கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மு க ஸ்டாலின், தமிழக முதல்வர்

பட மூலாதாரம், Getty Images

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, மு க ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பிபிஇ கிட் அணிந்து கொண்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சென்று சந்தித்தேன். நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் சந்தித்து உரையாடினேன்.

அதிகநேரம் பிபிஇ கிட் அணிந்து வேலை செய்யும் மருத்துவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையில் நானும் பிபிஇ கிட் அனிந்து ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார்.

''அதைத்தொடர்ந்து சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டத்தை சேர்ந்த ஆட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தை, நானும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆகியோரும் மேற்கொண்டோம்''.

கர்நாடக மாநிலத்தில் 50,000 என்கிற உச்சநிலையை தொட்டது, கேரள மாநிலத்தை பொருத்தவரைக்கும் 43 ஆயிரம் என்கிற உச்சநிலையை தொட்டது, தமிழ்நாட்டைப் பொருத்தவரை 36 ஆயிரம் என்ற அளவிலேயே கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 24 - ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக பரவல் குறைந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் நன்றாகவே குறைந்து இருக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையை விட கோவையில் அதிகம் என்று சொல்கிற அளவுக்கு சில நாட்களாக எண்ணிக்கை இருக்கின்றது.

ஆனால் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கோவையில் இரண்டு நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில் இருக்கிறது என்றார்.

கோவையில், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடியவர்கள் அதிகம். வடமாநில தொழிலாளர்கள் இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் சேர்ந்து வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. இப்படி பல காரணங்கள் இருக்கின்றன என்று காரணங்களை பட்டியலிட்டார்.

எந்த காரணமாக இருந்தாலும் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டிருக்கிறது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்வதற்காக கோவை மாவட்டத்திலேயே நான்கு ஒருங்கிணைப்பு மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புற அளவிலே கொரோனா பரவவிடாமல் தடுப்பதற்கு கிராமப்புற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களை கண்காணிப்பதற்கும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏராளமாக அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக பல இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பாரதியார் பல்கலைக்கழகம், கொடிசியா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சீனிவாச கல்யாண மண்டபம், பிஏ கல்லூரி, வித்தியா விகாஸ் பள்ளி, ஜிசிடி கல்லூரி, கே சி டி கல்லூரி என பல இடங்களில் கொரோனா தொற்று சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலி படுக்கைகளும் தற்போது இருக்கின்றன.

சீனிவாச கல்யாண மண்டபம் மற்றும் கொடிசியா அரங்கம் ஆகிய இரண்டிலும் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோவை புறக்கணிக்கப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 10ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான பரிசோதனைகளை செய்து வருகிறோம். இதுவரை கோவை மாவட்டத்தில் 5,85,713 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 1,51,061 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி எந்த மாவட்டத்திலும் படுக்கை வசதி இல்லை என்கின்ற நிலை இல்லை என்ற நிலைதான் தற்போது உருவாகி இருக்கிறது என்றார் முதல்வர்.

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் புகார்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டேன். அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அரசியல் நோக்கத்தோடு கருத்துக்களைச் சொல்லலாம், ஆனால் நான் அவர்களுக்கு தெளிவாக சொல்ல விரும்புவது ,நாங்கள் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகளை அவர்கள் நேரடியாக பார்வையிட வேண்டும். அப்படி பார்வையிட்டால் இந்த விமர்சனத்தை அவர்கள் வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கோவை மட்டுமல்ல எல்லா ஊரும், எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை.

கொரானா பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறி தெரிந்த உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும். வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறக்கூடியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

வீட்டுக்குள்ளும் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு பரவ விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு பகுதி அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது.

கோவை மாவட்டத்தில் 631 நகர் பகுதிகள் மற்றும் 302 ஊரகப் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஆட்கள் நடமாட்டம் முழுமையாக இருக்கக்கூடாது.

கொரோனாவை யாருக்கும் தரமாட்டோம் யாரிடமிருந்தும் பெறவும் மாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒரேநாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக அளவில் ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட வசதிகளை உருவாக்கி வைத்துள்ளோம்.

இவை அனைத்தும் இந்த அரசால் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் வசதிகளை உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பது தான் எனது ஒரே வேண்டுகோள் என்று முதல்வர் வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :