அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்

பாபா ராம் தேவ்

பட மூலாதாரம், Getty Images

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் சாமியாருமான பாபா ராம்தேவ் "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அல்லது ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்; அலோபதி மருத்துவ முறை அறிவிலித்தனமானது, காலாவதியானது," என்று கூறியதற்கு பொது மன்னிப்பு கோர வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன காணொளி?

பாபா ராம்தேவ் பேசிய காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதில் அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல் எனவும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் ராம்தேவ்.

"அலோபதி ஒரு முட்டாள்தனமான அறிவியல். முதலில் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் தோல்வியுற்றது, பின் ரெம்டிவிசிர் தோல்வியுற்றது…பின் பிளாஸ்மா தெரபி தடை செய்யப்பட்டது, ஸ்டீராய்டுகள் தோல்வியடைந்துவிட்டன. ஃப்பிஃப்ளூ மற்றும் இவர்மெக்டின் ஆகிய மருந்துகளும் தோல்வியடைந்துவிட்டன," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அல்லது ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்; அலோபதி மருத்துவ முறை அறிவிலித்தனமானது, காலாவதியானது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நோட்டீசில் கூறப்பட்டது என்ன?

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம் தாம் கூறிய கருத்தை, சாமியார் ராம்தேவ், திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்காக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபா ராம் தேவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில், "எந்த ஒரு அடிப்படை தரவுகளும் இல்லாமல் பொதுவெளியில் பொறுப்பற்று மரியாதை குறைவாக பேசிய பாபா ராம் தேவின் கருத்து குறித்து எங்கள் அமைப்பில் உள்ள மருத்துவர்கள் அவமரியாதையாக உணர்கின்றனர்.

கோவிட் - 19 சிகிச்சையில் அலோபதி மருத்துவம் தோல்வியடைந்துவிட்டது, அலோபதி மருத்துவத்திற்கு மக்கள் பலியாகின்றனர் என்ற அவதூறுகளை கேட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதைய கருத்து மட்டுமல்ல, பாபா ராம்தேவ் தொடர்ந்து நவீன மருத்துவம் குறித்து இம்மாதிரியாக பேசி வருகிறார்.

எந்த அடிப்படை ஆதாரமும், அறிவியல் தரவும் இல்லாமல் பாபா ராம்தேவ் மொத்த நவீன மருத்துவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும் இந்த மன்னிப்பு முக்கிய செய்தி மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளிவர வேண்டும். நவீன மருத்துவத்துக்கும், அதன் மருத்துவர்களின் பெயருக்கும் களங்கம் விளைவித்த காரணத்திற்காக இவ்வாறு செய்யவேண்டும். எதிர்காலத்திலும் நிச்சயம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் கூறிக் கொள்கிறோம்.

இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 14 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்திய மருத்துவச் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், "மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு நவீன மருத்துவத்தை கலைத்திட வேண்டும் அல்லது பாபா ராம் தேவ் மீது தொற்று நோய்ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று, பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவ்விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாபா ராம்தேவ் கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களை அவமரியாதை செய்த்ததுமூலம் நாட்டு மக்களை புண்படுத்தியதாக ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

"அலோபதி மருந்தை எடுத்துக் கொண்டதால்தான் பல லட்சம் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்று கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே உங்கள் கருத்தை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்" என ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ சங்கத்தில் 3.5 லட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா மெடிகல் அசோஷியேஷன் எனும் அமைப்பும் அவருக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

என்ன சொல்கிறது பதஞ்சலி?

பாபா ராம்தேவின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என அவரது பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிகழ்ச்சி ஒரு தனியார் நிகழ்ச்சி. அதில் பாபா ராம்தேவ் தனக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறருக்கும் வந்த வாட்சப் பார்ஃபோர்ட் செய்திகளை படித்து காட்டினார்.

நவீன மருத்துவம் குறித்தும் மருத்துவர்கள் குறித்து பாபா ராம்தேவிற்கு எந்த ஒரு தவறான கருத்தும் இல்லை. அவருக்கு எதிராக சொன்ன கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என பதஞ்சலி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :