கொரோனா வைரஸ் சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறதா? நிபுணர்கள் கூறுவதென்ன?

  • மயங்க் பகவத்
  • பிபிசி மராத்தி
சர்க்கரை நோய்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு மத்தியில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். நல்ல உடல் நலத்தோடு இருந்தவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை கொரோனாவால் ஏற்படும் சர்க்கரை நோய் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

"கொரோனா தொற்றுக்குப் பிறகு, 10 சதவீதத்துக்கும் குறைவான கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளிடம் சர்க்கரை நோய் அறிகுறிகளைக் காண முடிகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயம் தான்," என்கிறார் மும்பை கே இ எம் மருத்துவமனையில் நீரிழிவு நிபுணராக இருக்கும் வெங்கடேஷ் சிவானே

புதிதாக சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா தான் காரணமாக இருந்திருக்கிறது என கண்டு பிடித்து, இருக்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா தொற்றால் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்?

கொரோனா தொற்று சர்க்கரை நோய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீராய்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதுவரை சர்க்கரை நோய் பிரச்னை இல்லாதவர்கள் கூட கொரோனா தொற்றுக்குப் பிறகு, உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று சர்க்கரை நோய் ஏற்பட காரணமா?

கொரோனா தொற்று ஏன் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக அமைகிறது என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ் சிவானே.

கொரோனா வைரஸ் நுரையிரலில் இருக்கும் ஏசிஇ 2 ரெசிப்டாரை பாதிக்கிறது. அதே போல கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் பீட்டா செல்களிலும் ஏசிஇ 2 ரெசிப்டார்கள் இருக்கின்றன. அதையும் கொரோனா பாதிக்கிறது. பீட்டா செல்கள் பாதிக்கப்படுவதால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

உடலில் இன்சுலின் சுரப்பு குறைவது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, இன்சுலின் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சர்க்கரை நோய் கண்டுபிடிப்பதில் மூன்று முக்கிய விஷயங்களை குறிப்பிடுகிறார் மருத்துவர் ராகுல் பக்‌ஷி.

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலும் நோயாளிகள், தாங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் சர்க்கரை நோய்க்கு பரிசோதிக்கும் போது சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

சிலரின் சர்க்கரை அளவு கிட்டத்தட்ட உச்ச வரம்பைத் தொட்டு இருக்கும். ஆனல் அவர்கள் சர்க்கரை நோயாளிக்ள் அல்ல. அவர்களை pre-diabetic என்பார்கள். அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் சர்க்கரை பரிசோதனை செய்யும் போது, அவர்களின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

சிலருக்கு HBA1C என்கிற சர்க்கரை பரிசோதனை அறிக்கையில் கடந்த 3 மாத காலமாக சர்க்கர அளவு சீராக, நன்றாகத் தான் இருக்கும். அவர்களது சர்க்கரை அளவு திடீரென அதிகமாக இருக்கும் என்கிறார் மும்பை மருத்துவமனையில் நீரிழவு நிபுணராக இருக்கும் ராகுல் பக்‌ஷி.

"கொரோனாவால் சர்க்கரை நோய் ஏற்படலாம் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் மீது கொரோனா வைரஸ் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம்," என்கிறார் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவராக இருக்கும் ஸ்வேதா புத்யல்.

"ஒவ்வொரு வாரமும், கொரோனாவுக்குப் பிறகு ஒரு சில நோயாளிகள் சர்க்கரை நோய் குறித்து மருத்துவமனைக்கு வந்து புகார் கூறுகிறார்கள்" என்கிறார்.

"கொரோனா வைரஸ் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த வைரஸ் அச்செல்களை தாக்குகிறது," என மூத்த நீரிழிவு நிபுணர் மருத்துவர் வி மோகன் என்டிடிவியிடம் கூறினார்.

"நான் கொரோனாவால் சர்க்கரை நோயாளி ஆனேன்"

பட மூலாதாரம், Getty Images

37 வயதான நிதின் பரத்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொரோனாவுக்குப் பின் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

"எனக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டது. எனக்கு சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் கொரோனா குணமடைந்த பிறகு, என் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதாக என் மருத்துவர் கூறினார். மூன்று வாரங்களுக்குப் பிறகு சர்க்கரை அளவை பரிசோதித்த போதும், என் சர்க்கரை அளவு குறையவில்லை. இப்போது நான் சர்க்கரை நோய்க்காக மருந்துகளை எடுத்து வருகிறேன்," என்கிறார் நிதின்.

கொரோனாவுக்குப் பிறகு ஏற்படும் இந்த சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் இருக்குமா?

மருத்துவர் வெங்கடேஷ் சிவானே மற்றும் அவரது அணியினர் கொரோனாவால் ஏற்பட்ட சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில கொரோனா நோயாளிகளின் சர்க்கரை அளவு 200 - 250 ஆக இருந்தது. சிலருக்கு 300 - 400 வரை கூட இருந்தது.

"குடும்பத்தில் யாருமே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத போதும், உடலில் சர்க்கரை அளவு சாதாரணமாக இருந்தவர்களும், கொரோனாவுக்குப் பிறகு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்," என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ் சிவானே.

"கொரோனா தொற்று காலத்தில், உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்த நோயாளிகளுக்கு, சில தினங்களுக்குப் பிறகு அவர்களின் சர்க்கரை அளவு குறைந்திருப்பதைக் கண்டோம். ஆனால் சிலருக்கு டைப் 2 சர்க்கரை நோய் போல, உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருந்தது."

"கொரோனாவுக்குப் பிறகு ஏற்படும் சர்க்கரை நோய் தொடர்ந்து வாழ்நாள் முழுக்க இருக்குமா என்பதை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும்," என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

ஸ்டீராய்டுகள் சர்க்கரை அளவை அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

ஆம், ஸ்டீராய்டுகள் நம் உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

"ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்," என்கிறார் மருத்துவர் ராகுல் பக்‌ஷி. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் இன்சுலின் கொடுப்பார்கள்.

"பல நேரங்களில் ஸ்டீராய்டுகள் கொடுப்பதை குறைத்த பிறகு அல்லது நிறுத்திய பிறகு கூட, சில நோயாளிகளின் உடலில் இருக்கும் சர்க்கரை அளவு குறையவில்லை. அதாவது அந்த நோயாளிகள் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பொருள். அவர்கள் கொரோனாவுக்குப் பிறகும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார் மருத்துவர் ராகுல்.

கொரோனாவுக்குப் பிறகு எதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

"உடலில் சர்க்கரை அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவது தான், கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் முக்கியமானது" என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ். அதற்கு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சர்க்கரை அளவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவில் இருந்து குணமான பிறகு, அடுத்த 180 நாட்களுக்குள் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும்.

70 - 180 என்கிற அளவுக்குள் சர்க்கரை அளவை வைத்திருக்க வேண்டும்.

HB1C என்கிற சர்க்கரை பரிசோதனையில் 7-க்குக் கீழ் இருக்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்தில் சர்க்கரை நோயளிகள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், NEHOPELON

"சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்திலும், சரியான அளவிலும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வயிறு நிறைய சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை என பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்," என்கிறார் வொக்ஹார்ட் மருத்துவமனையல் உட்சுரப்பியல் நிபுணராக இருக்கும் மருத்துவர் அல்தமஸ் ஷேக்.

சளி அல்லது காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் தக்காளி அல்லது கீரை சூப் எடுத்துக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

காலை உணவின் போது 2 அல்லது 3 முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடுவது நல்லது. கோழி இறைச்சி அல்லது மீன் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் வறுத்த அல்லது இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

போதுமான அளவுக்கு தண்ணீர் குடியுங்கள் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கொரோனாவுக்குப் பிறகான சர்க்கரை நோய் குறித்த ஆராய்ச்சி

லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தொற்று சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா? என ஆய்வு செய்கிறார்கள். இதற்காக, ஆராய்ச்சியாளர்கள் கோவிட்யாப் பதிவேட்டை உருவாக்கியுள்ளனர்.

"கொரோனா நோய்த்தொற்று காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதாச்சாரத்தை நாங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. நோய்த்தொற்றுக்குப் பிறகு நீரிழிவு நோய் இருக்கிறதா அல்லது மறைந்து விடுமா என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, இந்த பதிவேட்டை நாங்கள் தயாரித்துள்ளோம், இது தொடர்பான தகவல்களைக் குரிப்பிடுமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். " என்கிறார் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் கெளரவத் தலைவருமான பேராசிரியர் பால் சிம்மட்.

"சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகள் பற்றிய தகவல்களை அப்பதிவேட்டில் சமர்ப்பித்துள்ளோம். உலகளவில் 600 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என மூத்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி மோகன் என்டிடிவியிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :