கடலூர் நோயாளி மரணம்: ஆக்சிஜன் கருவியை கழற்றியது காரணமா? யார் பொறுப்பு?

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
இறந்த ராஜாவின் மனைவி கயல்விழி
படக்குறிப்பு,

இறந்த ராஜாவின் மனைவி கயல்விழி

கடலூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் கருவியை நீக்கியதால் சிகிச்சை பெற்றுவந்த கணவர் இறந்ததாக கூறி மனைவி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது.

திட்டக்குடியை சேர்ந்த ராஜா (வயது 49) என்பவர், கடந்த 5ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி கயல்விழி தனது கணவருக்கு ஆக்சிஜன் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், திடீரென நேற்று வேறொரு நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க அந்த கருவி தேவைப்படுவதாக கூறி அவரிடமிருந்து மருத்துவர்கள் எடுத்துச் சென்றதால், கணவர் உயிரிழந்து விட்டதாக கூறி அழுதபடி புகார் தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து இறந்தவரின்‌ உறவினர்கள் மருத்துவர்களிடம் காரணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இறந்தவரின் அண்ணன் ராஜசேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் விசாரித்தோம். "மூச்சுத் திணறல் காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் ராஜா. இதனால் கடந்த சில நாட்களாக அவரது ஆக்சிஜன் ஓரளவு சீராகியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால், அவருடைய மனைவி மட்டுமே அவருடன் இருந்து முழுமையாக கவனித்து வந்தார்.

வியாழக்கிழமை காலை சுமார் 9 மணி அளவில், அவரது மனைவி ராஜாவுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பரபரப்பாக வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவரிடம் இருந்த ஆக்ஸிஜன் கருவியை நீக்கிவிட்டு, அந்த கருவியை முதல் தளத்தில் இருந்து அவசர அவசரமாக தரை தளத்திற்கு எடுத்துச் சென்றனர்," என்றார் அவர்.

படக்குறிப்பு,

கேள்வி கேட்கும் உறவினர்கள்.

"இதையடுத்து அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி, மருத்துவர்களிடம் எதற்காக இதனை எடுத்துச் செல்கிறீர்கள். அதனை மீண்டும் பொருத்துங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அக்கருவியை எடுத்து சென்றுவிட்டனர். மீண்டும் ராஜாவை அவர்கள் மேலே வந்து பார்த்த போது அவர் உயிரிழந்துவிட்டார்," என்று தெரிவித்தார் ராஜசேகர்.

இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்க முயன்றுள்ளனர்.

அதற்கு‌ பதிலளித்த மருத்துவர்கள் அவரேதான் ஆக்சிஜன் கருவியை நீக்கிவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்று தெரிவித்தனர்.

"வேறு கருவியை மாற்றுவதற்காக அதை எடுத்தோம் என்று கூறும் மருத்துவர்கள், அவர் தீவிர சிகிச்சை பெற்றுவரும் சூழலில், முன்னெச்சரிக்கையாக வேறொரு கருவியைத் தயார் செய்த பிறகுதானே அந்தக் கருவியை நீக்கியிருக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு மருத்துவர்கள் சரியாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேலும் காவல் துறையினர் எங்களை அங்கிருக்க அனுமதிக்கவில்லை," என்றார் ராஜசேகர்.

மேற்கொண்டு உறவினர்களிடம் அவர் சாப்பிடும் போது அவர் முழுமையாக ஆக்சிஜனை நீக்கிவிட்டு உணவருந்தினாரா? என்று கேள்வி எழுப்பினோம்.

"உணவு உட்கொள்ளும் போது மட்டும், அந்த ஆக்சிஜனை எடுத்து உணவருந்துவார். பின்னர் மீண்டும் போட்டுக் கொள்வார். தொடர்ந்து அதனைப் போடாமல் அவரால் உணவருந்த முடியாது," என்று பதிலளித்தனர்.

இந்த விவகாரம் குறித்து கடலூர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம்) ரமேஷை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது விளக்கமளித்த அவர், "மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 5ஆம் தேதியிலிருந்து அந்த நோயாளி சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று இல்லை என வந்தது.

பட மூலாதாரம், Raja

படக்குறிப்பு,

உயிரிழந்த ராஜா

சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, அவருக்கு 85 முதல் 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. பின்னர் அதற்கு தேவையான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது," என்றார்‌ இணை இயக்குநர்.

"இதனிடையே வியாழக்கிழமை காலை அவர் சிகிச்சை பெற்று வந்த பகுதி அருகே மருத்துவர்கள் சென்றுள்ளனர். அப்போது உயிரிழந்தவரின் மனைவி அவருக்குக் காலை உணவு ஊட்டி கொண்டிருந்தார். இந்த சூழலில், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை இங்கே பரிந்துரை செய்ததால், அழைத்து வந்துள்ளனர்.

அப்போது தரை தளத்தில் அவருக்கு ஆக்சிஜன் கருவி பொருத்த முயற்சித்தபோது, பைப் லைனில் சரியாக பொருந்தவில்லை. பின்னர், மேலே இருக்கக்கூடிய ஆக்சிஜன் கருவியை இவருக்குப் பொருத்தி பார்க்கலாம் என்று முயற்சித்தோம். அந்த தருணத்தில், அந்த நோயாளி உணவருந்தி கொண்டிருந்த இடைவெளியை பயன்படுத்தி தான் அந்த கருவியைக் கீழே கொண்டுவந்து மாற்றினோம்," என்கிறார் ரமேஷ்.

கீழே இருந்த கருவியை உடனே மேலே எடுத்துச்சென்று பொருத்திய போது பைப் லைனில் சரியாக பொருந்தி விட்டதாக அவர் தெரிவித்தார்.

"பின்னர் அவருக்கு தேவையான ஆக்சிஜன் கருவி ஏற்பாடு செய்துவிட்டு, அவரது மனைவியிடம் உணவளித்து முடிந்த பிறகு தெரியப்படுத்துங்கள், கருவியை மீண்டும் அவருக்கு பொருத்திவிடலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார். இவர்கள் சாப்பிட்டு முடித்தபிறகு சற்று இடைவெளி விட்ட நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மருத்துவரும் உடனடியாக சென்று பார்த்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது," என்று கூறினார்.

பொதுவாக இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும். அதனாலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவரிடமிருந்து ஆக்சிஜன் கருவியை எடுத்த காரணத்தினால் அவர் உயிரிழக்கவில்லை. திடீரென மாரடைப்பு ஏற்படவே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் இந்த கருவியைப் பயன்படுத்தியபோது மருத்துவர்கள் எடுக்கவில்லை," என்றார் ரமேஷ்.

இவருக்கு பொறுத்தப்பட்டிருந்து கருவி CPAP என்றழைக்கப்படும் ஒரு வகை ஆக்சிஜன் கருவியாகும். இந்த கருவி வெண்டிலேட்டரை போன்று தான், ஆனால் இது வெண்டிலேட்டர் கிடையாது என்று விளக்கமளித்தனர்.

"எப்பொழுதும் ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் சென்று கொண்டிருக்கும் போது, அதை எடுக்கவே மாட்டோம். அதிலும் வேறொரு நோயாளிக்கு அவசர தேவை இருந்தாலும் மாற்று ஏற்பாடு தான் செய்வோமே தவிர, கருவியை பயன்படுத்துகின்ற நோயாளியிடம் இருந்து எடுக்கமாட்டோம்," என்று கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் நேரடியாக நேற்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, "நோயாளி ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரிடம் இருந்து மருத்துவர்கள் அக்கருவியை எடுக்கும்போது, அவர் ஆக்சிஜன் கருவியை பயன்படுத்தவில்லை, அந்த நேரத்தில்தான் கருவியை மாற்றியுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,

மேற்கண்ட "நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் சேர்த்த நாளிலிருந்து NRM Mask மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. கடந்த 18ஆம் தேதி நோயாளிக்கு ஆக்சிஜன் ஏற்பு அளவு 60% இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் 19ஆம் தேதி அன்று ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP முறைக்கு மாற்றினோம். அவ்வாறு மாற்றியபோது நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்துள்ளார் மா.சுப்ரமணியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :