செய்யக்கூடும்.

நேர்மறை எண்ணங்கள் நிலைமையை மேம்படுத்த உதவும் என்று பாகவத் நம்புகிறார். அரசும், அதிகாரிகளும், மக்களும் "மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தபோதிலும்" தங்கள் உஷார் நிலையை கைவிட்டதால் திகிலூட்டும் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

தொற்றுநோய் வெளியில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போதும், "அரசின் நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதை" நோக்கமாகக் கொண்ட ஒரு பயிலரங்கத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

எதிர்மறை எண்ணங்கள் உதவாமல் இருக்கலாம், ஆனால் துக்கத்தின் சூழலில் கட்டாயத்தின் பேரில் உருவாக்கப்படும் நேர்மறையான உணர்வுகள் நமக்கு உதவுமா?

"மகிழ்ச்சியை நாம் பின்தொடர முடியாது, அது நம்மை பின்தொடர வேண்டும்" என்று ஹாலோகாஸ்டிலிருந்து தப்பிப்பிழைத்தவரும், மனநல மருத்துவருமான விக்டர் ஃபிராங்கல் தனது 'Man's Search for Meaning' புத்தகத்தில் எழுதினார்.

பேரிழப்பில் நேர்மறை எண்ணம் பற்றியும் பிராங்கல் எழுதியுள்ளார். இழப்பு, வலி மற்றும் துன்பங்கள் இருந்தபோதிலும், வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்வது மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்துவது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆழமான தனிப்பட்ட விஷயம்.

பட மூலாதாரம், Getty Images

விமர்சனங்கள் வெளிவராமல் தடுக்க இது தொடர்பான செய்திகளை கட்டுப்படுத்தும் மோதி அரசின் எண்ணமே, இந்த நேர்மறை முழக்கங்களின் ஆணிவேர் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

"பாசிடிவ் என்பதே இந்த காலக்கட்டத்தில் ஒரு ஆபத்தான சொல். நீங்கள் மிகவும் பயப்படும் ஒன்றுக்கு [வைரஸுக்கு] பாசிட்டிவாக எப்படி இருப்பது" என்று ஒரு முன்னணி தகவல் தொடர்பு ஆலோசகரான திலீப் செரியன் கேலியாக கூறுகிறார்.

மோதி அரசின் சிக்கல் என்னவென்றால், நெருக்கடிகளைத் சமாளிக்க "தகவல் தொடர்பு மற்றும் பிம்ப மேலாண்மையே" அதன் முதல் ஆயுதமாக இருந்து வருகிறது என்று செரியன் கூறுகிறார்.

"இந்த விஷயத்தில் முதலில் தேர்வு செய்யும் ஆயுதமாக அறிவியல் இருந்திருக்க வேண்டும். அறிவியலுடன் தொடர்புகொள்வது உயிர்களைக் காப்பாற்றியிருக்கும்" என்று அவர் என்னிடம் கூறினார்.

பெருமளவு அதிர்ஷ்டம் மற்றும் குறைவாகப் பரவும் தன்மையுடன் கூடிய வைரஸ் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் அலை ஓய்ந்தபோது, மோதி அரசு பரவசமடைந்தது.

தற்சார்புள்ள இந்தியா வைரஸை வென்றுவிட்டது, இனி உலகம் முழுவதும் தடுப்பூசிகளை அது வழங்கும் என்று அரசு மார்தட்டிக்கொண்டது. கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இந்தியா "உலகை பேரழிவிலிருந்து காப்பாற்றியது" என்று மோதி ஜனவரி 28 ஆம் தேதி கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விஷயம் கைமீறிப்போய்விட்டது. நாட்டை வைரஸ் அழித்துக் கொண்டிருக்கிறது. பொது சுகாதார அமைப்பு சரிவின் பிடியில் சிக்கியது. தடுப்பூசி இயக்கம் பிசுபிசுத்துப்போனது.

"தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் இழப்பு, படுக்கைகள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நேர்மறை எண்ணங்களுக்கான இத்தகைய அழைப்பு அரசின் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அரசுக்கு உண்மை நிலை தெரியவில்லை என்று பலர் நினைப்பார்கள்," என டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இணை ஆராய்ச்சியாளர் அசிம் அலி கூறுகிறார்.

பட மூலாதாரம், OUTLOOK

அரசின் செய்தி வெளியிடல் மோசமாகிவிட்டது. ஏனெனில் அது தனது சொந்த தோல்விகளை ஒப்புக் கொள்ள மறுத்து, எதிர்மறையான செய்திகளை பரப்புவதாக எதிர்கட்சிகள் மீது குற்றம் சாட்டுகிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசிகளின் பற்றாக்குறைக்கு அரசில் உள்ளவர்கள் "தூக்கில் தொங்க வேண்டுமா" என ஒரு மூத்த அமைச்சர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கேட்டார்.

கடந்த வாரம் பாஜக தனது சாதனைகளை பறைசாற்றும் முயற்சியாக சில "உண்மைகளை" ட்வீட் செய்தது. விமர்சகர்கள் "தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காக தொற்றுநோயை" பயன்படுத்துவதாக அது கூறியது. தலைமை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கட்சி, "மக்களுக்கு மேம்பட்ட ஐ.க்யூ இருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்றது.

"அரசின் தொனி முற்றிலும் தொடர்பில்லாததாக, திமிர்பிடித்ததாக, அடக்குவதாக இருந்தது. கட்சிக்கான தகவல் தொடர்புகளை யார்தான் நிர்வகிக்கிறார்கள் என்று நான் யோசித்துப்பார்க்கிறேன்," என்று அலி கூறுகிறார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிவில் உரிமைகளை ரத்து செய்து 1975 ஆம் ஆண்டில் நாடு தழுவிய 21 மாத கால நெருக்கடி நிலையை அமல்செய்த பின்னர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு இணையாக இது இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனின் கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிட்யூட்டில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட், "நெருக்கடி நிலையின்போது எதிர்கட்சிகளை சாடிய இந்திரா காந்தி, அதன் தலைவர்கள் நாட்டை மனச்சோர்வடையச் செய்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் கூறியதுடன், தன்னிடம் மட்டுமே ஆக்கபூர்வ செயல்திட்டம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்" என்கிறார்.

பேராசிரியர் ஜாஃப்ரெலோட்டுடன் இணைந்து நெருக்கடி நிலை குறித்து ஒரு புதிய புத்தகத்தை எழுதிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அறிஞர் பிரத்தினவ் அனில், "மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது இந்திரா காந்திக்கு ஒருபோதும் தெரியவில்லை," என்று கூறுகிறார்.

" பிரச்சனை பார்க்கும் கோணத்தில் இருந்தது. எனவே அவர் சொந்த நாட்டில் கருத்து வேறுபாடுகளை மூடிமறைத்துவிட்டு, நெருக்கடி நிலையின் நன்மைகளை வெளிநாடுகளில் பறைசாற்றினார். வெளியுறவு அமைச்சகம் தன் பங்கிற்கு 'விரும்பத்தகாத இந்தியர்களின்' தடுப்புப்பட்டியலை உருவாக்கியது," என்று அனில் கூறுகிறார்.

மோதி எதிர்கொள்ளும் கண்டனங்கள் நியாயமற்றது என்றும் எந்தவொரு அரசும் இத்தகைய கொடிய சீற்றத்தை நிர்வகிக்க போராடியிருக்கும் என்றும் தற்போதைய அரசின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"வெளிவரும் கதைகளின் பெரும்பகுதியும் பிரதமரை உணர்ச்சியற்றவராகவும் திறமையற்றவராகவும் காட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன், அவதூறு செய்வதிலும், அவமதிப்பதிலும் கவனம் செலுத்துகிறது" என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் குறிப்பிட்டார்.

இது, "உலகத்தின் பார்வையில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது" என்று அவர் கூறுகிறார், இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதில் அரசின் "நேர்மையான முயற்சிகளையும் உண்மையான சவால்களையும்" விமர்சகர்கள் மறந்துவிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோதி எப்போதும் இந்தியர்களை கனவு காண அழைத்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆகும் என்றும், 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"மக்கள் கனவு காண விரும்புகிறார்கள். இந்த கோவிட் -19 நெருக்கடிக்குப் பின்னர் நல்ல காலம் வரும் என்று அவர்கள் இப்போதும் நம்பக்கூடும்," என்று கூறுகிறார் பேராசிரியர் ஜாஃப்ரலோட்.

மோதி தனது அரசின் தோல்விகளை ஒப்புக்கொள்வதன் மூலம் ஒரு தொடக்கத்தை உருவாக்க முடியும் என்றும், தொற்றுநோயைக் கையாள்வதற்கான கொள்கையை வடிவமைப்பதில் நிர்வாகத்துறையினரை நம்புவதை விட சுயாதீன விஞ்ஞானிகளைக் கேட்க ஆரம்பிக்கலாம் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து உலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் 40% க்கும் மேலாகவும், மே மாத தொடக்கத்தில் இருந்து உலகளாவிய இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கும் ஏற்படும் நிலையில், இந்தியா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது.

செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை மாநில முதலமைச்சர்களுடனான தனது அரை டஜன் சந்திப்புகளில், இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக மோதி எச்சரித்ததாக பாஜக கூறுகிறது.

அப்படி இருக்கும்போது, மார்ச் மாதத்தில் அகமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளுக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களும், ஏப்ரல் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் கும்பமேளாவிற்கு லட்சக் கணக்கான யாத்ரீகர்களும் கூடுவதற்கு அவரது அரசு ஏன் அனுமதித்தது என்று விமர்சகர்கள் வினவுகின்றனர்.

மார்ச் மாத இறுதியில் தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களுக்கு ஏன் பச்சைக்கொடி காட்டப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவந்த நிலையில், ஏப்ரல் 17 அன்று, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி,"ஒரு பேரணியில் இத்தனை அதிகமான மக்களை நான் பார்த்ததில்லை," என்று முழக்கமிட்டது ஏன் என்று விமர்சகர்கள் மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :