முழு ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து கடைகளில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

விழுப்புரம்

நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தியன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் இருந்தனர்.

விழுப்புரம் மற்றும் கடலூரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் நாளை முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் நகர் பகுதியான எம்.ஜி.ரோடு, நேருஜி சாலை, திரு.வி.க. வீதியில் அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தும் இரு சக்கர வாகனத்தில் அதிகமானோர் வருகை புரிந்து பொருட்களை வாங்கி சென்றால், காவல் துறையினர் போக்குவரத்தினை சரி செய்ய முடியாமல் திணறினர்.

முழு ஊரடங்கினை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட காய்கறி வியாபாரிகள் சிலர் நேற்றைய தினம் குறைந்த விலைக்கு விற்ற தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை விலையுயர்த்தி விற்பனை செய்ததால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாக்கினர். இருப்பினும் காய்கறிகளின் தேவை இருப்பதால் பொதுமக்கள் விலையேற்றத்தினை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மேலும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகள் குறைந்த அளவே பயணிப்பதால் பேருந்துகளில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

இதைப்போன்று கடலூர் மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு எதிரொலியாக காய்கறிகள் வாங்கப் பொதுமக்கள் குவிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக கடலூரில் பல்வேறு பகுதிகளில் நோய்த் தொற்றின் வீரியத்தைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் கூட்டமாக சுற்றித் திரிந்தனர். கடலூர் உழவர்சந்தை, பேருந்து நிலையம் மற்றும் மஞ்சை நகர் மைதானம் என மூன்று இடங்களில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளை முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், வழக்கத்தைவிட அதிகமாக பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்தனர். அதிலும் வியாபாரிகள் சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்தனர்.

ராமநாதபுரத்தில் தேதிக்கு முன்னரே நடத்தப்பட்ட திருமணங்கள்

தமிழகத்தில் நாளை முதல் வரும் மே 31 தேதி வரை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே 50க்கும் அதிகமான திருமணங்கள் கோவில் வாசல்களில் நடைபெற்றன.

இன்றிலிருந்து வரும் மூன்று நாட்கள் சுபமுகூர்த்தம் தினம் என்பதனால் திருமணங்கள் அதிகம் நிச்சயிக்கப்பட்டிருந்தன.

ஆனால் வரும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் உறவினர்கள் யாரும் திருமணங்களில் கலந்து கொள்ள முடியாது. இதனால் நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே இன்று அவசர அவசரமாக திருமணங்கள் நடைபெற்றன.

இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், "எனது மகனுக்கு வரும் 24ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது ஆனால் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமணங்களுக்கு செல்ல இ பதிவு அனுமதி இல்லை என அறிவித்ததையடுத்து என்னுடைய முக்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு நேற்று மாலை தொலைபேசி,வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக இன்று எனது மகன் திருமணம் நடைபெறுவதால் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தேன்.

இதனையடுத்து உறவினர்கள் நண்பர்கள் அதிகமானோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டனர்," என்றார்.

நாட்டு மருந்து கடைகளில் அலை மோதிய கூட்டம்

நாளை முதல் முழு ஊரடங்கு காரணமாக பால் மற்றும் மருந்து கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் இன்று அதிக அளவு நாட்டு மருந்து கடைகளில் குவிந்தனர்.

இது குறித்து நாட்டு மருந்து கடையில் நீண்ட் நேரமாக காத்திருந்து பொருள் வாங்கிய ரூபன் சக்கரவர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாளை நாட்டு மருந்துகடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் நாளை வீட்டை விட்டு வெளியே வரும் போது உரிய ஆவணங்கள் இன்றி வந்தால் காவல்துறையினரால் நடவடிக்கை எடுப்பார்கள்.

மருந்தகத்தில் மருந்து வாங்க சென்றால் மருத்துவர் எழுதி கொடுக்கும் சீட்டை காண்பிக்கலாம் ஆனால் நாட்டு மருந்து கடைகளுக்கு மருந்து வாங்க வந்தால் எந்த ஆவணமும் இருக்காது என்பதால் இன்றே வாங்குவதற்காக நாட்டு மருந்து கடைக்கு வந்துள்ளேன். என்னை போல் இன்று அதிகமானோர் நாட்டு மருந்துகள் வாங்க கடையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாங்கி செல்கின்றனர்."

மீன் வாங்க குவிந்த மக்கள்

ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. உள்ளூர் மீன் தேவைக்காக நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வில்லை. நேற்றும், இன்றும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பாம்பன் வடக்கு கடற்கரை துறைமுகத்தில் இருந்து 100க்கும் அதிகமான நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இன்று காலையில் கரை திரும்பினர்.

இதையடுத்து, அதிகமான மக்கள் நேரடியாக கடற்கரைக்கே சென்று மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்கி சென்றனர். இதனால் மீன் வியாபாரிகள் வருவதற்கு முன்னரே மீன்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

மதுரையில் விமானத்தில் திருமணம்

மதுரையிலும் ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டன.

ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக முறைப்படி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார். இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர்.

மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :