மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கொரோனா தொடங்கியது முதல் 8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி
Black fungus: India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு மேல் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை சுமார் 8,800 பேருக்கு 'மியூகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் இந்த அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுகிறது.

மிகவும் அரிதாக உண்டாகும் இந்த மியூகோர்மைகோசிஸ் தொற்று பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது.

கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) மருந்துகள் மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதல் பாதிப்பு ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து கூடுதலாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 12 முதல் 18 நாட்களுக்குள் கருப்பு பூஞ்சை பாதிப்பு உண்டாவதாக பிபிசியிடம் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதிக்கும் அதிகமானவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

மேலும் 15 மாநிலங்களில் 8 முதல் 900 பேர் வரை கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 29 இந்திய மாநிலங்களும் இதை உறுபிணியாக (epidemic) அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'80% பேருக்கு மேல் அறுவைசிகிச்சை தேவை'

மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடெங்கிலும் உள்ள உருவாக்கப்பட்ட சிறப்பு மருத்துவ வார்டுகளும் விரைவில் நிரம்பி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாராஜா எஸ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில் 1,100 படுக்கை வசதிகள் உள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு கருப்பு பூஞ்சை தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் எட்டுதான் சனிக்கிழமை மாலை நிலவரப்படி அங்கு 185 பேர் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

80 சதவிகிதத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்று அந்த மருத்துவமனையின் மருத்துவத் துறை தலைவர் வி.பி. பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் மியூகோர்மைகோசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 11 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஓர் ஆண்டுக்கு ஒருவர் அல்லது இருவர்தான் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவார்கள். இப்பொழுது இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவது எதிர்பாராதது என்று அவர் கூறுகிறார்.

இந்தூர் நகரில் மட்டும் இந்த பாதிப்புடன் குறைந்தது 400 பேர் இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

கருப்பு பூஞ்சை தொற்று தற்போது மிகவும் சவாலானதாக மாறி வருகிறது உடனடியாகவும் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 94% பேர் வரை உயிரிழக்கக் கூடும். இதற்கு சிகிச்சை அளிப்பதற்கு உண்டாகும் செலவு அதிகம் மருந்துக்கான பற்றாக்குறையும் நிலவுகிறது என்று பாண்டே கூறுகிறார்.

மியூகோர்மைகோசிஸ் சிகிச்சைக்கு என்ன மருந்து?

ஆம்போடெரிசின்-பி (amphotericin B) அல்லது 'ஆம்போ-பி' என்றழைக்கப்படும் பூஞ்சை எதிர்ப்பு ஊசி இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 8 வார காலத்துக்கு, தினந்தோறும் செலுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Twitter

இந்தூர் நகரில் உள்ள 201 மியூகோர்மைகோசிஸ் நோயாளிகள் குறித்த தரவுகளை பாண்டே சேகரித்துள்ளார். கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்.

அவர்களுக்கு பெரும்பாலும் ஸ்டீராய்டு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வேறு ஒரு நோய் இருந்துள்ளது முக்கியமாக நீரிழிவு நோயால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மியூகோர்மைகோசிஸ் தொடர்பாக வேறு ஓர் ஆய்வும் நான்கு இந்திய மருத்துவர்களால் நடத்தப்பட்டது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பு மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் தரவுகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

இதன் தரவுகளின்படி கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்களில் 79 பேர் ஆண்கள்; 83 பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தது.

இரண்டு மும்பை மருத்துவமனைகளிலும் 45 கருப்பு பூஞ்சை நோயாளிகளின் தரவுகளை வைத்து வேறு ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இவர்களில் அனைவருக்குமே ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தது அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

மியூகோர்மைகோசிஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த எந்த நோயாளியின் உடலிலும் சர்க்கரை அளவு இயல்பானதாக இல்லை என்று பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கண் மருத்துவர் அக்ஷய் நாயர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மியுகோர்மைகோசிஸ் என்பது என்ன?

மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. "இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது" என்கிறார் டாக்டர் நாயர்.

இது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் நீரிழிவு, புற்று, எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்குக் கூட ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

50% இறப்பு விகிதத்தைக் கொண்ட இது, தீவிர கோவிட் -19 நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டீராய்டுகள் கோவிட் -19 நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும் போது ஏற்படக்கூடிய சில சேதங்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத கோவிட் -19 நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சி மியூகோர்மைகோசிஸ் என்ற நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :