#ICUdiary கொரோனா ஐசியு வார்டு கதைகள்: புன்னகையால் மனங்களையும், நோயையும் வென்றவர்

கொரோனா

உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். இந்த பெருந்தொற்றுடன் நேருக்கு நேராக களத்தில் இருக்கும் சமூகம் உண்டென்றால் அது மருத்துவ சமூகமாகவே இருக்கும்.

அன்றாடம் சாவுடன் நேருக்கு நேர் போராடி உயிரை பணயம் வைத்து இந்த மருத்துவர்கள் ஆற்றும் பணி எவ்வளவு சவாலானது தெரியுமா?

ஒவ்வொரு நாளும் மாறுபட்ட சூழ்நிலை, முன் பின் அறிமுகமில்லாதவர்களின் உயிரிழப்புகள் என கடும் வலி நிறைந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

இதை புரிந்து கொள்ளவே பிபிசி தமிழ் ஐசியு டயரி என்ற பெயரில் புதிய தொடரை உங்களுக்கு வழங்குகிறது.

#ICUdiary என்ற ஹேஷ்டேக்குடன் கூடிய தலைப்புகளில் கோவிட் பணியில் இருந்த மருத்துவர் தீபிகா கோஷ், தான் அனுபவித்த மாறுபட்ட கதைகளை நம்மிடையை பகிர்ந்து கொள்கிறார். ஜூன் 1 முதல் 5ஆம் தேதிவரை அவரது கதைகளை இங்கே வழங்குகிறோம்.

இந்த தொடரில், ஒரு மகன், ஒரு மகள், ஒரு தந்தை, ஒரு தம்பதி, நோயாளிகள் என அறிமுகமில்லாத முகங்களுக்கு சிகிச்சை தரும் முக கவசம் அணிந்த மருத்துவர்கள் ஆற்றும் சேவை, அந்த முக கவசத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் கவலைகளை உங்களால் உணர முடியும்.

புன்னகையால் மனங்களை வென்ற நோயாளி, நோயையும் வென்றார்

நாள்பட்ட நோயுடன் போராடிக்கொண்டு தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு சென்று கீமோதெரபி, டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகளை செய்துகொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இப்போது கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டுள்ள இவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் இடர்ப்பாடும், நோய்த்தொற்று ஏற்படும்போது நோய் தீவிரமடையும் ஆபத்தும் அதிகம்.

கோவிட் இரண்டாம் அலையின் தொடக்கத்தில் அப்படி ஒரு நோயாளியை நான் சந்தித்தேன். அவர் ஒரு 78 வயது ஆண். கடந்தமுறை டயாலிசிஸ் செய்துகொண்டு திரும்பியபோது அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது.

அவரது படுக்கை அருகே சென்றபோது மற்ற பதற்றமான வயோதிக நோயாளிகளைப் போலவே அவரும் இருப்பார் என நினைத்து, எப்போதும் முகக் கவசம் போட்டுக்கொண்டே இருப்பதன் அவசியத்தை விளக்குவதற்கு ஆயத்தமானேன்.

ஆனால் நான் நினைத்தது மிகவும் தவறு. அவர் மன அழுத்தத்துக்கு ஆளானதைப் போலத் தெரியவில்லை. அவர் அருகே சென்றபோது புன்னகைத்தார். தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தமது டயாலிசிஸ் விரைவில் மீண்டும் தொடங்குமா என்று கேட்டார்.

சிகிச்சைக்கு தாம் ஒத்துழைப்பதாகவும், கூடுமானவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதாகவும் கூறினார். வழக்கமாக யாரும் இப்படிக் கூறமாட்டார்கள். செவிலியர்கள் உடனே அவரை விரும்பத் தொடங்கிவிட்டனர். அவரை யாருக்கு ஒதுக்கீடு செய்துகொள்வது என்பதில் போட்டி நிலவியது. அவருக்கு ஒரு சுவாச இயந்திரம் பொருத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு டயாலிசிஸ் தொடங்கியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவு கொஞ்சம் நன்றாகத் தோன்றியது.

டயாலிசிஸ் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது இன்றியமையாத உடற் குறியீடுகள் திடீரென மோசமாகத் தொடங்கின. அலாரம் அடிப்பதைக் கேட்டவுடனே, அனைவரும் அவரிடம் விரைந்து சென்று அவரது சுவாசத்தை மீட்கப் போராடினோம்.

20 நிமிடங்கள் கடுமையாக இதய நுரையீரல் சுவாசமூட்டல் நடவடிக்கையை (சிபிஆர்) மேற்கொண்ட பிறகு அவரை பிழைக்கவைக்க முடிந்தது. அடுத்த 3 நாள்களுக்கு அவர் உடல் நிலை மெதுவாக, ஆனால் உறுதியாக முன்னேறியது. 4-வது நாள் அவர் கண்களைத் திறந்து செய்கை மூலம் தகவல் பரிமாறினார். மீண்டும் அவசர சிகிச்சைப்பிரிவு நன்றாக மாறியது. மீண்டும் அவர் தமது படுக்கைக்கு அருகே வருகிறவர்களைப் பார்த்து புன்னகை செய்யத் தொடங்கினார். அடுத்த ஒரு வாரத்தில் அவரை வார்டுக்கு மாற்றினோம். அதன் பிறகு 4 நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைப் போன்ற வெற்றிகள் தரும் தெம்பில்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

#ICUdiary 4: "என்னை வீட்டுக்குப் போய் சாகவிடுங்கள்" மன்றாடிய தாய் - கலங்கிய மகன்

மருத்துவமனைக்குச் செல்வது பொதுவாக அச்சமூட்டுவது. வெறுக்கப்படுவது. இதற்கான காரணம் வெளிப்படை. கொரோனா வந்தபிறகுதான் வாழ்க்கையில் முதல் முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் பலரும் இருக்கிறார்கள். அவர்களது அச்சம் தெளிவாகத் தெரிகிறது.

ஒரு நாள் காலை அப்படிப்பட்ட 44 வயது பெண் ஒருவரை கோவிட் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துக்கொண்டோம். அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். எந்த சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவர் வீட்டுக்குச் செல்ல விரும்பினார். குடும்பத்தினருடன் பேசவேண்டும்; அப்போதுதான் அவர்கள் வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

"அறுவை சிகிச்சை வேண்டாம் என்று, சுகப்பிரசவம் செய்தவள் நான். நினைத்துப் பார்க்க முடியாத வலி. இருந்தாலும் சுகப்பிரசவம் செய்தேன். சாவதாக இருந்தாலும் வீட்டுக்குப் போய் சாகிறேன். என்னை வீட்டுக்குப் போகவிடுங்கள்," என்று அவர் கூறினார்.

அவருக்கு ஒன்றும் ஆகாது என்றும், எங்களிடம் ஒரு சிகிச்சைத் திட்டம் இருக்கிறது என்பதையும் அவரிடம் கூற விரும்பினேன். ஆனால், அதையெல்லாம் அவர் கேட்கத் தயாராக இல்லை.

அவரது மகனை தொலைபேசியில் அழைத்து, போனை அவருக்கு அருகே வைத்தேன். தனக்கு மருத்துவமனையில் இருக்க விருப்பம் இல்லாதபோதும் தன்னை அங்கே விட்டுச் சென்றதால் அவரை நல்ல மகன் அல்ல என்று கூறிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.

மகன் நிறைய மன்னிப்பு கேட்டார். டாக்டர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கும்படி மிகவும் கெஞ்சி கேட்டுக்கொண்டார். அவருக்கு உடம்பு பரவாயில்லை என்றால் இரண்டொரு நாளில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறினார் அவர். அந்தப் பெண் அமைதி அடைவதற்கு 30 நிமிடம் போல ஆனது. பிறகு சிகிச்சையைத் தொடங்கினோம்.

ஆனால், அவரது நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றது. 100 சதவீத ஆக்சிஜன் ஆதரவு தந்தபோதும் அவரால் தமது ஆக்சிஜன் அளவை தக்கவைக்க முடியவில்லை.

அவர் அண்ணாந்து கருவியின் திரையைப் பார்த்தார். அது 84 % என்று காட்டியது. அவர் என்னை அருகே அழைத்தார். "அந்த ஓரிரு நாள்கள் முடிந்துவிட்டது. என்னுடைய மகனை இப்போதே அழையுங்கள். அவன் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வான். நான் வீட்டில் சாக விரும்புகிறேன்" என்றார்.

என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவரது மகனை அழைத்து அவரது நிலைமையை விளக்கினேன். அவருக்கு மெக்கானிக்கல் வென்டிலேஷன் தேவை என்றும் கூறினேன். அதற்கு அவர் உடனே சம்மதித்தார். ஆனால், போனை தன் தாயிடம் தரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். தாய் வைக்கும் கோரிக்கையை தம்மால் தட்ட முடியாது என்பதால் அவர் அப்படிக் கூறினார்.

இன்னும் கொஞ்சம் உடல்நிலை தேறிய பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக தம் சார்பாக அவரிடம் விளக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரது குரல் உடைந்தது.

அவரை கட்டுப்படுத்துவதற்குத் தேவையானதை செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதற்காக வேதிப்பொருள்களை வேண்டுமானாலும் பயன்படுத்தச் சொன்னார்.

"தயவு செய்து அவர் சொல்வதைக் கேட்காதீர்கள். அவரைக் காப்பாற்றுவதற்கு என்னென்ன தேவையோ அதை செய்யுங்கள்" என்றார். நாங்கள் அப்படியே செய்தோம். அவரைக் காப்பாற்ற என்னென்ன செய்ய முடியுமோ, என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் துல்லியமாக செய்தோம். பல 'ஓரிரண்டு நாள்கள்' சென்றன. அவரது மகன் தினமும் அழைத்தார். ஆனால், அவர் பேசுவதைக் கேட்கும் அளவுக்குக் கூட தாய் சுவாதீனமாக இல்லை.

#ICUdiary 3: தேநீர் கிடைக்காமல் எரிச்சலடையும் ஐசியு நோயாளி

சில வாரங்களுக்கு முன்பு ஒரு வயோதிகர் எங்களுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்ததால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்த நபரின் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால் மூச்சுத்திணறலுடன் இருப்பவர்களுக்கு பொருத்தப்படும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது.

ஆனால், இந்த நபர் எப்போதும் தமது முக கவத்தை கழற்றிக் கொண்டே இருப்பார். முடிந்தவரை அதை தவிர்க்கச் செய்வார். அவரிடம் பேசியபோது, அவர் அந்த சிகிச்சை பற்றி மிகவும் குழம்பியிருந்ததை உணர்ந்தேன்.

அவரது மனைவியை அழைத்து அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து விளக்கினேன்.

இதுபோன்ற சிகிச்சையில் இருப்பவர்கள் மூச்சு விடும் கவசத்தை கழற்றக்கூடாது. அதனால், அவரை கட்டுப்படுத்தும் வகையிலான மருந்துகளை கொடுக்க வேண்டும் என கூறி அவரது மனைவியின் அனுமதியைப் பெற்றேன்.

அப்போது அவரது மனைவி, "நேரம் தவறாமல் அவருக்கு சரியான நேரத்தில் தேநீர் கிடைத்தால் அவர் எரிச்சலடைய மாட்டார். உரிய நேரத்தில் தேநீர் கொடுத்து அவரை பார்த்துக் கொள்ளுங்கள்," என்று கூறினார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. "சரி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்படாதீர்கள்," என்று பதிலளித்தேன்.

பிறகு ஊழியர் மூலம் தேநீர் வரவழைத்து அந்த நோயாளிக்கு கொடுத்தோம். அதன் பிறகு அவரை அமைதிப்படுத்தினோம். அதற்குப் பிந்தைய இரண்டு நாட்கள் எனக்கு விடுமுறை. இரண்டு நாட்கள் கழித்து வார்டுக்கு சென்றபோது, அந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

அவரது மனைவியை அழைத்து, "உங்களுடைய கணவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது. அவர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது," என்றேன்.

அவரது மனைவியோ, "வென்டிலேட்டர் கருவி பொருத்தும் முன்பு, அவருக்கு தேநீர் கொடுத்தீர்களா?" என்று வினவினார்.

இப்போதும் எனக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

"இல்லை" என்று சொல்ல எனக்கு துணிச்சல் இல்லை. இருந்தாலும், "ஆமாம்" என்று பதிலளித்தேன். அந்த ஒற்றை வார்த்தை அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.

பிறகு அந்த பெண்மணி, "சரி... நீங்கள் எல்லோரும் அவரை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்," என்று அமைதியாகக் கூறினார். அவரிடம் "சரி, கவலைப்படாதீர்கள்," என்று ஆறுதல் கூறினேன்.

#ICUdiary 2: "நான் உயிர் பிழைப்பேனா டாக்டர்?" - விடை தெரியாத வலி தரும் கேள்வி

கொரோனா தீவிர சிகிச்சை வார்டில் சேர்க்கப்படும் நோயாளிகளில் கிட்டத்தட்ட அனைவருமே உடல்நிலை மோசமான நிலையில் இருப்பவர்கள். ஒவ்வொரு நாளும் இந்த வார்டுக்கு வரும் நோயாளிகளின் முகங்களில் பயமும் உயிர் பிழைப்போமா என்ற நம்பிக்கையற்ற நிலையும் தெரிவதை பார்த்திருக்கிறேன்.

எல்லோருமே கேட்கும் ஒரே கேள்வி.... "நான் உயிர் பிழைப்பேனா டாக்டர்?"

நான் பார்க்கும் முகங்கள், கேட்கும் குரல்கள் அனைத்தும் இந்த ஒற்றைக்கேள்வியில் என்னை பதில் தெரிவிக்க முடியாத சங்கட நிலையில் ஆழ்த்தும்.

கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் நிலை மோசமடையும் கட்டத்தை இங்கு மட்டுமல்ல, உலகமே எதிர்கொண்டு வருகிறது.

எனவே இவர்களின் முகங்களும், குரல்களும் எனக்கு வெறும் நோயாளிகள் கேட்பதாக தோன்றாது. அதன் பின்னால் மறைந்திருக்கும் அவர்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள், கனவு போன்றவைதான் எனக்குத் தெரியும்.

இவர்களின் வாழ்காலத்தில் கொரோனா தொற்று என்பது வெகு குறைவான காலமே வந்து போகிறது. ஆனால், நம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் சோதனையான இந்த காலகட்டத்தில் இருந்து அவர்களால் வெளி வர முடியும்.

ஆனால், அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாகலாம் என விரக்தியின் விளிம்புக்கு பல நோயாளிகள் செல்லும்போது அவர்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது மருத்துவர்களான நாங்கள்தான்.

அவர்களுக்கு ஆறுதலாக நம்பிக்கை கதைகள் பலவற்றை கூறுவோம். ஆனால், பலர் அவற்றை கேட்க ஆர்வமில்லாதவர்களாக இருப்பார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லா மருத்துவர்களுமே ஏதாவதொரு வார்டில் மும்முரமாகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய சக்தி முழுவதையும் செலுத்தி நோயாளி குணம் பெற பாடுபடுகிறோம்.

ஆனால், சில நேரங்களில் அந்த உழைப்பை செலுத்தியும் பயன் கிடைக்காமல் போகிறது. பேச சக்தியற்றவர்களாக பல நேரம் ஆகிறோம்.

பல வார்டுகளில் அலட்சியமாக இருக்கும் நோயாளிகளிடம் முக கவசம் அணியுமாறும் வழங்கப்படும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தும் மருத்துவ ஊழியர்களின் குரல்களை கேட்க முடிகிறது.

வார்டுகளில் கேட்கப்படும் குரல்களில் இது ஒரு வகை என்றால், மற்றொரு வகை - எங்களை திக்குமுக்காட வைக்கும் "'டாக்டர், நான் உயிர் பிழைப்பேனா?" என்ற கேள்வி.

அப்படி கேட்பவர்களிடம் எல்லாம் "நன்றாக முன்னேற்றம் காணப்படுகிறது. பாதிப்பு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறோம்," என்று ஆறுதலும் நம்பிக்கையும் தருவது எங்களுடைய கடமை. நோயாளியின் கடைசி மூச்சு உள்ளவரை அவரை உயிர் பிழைத்து உடல் நலனை தேற்றுவதே எங்களுடைய சேவை.

இன்றும் தீவிர சிகிச்சை வார்டுகளில் புதிய நோயாளிகள் வருகிறார்கள். ஒரே நிற முக கவசங்களுக்கு பின்னால் உள்ள முகங்கள் தான் மாறுகின்றன.

ஆனால், அவர்களில் பலரும் கேட்கும் அதே கேள்வி - "நான் உயிர் பிழைப்பேனா...டாக்டர்"

#ICUdiary 1: "நீ என் தாய் போன்றவள்" - மரணத்துடன் போராடியவரின் குரல்

நாம் முடிவே தெரியாத போர் களத்தில் போராடி வருகிறோம். இந்த போரில் பல வகை வைரஸ் தொற்று மட்டுமின்றி வேறு பல சிக்கல்களும் உள்ளன.

எங்களுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவரது ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்கும் கீழ் சென்றது. மேற்கொண்டு சிகிச்சையை தொடரவோ வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறவோ அவர் மறுத்தார்.

ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டபோதும், பேசுவதற்கு அவர் சிரமப்பட்டார். ஒரு முறை மூச்சை இழுக்கும்போது வெகு சில வார்த்தைகளையே அவரால் உச்சரிக்க முடியும். ஆனால், சிகிச்சையின் கடைசி சில வாரங்களில் அவரது மனோபாவம் மாறியது. ஆரம்பத்தில் என்னிடமும் செவிலியர்களிடமும் கோபப்பட்ட அவர், பிறகு அன்பாக பழகத் தொடங்கினார்.

எனது கரங்களைப் பற்றிக் கொண்டு தூங்குவதற்கு மருந்து தருமாறு கேட்டுக் கொள்வார்.

வங்க மொழியில் அவர், "நீ எனக்குஅம்மா மாதிரி," என்று கூறுவார்.

வயதில் இளையவர்களிடம் இப்படி சிலர் வாஞ்சையுடன் பேசி தமது அன்பை வெளிப்படுத்துவது உண்டு. அதுவும் மரணத்தின் பிடியில் இருக்கும்போது தங்களுடைய ஏக்கத்தை இப்படியும் சிலர் வெளிப்படுத்துவர்.

இவரது கணவரும் கொரோனா நோயாளியாக இருந்தார். அவரது உடல்நிலை தேறியிருந்ததால், அதே மருத்துவமனையில் வேறு வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். அடிக்கடி அவர் தனது மனைவியிடம் வயிறு தரை பக்கமாக இருக்கும் வகையில் சாய்த்து மூச்சுப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துவார். ஆனால், உடல் பருமனாக இருந்த அவருக்கு அது மிகவும் கடினமானதாக இருந்தது. ஒவ்வொரு முறை கணவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தன்னால் இயன்றதை செய்வதாக அந்த பெண்மணி செய்கை மூலம் காண்பிப்பார்.

அவரது கணவர் ஒவ்வொரு முறை என்னை பார்க்க வரும்போதும், தனது கரங்களை கூப்பி, "எனது மனைவியை காப்பாற்றுங்கள்," என கேட்டுக் கொள்வார்.

"என்னால் இயன்றவரை முயல்கிறேன்," என்று அவருக்கு நான் ஆறுதல் கூறுவேன்.

அந்த தருணத்தில் அவரது கண்களில் வேதனை நிரம்பியிருக்கும். சில நாட்கள் கழித்து அவரது கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால், தனித்தே புறப்பட்டார்.

"நீ எனக்கு அம்மா மாதிரி," என்ற அந்த பெண்மணியின் குரல் இப்போதும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. துக்கம் தாளாமல் சில நேரங்களில் அந்தக் குரல் எனது கண்களில் நீரை வரவழைப்பதுண்டு.

தொடரின் தயாரிப்பாளர்: விகாஸ் த்ரிவேதி/ பட வரைகலை: புனீத் பர்னாலா