மோதியை குறிப்பிட்டு பல லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்: பிபிசி புலனாய்வில் அதிர வைக்கும் தகவல்கள்

  • கீர்த்தி தூபே
  • பிபிசி செய்தியாளர்
விளம்பரம்
படக்குறிப்பு,

நாளிதழ் விளம்பரத்தின் பகுதி

இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்புவதாக நாளிதழில் முதல் பக்க பக்க விளம்பரம் கொடுத்த நிறுவனத்துக்கு முகவரி கூட கிடையாது என்பது பிபிசியின் புலனாய்வில் தெரிய வந்திருக்கிறது.

கடந்த வாரம் திங்கட்கிழமை "தி எகானமிக் டைம்ஸ்" மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளிதழ்களில் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியானது. இந்தியாவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய விரும்புவதாக ஒரு நிறுவனத்தின் பெயரில் அந்த விளம்பரம் வெளியாகி இருந்தது.

500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால், இந்திய மதிப்பில் சுமார் 36 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு இந்தியாவில் அமெரிக்கா ஒட்டுமொத்தமாகச் செய்திருக்கும் முதலீட்டின் மதிப்பே 7 பில்லியன் டாலர்கள்தான்.

விளம்பரத்தில் வெளியான முதலீட்டின் மதிப்பு அமெரிக்காவின் மொத்த முதலீட்டின் மதிப்பைப் போல 71 மடங்கு.

அந்த நிறுவனத்தின் பெயர் Landomus Reality ventures inc. விளம்பரத்தில் குழுமத்தின் தலைவர் பிரதீப் குமார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பணம் மிக, மிக அதிகம். பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நாளிதழ்களில் விளம்பரம். இவை எல்லாம் அசாதாரணமாக தென்பட்டதால் இது தொடர்பான புலனாய்வில் இறங்கியது பிபிசி.

பிபிசி புலனாய்வில் தெரியவந்தது என்ன?

பிபிசி முதலில் நிறுவனத்தின் https://landomus.com என்ற இணையதளத்தை ஆய்வு செய்தது. அந்த இணையதளத்தில் இருப்பது ஒரேயொரு பக்கம்தான். நாளிதழ் விளம்பரத்தில் என்ன கூறப்பட்டிருந்ததோ அது அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பொதுவாக நிறுவனங்களின் இணையதளங்களில் "About Us" என்ற பகுதியில் நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் இடம்பெறுவது வழக்கம். எந்தெந்தப் பகுதிகளில் நிறுவனம் இயங்கி வருகிறது என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இந்த இணையதளத்தில் இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் பிரமாண்டக் கட்டடங்களைக் கொண்ட புகைப்படத்தை முகப்புப் பக்கத்தில் கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் அணி என்ற தலைப்புடன் 10 பேரின் புகைப்படங்களும் அவர்களின்பதவிகளும் உள்ளன. ஆனால் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பிரதீப் குமார் சத்தியபிரகாஷ் என்பவர் தலைவர் மற்றும் சிஇஓ, மம்தா என்பவர் இயக்குநர் இவர்கள் தவிர மேலும் 8 பேரின் படங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு முகவரி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி எண் எதுவும் தரப்படவில்லை.

இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், நிறுவனத்தின் தொலைநோக்கு போன்ற விவரங்கள் இணையத்தில் இடம்பெறவில்லை என்பது அசாதாரணமாகப் பட்டது.

முகவரி சரிதான்; ஆனால் அலுவலகம் ஏதுமில்லை

இணையதளத்தில் உள்ள முக்கியமான ஒரே தகவல் நிறுவனத்தின் முகவரி. Landmus Reality Venture Inc., 6453, Riverside Station Boulevard, Sucaucus, New Jersey 07094, USA.

பிபிசி செய்தியாளர் சலீம் ரிஸ்வி அந்த முகவரிக்குச் சென்றார். அங்கு குடியிருப்புகள் மட்டுமே இருப்பதைக் கண்டார். தொடர்புடைய நிறுவனம் அல்லது வேறு எந்த நிறுவனத்தின் அலுவலகமோ அங்கு இல்லை. அங்கிருந்த ஒரு பெண்ணிடம் விசாரித்தபோது அங்கு இதுவரை எந்த அலுவலகமும் இயங்கவில்லை என்று தெரிவித்தார்.

அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதாகக் கூறிய லேண்டாமஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு சில கேள்விகளை பிபிசி அனுப்பியது. நிறுவனத்தின் சிஇஓ பிரதீப் குமார் சத்யபிரகாஷ் அதற்கு மிகச் சுருக்கமான பதிலை அனுப்பினார்.

"நாங்கள் இந்திய அரசுக்கு எங்களது விவரங்களை அனுப்பியிருக்கிறோம். பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.பதில் கிடைத்தவுடன் அனைத்து விவரங்களையும் உங்களுக்கு அனுப்புகிறோம். பொதுவெளியிலும் வெளியிடுகிறோம்" என அந்தப் பதிலில் சத்யபிரகாஷ் கூறியிருந்தார்.

முகவரி தொடர்பான கேள்விக்கு, "அமெரிக்காவின் நியூஜெர்சியில் நான் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நாளிதழில் வெளியான விளம்பரம் குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நிறுவனம் தொடர்பாக மேலும் ஆய்வு செய்தபோது, அந்த இணையதளம் கர்நாடகாவில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யுனைட்டட் லேண்ட் பேங்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

Landomus Realty Ventures என்ற பெயரில், பெங்களூரு முகவரியில் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகத்தில் 2015-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலதனம் ஒரு லட்சம் ரூபாய்.

கடைசியாக நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்திருப்பதாக கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு வரவு செலவுக் கணக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தியாவிலும் அலுவலகம் இல்லை

நிறுவனத்தின் ஆவணங்களின்படி பெங்களூரில் இருக்கும் அலுவலகத்தின் முகவரி S-415, 4th Floor, Manipal Centre, Dixon Road, Bangalore.

பிபிசியின் செய்தியாளர் இம்ரான் குரேஷி இந்த முகவரிக்குச் சென்றார். எஸ்-415 நான்காவது மாடி என முகவரியில் உள்ளது. ஆனால் அந்தக் கட்டடத்தில் நான்காவது மாடியில் அந்த நிறுவனத்தின் அலுவலகம் இல்லை. மாறாக ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட்டு வருகிறது.

ஆக, அமெரிக்காவிலும், பெங்களூரிலும் லேண்டமாஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை.

அதன் பிறகு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களைப் பற்றி பிபிசி ஆய்வு செய்தது. அதில் இந்தியர் அல்லாத ஒருவர் `ஆலோசகர்' எனக் கூறப்பட்டிருந்தது. அவரது பெயர் பமீலா கியோ.

அந்தப் பெயரைத் தேடியபோது LinkedIn தளத்தில் அவரது பெயருக்கும் புகைப்படத்துக்கும் சற்று நிகரான ஒரு நபரின் விவரம் கிடைத்தது. அந்தப் பெயர் பாம் கியோ. அவருடைய மின்னஞ்சல் முகவரி கேள்விகளை அனுப்பியிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை. பதில் கிடைத்ததும் இங்கே அதைப் பதிவு செய்வோம்.

மற்றவர்களில் ரக்ஷித், கங்காதர், குணஸ்ரீ பிரதாப் ஆகியோரின் விவரங்களும் LinkedIn உள்ளன. ஆனால் நீண்ட காலமாக அவற்றிலும் எந்தத் தகவலும் புதுப்பிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :