`கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?' - பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Reuters

கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். `முன்கூட்டியே திட்டமிடல் என்பதை உங்களிடம் பார்க்க முடியவில்லை' எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

`அரசமைப்புச் சட்டத்தின் வழி நடக்க வலியுறுத்தும் குழு' (constituition conduct group) என்பது இந்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு. இதில் 116 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். `இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெற வேண்டும்' என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கும் அமைப்பாகவும் இது உள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தவறுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடந்த 20 ஆம் தேதி இந்த அமைப்பினர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில் நேர்மையான காவல் ஆணையராக அறியப்பட்ட ஜூலியோ ரிபைரோ, முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 116 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

பிரதமருக்கு சிசிஜி அனுப்பியுள்ள கடிதம்:

"பிரதமர் அவர்களுக்கு,

இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான நாங்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அரசியல் சார்பும் கிடையாது. இதற்கு முன்னால் நிர்வாக செயல்முறைகள் எப்போதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதாக இருந்ததாகக் கருதினோமோ அப்போதெல்லாம் நாங்கள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

தற்போது கொரோனா பேரலை என்ற துயரமான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் நமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கோபத்துடனும் துக்கத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். இந்தியாவை மட்டும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ உதவிகளுக்காகவும் கொரோனா சம்பந்தப்பட்ட மற்ற உதவிகளுக்காகவும் மக்கள் கதறும் சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்கள் அரசு, இவ்வளவு பெரிய சிக்கலை சாதாரணமாக கையாண்டு கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது எங்கள் உணர்வுகள் மரத்துப் போகின்றன. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விரும்பத்தகாத விளைவுகள் இந்தியர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்ட காரணத்தினால் துக்கத்துடனும் துயரத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.

காற்றில் பறக்கும் கொள்கைகள்

உங்கள் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, `அமைச்சரவை கூடி முடிவெடுத்து அரசின் செயல்கள் நடைபெறும்' என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதனையும், இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய அரசு என்பதை நீங்கள் மறந்துவிட்டதையும், எந்த மாநிலங்களில் எல்லாம் உங்கள் கட்சி ஆட்சியில் இல்லையோ, அந்த மாநிலங்களை நீங்கள் நடத்தும் விதம் எப்படியுள்ளது என்பதைக் கண்டதாலும் சொல்கிறோம்.

கொரோனா போன்ற சிக்கல்கள் எழும்போது அந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வல்லமை படைத்தவர்களையும், நாடாளுமன்றக் குழுக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டதைப் பார்க்கிறோம்.

மாநில அரசுகளுடன் இத்தகைய தருணங்களில் மிகவும் நெருக்கமாகக் கலந்து உரையாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லாததால் விரும்பத்தகாத அபாயகரமான விளைவுகளால் ஏழைகளும் இந்தச் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களும் பாதிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

பன்னாட்டு சமுதாயம் மற்றும் நம்முடைய விஞ்ஞானிகள், `கொரோனாவால் எத்தகைய விளைவுகள் வரும்?' என்பதை எடுத்துக் கூறியும் கொரானாவின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைக்கு இடையில் இருந்த இடைவெளியில் மிகத் தேவையான மருத்துவக் குழுக்கள், படுக்கைகள், தேவையான ஆக்சிஜனை கையிருப்பாக வைத்திருத்தல், மருத்துவ உபகரணங்களை பெருக்குதல் என முன்கூட்டியே திட்டமிடலை உங்களிடம் பார்க்க முடியவில்லை.

`இந்தக் கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமே தடுப்பூசிதான்' என்று இருக்கும்போது, இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிட்டு போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதற்கு என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் உங்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

எங்கே ஆத்ம நிர்பார் பாரத்?

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் மற்றும் உங்களின் அமைச்சரவை சகாக்கள் பேசிய பேச்சுக்களைப் பார்க்கும்போது, கொரோனாவை பற்றிய விழிப்புணர்வில் இருந்து மக்களை திசைதிருப்ப முயன்றீர்கள் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

நீங்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக மாநில அரசுகளும் மக்களும், `அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்பதற்கேற்ப மிதப்புடன் இருந்துவிட்டார்கள் என்பது கண்கூடு. `இந்தியாவிலேயே எல்லாவற்றையும் உருவாக்குவோம்' என்று கூறினீர்கள். அந்த `ஆத்ம நிர்பார் பாரத்' இன்று எங்கே இருக்கிறது? தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட சிறிய நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வலுப்பெறத் தொடங்கிய நேரத்தில், `எவ்வளவு நிதி தேவைப்படும்?',` அதில் மாநில அரசுகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?' என்ற சரியான கணக்கு உங்களிடம் இருந்ததாகத் தோன்றவில்லை.

`பி.எம் கேர்ஸ்' என்ற புதுமையான நன்கொடை திட்டத்தைத் தொடங்கி வைத்தீர்கள். ஏற்கெனவே `prime minister national relief fund' என்ற ஒன்று இருக்கும்போது, இந்த பி.எம் கேர்ஸுக்கு பணம் எவ்வாறு பெறப்பட்டது, அது எப்படி செலவழிக்கப்பட்டது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் இன்று வரையில் இல்லை. பி.எம் கேர்ஸ் நிதிக்கான நீங்கள் கொடுத்த வரிச்சலுகைகளின் காரணமாக தற்சார்பு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் செலவழிக்கின்ற தொகைகள் அனைத்தும் பி.எம் கேர்ஸ் நன்கொடைக்கு வந்துவிட்டது.

இதனால் அடிமட்டத்தில் செல்ல வேண்டிய உதவிகள் எதுவும் செல்லாமல் தடுக்கப்பட்டன என்பது கசப்பான உண்மை.

பிரதமருக்கு மாளிகை அவசியமா?

இதுதவிர, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை. அவ்வாறு நீங்கள் கொடுத்திருந்தால் மாநிலங்கள் தங்களின் நிதிச் சுமையில் இருந்து தலைநிமிர்ந்திருக்கும். அது நடக்காமல் போய்விட்டது.

அதேநேரத்தில் தேவையே இல்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டம், பிரதமருக்கென்று ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு ரகசியப் பாதை என்றெல்லாம் திட்டமிட்டு ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய் இந்தநேரத்தில் செலவழிக்கப்படுவதைக் காண்கிறோம்.

இந்தச் செலவு இந்த நேரத்தில் தேவையா? என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அந்த வேலைகள் தொடர்ந்து நடப்பதைக் காண்கிறோம். இதைத் தவிர அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவது என்பது கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் அத்தகைய நிதி நிறுவனங்கள் பெற்று வந்த நிதிகள் பெருமளவு வராமல் போகும் சூழல் உருவாகியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசின் கீழ் வரும் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்தத் தேர்தல்களை நடத்துவதில் நீங்கள் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டீர்கள்? நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தநேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் பிரசாரத்தை நடத்தினீர்கள்.

கொரோனாவை பரப்பிய 2 சம்பவங்கள்!

அதேபோல், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற்றபோது, கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்தான் கும்பமேளா நடந்தது. மிகவும் வேகமாக கொரோனாவை பரப்பிய 2 நிகழ்வுகளில், தேர்தலில் நீங்கள் கையாண்ட முறைகளும், கும்பமேளாவும் இருந்தன.

இரண்டாம் கொரோனா அலையினை வரவேற்பது போல உங்களின் இந்த நிகழ்வுகள் அமைந்தன. அதனுடைய தாக்கத்தை இன்று நாம் கண்டுகொண்டுள்ளோம். இது நகர்ப்புறங்களை மட்டுமல்ல, கிராமப்புறங்களையும் பாதித்துள்ளதைக் காண முடிகிறது.

கொரோனா தொடர்பான செய்திகளை உங்கள் அரசு மிகச் சிறப்பாக கையாள்வதை முக்கியமானதாகப் பார்க்கிறீர்கள். ஆனால், கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பதில் கவனம் இருப்பதாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் இந்தக் கொரோனா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் சோதனைகளில், எத்தனை பாசிட்டிவ் அறிக்கைகள் வந்தன, எத்தனை பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய சரியான வெளிப்படைத்தன்மை இல்லை என்று பரவலாக உணரப்படுகிறது.

இவைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லாத காரணத்தினால் எந்த அளவுக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற முறையான கணக்கும் இல்லாதது தெளிவாகிறது. இன்றுள்ள நிலையில் இந்தக் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்பதால் உங்களுக்கு சில ஆலோசனைகளை சமர்ப்பிக்கிறோம்.

1. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தர வேண்டிய பொறுப்பினை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்காக எங்கெல்லாம் தடுப்பூசி வாங்க முடியுமோ அதனைப் பெற்று மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கும் ஏஜென்சிகளுக்கும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோருக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் மிகத் தேவையான மருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான கருவிகள் மாநிலங்களில் இருக்கிறதா என்பதையும் அவை இல்லாத இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசின் முக்கியமான கடமை.

3. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

4. `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் மற்றும் பிரதமரின் அரண்மனைக்கும் செலவழிக்கும் போக்கைக் கைவிட வேண்டும். இதுதவிர பிற தேவையற்ற செலவினங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாநில அரசுகளுக்கு மருத்துவ வசதியினை பெருக்குவதற்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும்.

5. கொரோனா பெருந்தொற்றின் கொடுமை தணியும் வரை, இந்திய உணவுக் கழகத்தில் உள்ள வழக்கமான ரேசன்களுக்கு கொடுப்பது தவிர, மீதமுள்ள உணவுத் தானியங்களை ஏழைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உடனடியாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தற்போது நடைபெற்று வரும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் புரத உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

7. கொரோனா இந்த ஆண்டு தணிந்துவிடும் என உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது. மூன்றாவது அலை வருவதற்கான காரணங்கள் இருப்பதால், இந்த நிதியாண்டு முழுமைக்கும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மாதம் 7,000 என்ற அளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் `குறைந்தபட்சக் கூலி' கொடுக்க வேண்டும்.

8. வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் (FCRA - Foreign Contrubution Regulation Act) புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தற்போதைய அளவில் தளர்த்திவிட்டு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிப்போரிடம் பணம் வாங்குவதற்கு வழி திறக்கவேண்டும். அவை முறையாக செலவழிக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.

9. கொரோனா தொற்றை தடுப்பதற்கு என்னென்ன செயல்கள் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும்.

10. அனைத்துக் கட்சிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்து அவர்களின் ஆலோசனைகள், கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அரசின் முடிவுகள் குறித்து அந்தக் குழு ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பல மாநிலங்களில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அந்தக் குழுவிடம் அளித்து ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

மேலும், கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க அரசு மற்றும் நிர்வாக அளவில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் கடிதத்தில் விரிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது என்னவென்றால், இந்தக் கொரோனாவால் தங்களின் உறவுகளை இழந்து தவிக்கின்ற மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும்.

பரிவு மற்றும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல் என்பதுதான் மத்திய அரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். பிரதமர் அவர்களே, எந்தளவுக்குத் திறமையாக இந்தச் சிக்கலை நீங்கள் தீர்க்க முயல்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வரலாறு உங்களை வகைப்படுத்தும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :